Monday, August 1, 2011

வைகுண்டரின் சமயத்தமிழ்

ஓர் அறிமுகம்
‘ஆயுங்கலைத் தமிழும் அறிவொன்று போல் பரவும்
நம்மனுவோர் தர்மபதி நாளும் மிகத் தழைக்கும்’
(அகிலத்திரட்டு பக்கம் 152)1

இன்றைய தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்தைச்
சார்ந்த சாமிதோப்பு ( சுசீந்திரம் அருகே ) அன்றைய திருவிதாங்கூர்
சமஸ்தானத்தின், நாஞ்சில் நாட்டின் தென்பகுதியான சாஸ்தாங்கோவில்விளை என்று
அழைக்கப்பட்ட குக்கிராமத்தைச் சார்ந்த பொன்னுநாடார் – வெயிலாள்
தம்பதியருக்கு “இரண்டாவது ஆண் குழந்தையாகப் பிறந்தவர்”2
முடிசூடும்பெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட அய்யா வைகுண்டர் ( 1809 – 1851
).
வைதீக மதத்தால் சூத்திரசாதி என இழித்தொதுக்கப்பட்ட பனையேறும் சாணார்
( நாடார் ) சமூகத்தில் முடிசூடும்பெருமாள் என சூட்டப்பட்ட பெயர் அடிமைச்
சாதிக்குரிய அடையாளத்தோடு இல்லாமல் இருப்பதை அறிந்த உயர் சாதியினர்,
சமஸ்தான அதிகாரிகளின் அச்சுறுத்தலால், முத்துக்குட்டி என பெற்றோரால்
திருத்தி வைக்கப்பட்டு பின்னர் பரவலாக அறியப்பட்ட அய்யா வைகுண்டர்
தமிழகச் சீர்திருத்தவாதிகளின் முன்னோடி ; மட்டுமல்ல இந்திய சமூகச்
சீர்திருத்தவாதிகளின் முன்னோடியும் கூட.
“ஆரிய சமாஜ தயானந்த சரஸ்வதி ( 1824-1883 ) மராட்டிய ஜோதிபாபூலே ( 1827
1890 ) கேரளத்தின் நாராயணகுரு“3 ( 1854-1928 ) நமது வள்ளலார் ( 1823 1874
) தந்தை பெரியார் ( 1879-1973 ) என கால அளவிலும், சிந்தனை அளவிலும் அய்யா
வைகுண்டர் முன்னோடி ஆவார்.
தான் நம்பும் இறையை எல்லாம் வல்லது என்றும், எங்கும் உறைந்தது,
இயற்கையாய் இருப்பது என்றும், தலைமையாய், தொண்டராய், காதலாய் அமைந்தது
என்றும் ஊனுருகப் பாடிய பாடல்களை பக்திகால சமயத் தமிழ் வாயிலாகப்
படித்திருக்கிறோம்.
ஆனால் வைகுண்டரின் சமயத்தமிழ் இதிலிருந்து வேறுபட்டது. இறையைப் பாடுவது
மட்டுமல்ல வைகுண்டரின் பணி. மக்களின் துன்ப துயரங்களை இறைமுன்பு
வைத்துப்பாடுவது, எடுத்துச் சொல்வது மட்டுமன்று, வாழும் காலத்து நிறை
குறைகளை விமர்சித்து, புதிய மரபை புதிய பண்பாட்டை சமயத்தின் வாயிலாக
சமயத்தமிழாய் வடித்தெடுத்தவர் வைகுண்டர் ; இன்னொரு கோணத்தில் பார்த்தால்
இது சித்தர்களுக்கு அடுத்து சமயத்தமிழில் ஒலித்த ஒடுக்கப்பட்டவர்களின்
குரல் ; வைதீக அதிகாரப்போக்கிற்கு எதிரான போர்க்குரல்.
வைகுண்டரின் படைப்புகள்
“முறையான கல்வி அறிவு பெற மறுக்கப்பட்ட வைகுண்டர் சாமித்தோப்பில்
பெரியவர் ஒருவரிடம் பகுதிநேர திண்ணைக் கல்விப் பயின்றார்.”4
