இணைந்த இதயம்

Wednesday, December 28, 2011

அரவிந்த் அடிகா யாரின் ஊதுகுழல்? -


இரா.தெ.முத்து

ஒயிட் டைகருக்காக புக்கர் பரிசுப் பெற்ற, last man in the tower எனும் சமீபத்திய நாவலாசிரியருமான, சென்னைக்கு முந்தைய மெட்ராஸில் பிறந்த அரவிந்த் அடிகா ஆங்கில இந்தியாடுடெ இதழில்(2010டிச20) சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எனும் கட்டுரை எழுதி இருந்ததை நண்பர் அமுதரசன் சொன்னதின் பேரில் படிக்க நேர்ந்தது.
அதில் தென்கன்னட உடுப்பி பிராமணர்கள்(ராவ்,பட்,ஆச்சார்யா) பிரிட்டிஸ் காலத்தைய மெட்ராஸில் உட்லேண்ட்ஸ்,தாசபிரகாஸ் போன்ற ஒட்டல் தொழிலை வெற்றிகரமாக நடத்தியதையும் சுதந்திரத்திற்க்கு பிந்தைய ஆண்டுகளில் தி.மு.கழகத்தால் தம் சமூகம் புறக்கணிக்கப்பட்டதை, தமிழ்ப் பிராமணர்களாலும் எதிரிகளாக பார்க்கப் பட்டதை பதிவு செய்திருக்கிறார்.

இன்னாட்களில் பிரபலமான உடுப்பி ஒட்டல்கள் மூடபட்டுக் கிடப்பதாகவும் சென்னையிலிருந்து உடுப்பி பிராமணர்கள் வெளியேற நேர்ந்ததையும் எஞ்சிய பலர் தங்கள் பெயரோடு சாதியை குறிப்பிட பயப்படுவதாகவும் சொல்லி இறுதியில் செக்கோஸ்லேகியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜெர்மானியர்களைப் போல ,ஜெர்மெனியிலிருந்து துரத்தப்பட்ட யூதர்களைப் போல சென்னையிலிருந்து தாங்களும் துரத்தபட்டோம் எனச் சொல்லி வாசகர்களிடம் ஓர் அதிர்வை ஏற்படுத்த முயலுகிறார் அரவிந்த்.

பன்னாட்டு மூலதனங்கள்,வெளிமாநில மூலதனங்கள் திரட்சியாக இயங்குகின்ற, முன்னை விட கல்வி அறிவுப் பெற்றுள்ள மெட்ரோபாலிடன் சிட்டியாகி உள்ள இன்றைய மாநகர சென்னையில்- தமிழர்களுக்கு கிடைத்த மாநிலம் தாண்டிய வேலைவாய்ப்புகள்-இந்திய அளவில் தொழில் தொடங்க வாய்ப்புகள் பெற்ற மாநிலத்தின் தொழில் வர்க்கம் -இவர்களின் கைத்தடிகளான மாநில கட்சிகளுக்கு மத்திய அதிகாரத்தை ருசிக்க கிடைத்த வாய்ப்புகளினால் 70 களில் சென்னையில் நிகழ்த்தியதைப் போல கன்னடர்களுக்கு எதிரான,கேரளீயர்களுக்கு எதிரான வன்மத்தை மீண்டும் நிகழ்த்த இயலாது.

தமிழ்நாட்டின் புதிய முதலாளிகளான சரவணபவன்,வசந்தபவன் சென்னையில் பரவலாக ஓட்டல் தொழில் நடத்தினாலும் இவர்களுக்கு குறைவில்லாத வகையில் கன்னட உடுப்பி பிராமண முதலாளிகளும் உட்லேண்ட்ஸ்,நியூ உட்லேண்ட்ஸ், முருடீஸ்,சுதா, வெல்கம், டாடா போன்ற பெயர்களில் வெற்றிகரமாக தொழில் நடத்தி வருகிறார்கள்.இதில்லாமல் திரைஅரங்கு,சட்டம்,மருத்துவம் போன்றவைகளிலும் கால் பதித்து நிற்க்கிறார்கள்.

