இணைந்த இதயம்

Friday, December 30, 2011

கனிந்து சிவக்கும் காலச்சூரியன்


      இரா.தெ.முத்து
நவம்பர் புரட்சி தொடர்கிறது
புதிய களங்களில் புதிய சிகரங்களில்
சோவியத்தின் பின்னடைவை
சோசலிசத்தின் தோல்வி என்றும்
முதலாளியத்தின் வெற்றி என்றும்
கொள்ளிக்குடம் உடைத்து
கிள்ளிப்போடத் துடிக்கிறார்கள்

வரலாறு எப்பொழுதும் முன்னோக்கியே நகருமென்பதை
ஆத்திரத்தில் மறந்து போகிறார்கள்
கொலம்பஸின் கூட்டாளிகளும்
ஆடம்ஸ்மித்தின் அடிவருடிகளும்

நாடுவிட்டு நாடு தாண்டுதலில்
கண்டம் விட்ட கண்டம் தாவுதலில் இருக்கிறது
மத்தியக்கால சாம்ராஜ்யங்களை
உருவாக்கத்துடிக்கும் யுத்த வியாபாரிகளின்
உயிர்த்தலம்

புதுப்புது வடிவில் வெடிக்கும்
இங்கிலாந்துப் போராட்டங்களும்
ஐரோப்பிய வீதிகளில் கொட்டப்படும் பாலில்
தெறிக்கும் ரௌத்ரமும்
ஆசியான் ஒப்பந்தத்தை எதிர்த்த
கேரள ஆவேச அணிவகுப்பும்
தங்கள் வாழ்வாதாரங்களின் மீது
படரும் ஏகாதிபத்திய ஆக்டோபஸை
எதிர்த்துயர்ந்த எக்காளங்கள்

ஒபாமாவாலும் உருப்படாத அமெரிக்காவின்
மீட்புநிதிமீட்சியை நோக்கி நகர்தல்
என்பதெல்லாம்
மூச்சுத்திணறும் முதலாளியத்தின்
குழறல் வார்த்தைகளாகவே ஒலிக்கின்றன

மூலதனத்தை வாசியுங்கள் என்று
புனித போப்பாண்டவர் சொல்வதும்
நூற்றாண்டின் மாமனிதர் காரல்மார்க்ஸ்
என தேர்வு செய்யப்படுவதும்
கம்யூனிசத்தின் தேவையை
ஒப்புக்கொள்ளும் வாக்குமூலங்கள்

நவம்பர் புரட்சியின் பெரும்பாதையில்
சீனாகியூபாவோடு கரம் கோர்த்த
வடகொரியாவியட்நாம்வெனிசுலா
பொலிவியாநிகரகுவா
கார்ப்பரேட் ஊடகங்களின் கணக்குகளை
கலைத்துப் போட்டு எழுதிச் செல்கின்றன

புதுயுக மனிதர்களின் புதிய பண்பாட்டை
தகர்த்தெறியப்பட்ட லெனின் சிலைகளினூடாக
ஆப்கன் நஜிபுல்லா செக் செசன்கோவ் உயிரை
முட்டை ஓட்டை உடைத்து உறிஞ்சுவது போலும்
கொன்றழித்த எதிரிகளின் தற்போதைய தோல்விகளுக்கு
என்ன மாதிரி பரிசளிக்கப் போகிறது உலகம்?

மீண்டெழும் புரட்சியை வெற்றிலைக் காம்பென
கிள்ளி எறிந்துவிட முடியுமா?
பெரும்பான்மையோர் சூடிக்கொள்ளும் விடுதலையை
நிதிமூலதன மூதேவிகளால் மூடியிட இயலுமா?

பேரண்டம் தழுவிய தொழிலாளர் எழுச்சியை
கழுகுகள் எதிர்கொண்டு நிற்குமா?
அடடா அடடாவோ திக்குகள் விடிய
கனிந்து சிவக்கும் காலச் சூரியனை
உள்ளங் கைக்குள் ஒளித்து வைக்க முடியுமா?

2 comments:

  1. சிந்திக்க வேண்டிய கேள்விகள்...

    வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்... (http://blogintamil.blogspot.in/2013/02/blog-post_6089.html)

    ReplyDelete