உள்ளூர் சந்தையில்,உலகச் சந்தையில் தனக்கான இடத்தைப் பிடிக்க முயலும் முதலீட்டாளர்கள்-சந்தையில் ஏற்கனவே இடம் பிடித்து விட்ட நிறுவனங்களை எதிர்த்தோ அல்லது நிலை பெற்று விட்ட நிறுவனங்கள் தன் போட்டியாளர்களை ஒழிக்கும் பொருட்டோ தங்கள் கைத்தடிகளான மாநில கட்சிகளை,இனப்பார்வை கொண்ட அமைப்புகள் வழியாக தாக்குதலை நிகழ்த்துவது உலகெங்கும் காணப்படுகின்ற முதலாளித்துவக் குணம்.

பின்னணியிலுள்ள இந்த வர்க்க குணத்தை காணத்தவறி மொழி எதிர்ப்பு,இன எதிர்ப்பு என மேலோட்டமாக பார்த்தல்; யாரை நோக்கி எதிர்ப்பை மையப்படுத்த வேண்டுமோ அவ்வாறில்லாமல் வட்டார அமைப்புகளுக்கு எதிர்நிலை எடுத்து ,திசை மாறி தமது வர்க்கப் பாசத்தை காக்க எழுதித் தள்ளுகிறார்..ரிலையன்ஸ் உடனான போட்டியை எதிர் கொள்ள முடியாமல் அல்லது தங்கள் தொழில் இழப்பை சமாளிக்கவே தாசபிரகாக்ஷ் ரிலையன்ஸ் வசம் மாறியது என்பதே உண்மை.

உலகளாவியத் தொடர்பும் கல்வியறிவும் பெற்ற ஒரு சமூகம் உள்ளீட்டளவில் மோத வேண்டிய பல அம்சங்களை கொண்டிருந்தாலும் தன் வளர்ச்சிப் பாதையில் சில சரியான முன்னகர்த்துதல்களை செய்யும். இவ்வாறான நகர்த்துதல்கள் காரணமாக நவயுகத் தமிழர்கள் தம் பெயரின் பின்னுள்ள சாதி ஒட்டை துறந்திருக்கிறார்கள்.இதன் காரணமாகவோ அல்லது தமக்கான விழிப்புணர்வு காரணமாகவோ இன்றைய சென்னைவாழ் உடுப்பிக் காரர்களும் தம் பெயரின் பின்னால் உள்ள சாதி ஒட்டை தவிர்த்திருக்கலாமே அன்றி சென்னையில் தாக்கப் படுவோம் எனும் அச்சம் காரணமாக இல்லை.தாக்கப்படுவதற்கான எந்த முகாந்திரமும் இன்று இல்லை.

பல மாநில மக்கள் இன்று சென்னையில் நேசத்தோடு ஒன்றாய் கலந்து வாழ்கிறார்கள்.தசராவும்,ஓணமும்,ஹோலியும் இதைத்தானே உணர்துகின்றன. தி.க.வோ,தி.மு.க வோ இன்றைய பா.ம.க ,விடுதலை சிறுத்தைகளோ 70 களுக்கு சென்னையை கொண்டு செல்ல இயலாது.நாடு முழுவதும் பரவி தொழில் செய்யும் தொழிற்ச்சூழலும்,சனநாயக சக்திகளின் வளர்ச்சியும் மக்களின் ஒன்றுபட்ட வாழ்வை சாத்தியமாக்கி உள்ளன.இந்த சூழலை உள்வாங்கிக் கொள்ளாத அடிகா ஏதேதோ புலம்புகிறார்.இவரை உடுப்பிகாரர்களின் ஊதுகுழல் என்பதைவிட முதலாளித்துவக் காரர்களின் ஊதுகுழல் எனச் சொல்லலாமா?

No comments:

Post a Comment