இவரின் படைப்புகளான அகிலத்திரட்டு, அருள்நூல், வைகுண்டர்
ஞானமடைந்ததற்குப் (1833) பிறகு எட்டாண்டுகள் கழித்து ( 1841 ) அவர்
வாய்மொழியாய் சொல்லச் சொல்ல “அவரின் ஐம்பெரும் சீடர்களுள் ஒருவரான
தென்தாமரைக்குளம் இரா.அரிகோபாலன் இயற்றி இருக்கிறார்.“5
இவ்விரு நூல்கள் இயற்றப்பட்டு 170 ஆண்டுகள் கடந்த பின்னரும் இதன்
கருத்துக்கள், இதன் உணர்வலைகள் இன்றும் அலையடித்துக் கொண்டிருக்கின்றன.
“வைகுண்டரின் படைப்புகளில் குறிப்பாக அகிலத்திரட்டில் சிவபுராணக் கதைகள்,
திருவிளையாடல் புராணக்கதைகள், பெரியபுராணக் கதைகள், ராமாயணம், மகாபாரதம்,
கந்தபுராணம் ஆகியவற்றின் கதைகள் நேரடியாகவோ மேற்கோளாகவோ
காட்டப்படுகின்றன.“6
இதன் மூலம் திண்ணைக் கல்வியைத் தாண்டி ஒரு விரிவான வாசிப்பு வைகுண்டரிடம்
இருந்ததை கவனிக்க முடிகின்றது.
தனது நூற்பழக்கத்தின் வாயிலாகக் கிடைத்த அறிவை, தனது நோக்கம்,
குறிக்கோளைச் சொல்வதற்கு பயன்படுத்திக்கொண்டார். இதன் வாயிலாக சமயத்
தமிழுக்கான ஒரு புதிய திறப்பு ஏற்பட்டது.
படைப்பு மொழி
அகிலத்திரட்டு, அருள்நூல் இயற்றப்பட்டு பின் வந்த இறுதி பத்தாண்டுகளில் (
1841-1851 ) வைகுண்டர் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. சொந்த
வாழ்வில் பெற்ற சமூக, வாழ்வியல் அனுபவங்கள் ; சூத்திர சாதியில் பிறந்து
ஆன்மீகத்தில் ஈடுபட்டமைக்காக உயர்சாதியோடும், அரசோடும் நிகழ்ந்த மோதல்கள்
; பெற்ற சிறைக் கொடுமைகள் ; சமூகத்தில் பெரும்போக்காய் அமைந்த
போலித்தனங்கள், ஏற்றத்தாழ்வுகள், மக்களிடம் வளராத விழிப்புணர்வு, குவிந்த
அச்சம், மூடப்பழக்க வழக்கங்கள் போன்றவைகளின் பாதிப்புகளால், உணர்வுகளால்
வைகுண்டரின் படைப்பு மொழி ஆங்காரமாகவும், ஓங்காரமாகவும், அன்பாகவும்,
அறிவுரையாகவும், கையறுநிலையானதாகவும் இருப்பதை இவர் படைப்புகள் வழி
உய்த்துணர முடிகின்றது. மேலும்,
“நடைமுறையில் இருந்த சமஸ்கிருத வழிபாட்டுப் பாடல்களை அய்யா வைகுண்டர்
ஏற்கவில்லை. புரியாத மொழியில் தெரியாத ரீதியில் செய்யும் வழிபாட்டை அவர்
விரும்வில்லை. உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாழப்படிப்பு, கல்யாண
வாழ்த்துப் போன்ற தமிழ்மொழி வழிபாட்டுப்பாடல்களே லட்சக்கணக்கான அய்யாவழி
மக்களால் படிக்கப்படுகின்றன. அய்யாவின் பாடல்கள், அவர் வாழ்ந்த
வட்டாரத்தின் மொழியாகவும், அடித்தள மக்களின் பேச்சு மொழியாகவும்
அமைந்திருந்தது“.
உச்சிப்படிப்பு நண்பகல் வழிபாட்டின் பொழுது பாடப்படுகின்ற அய்யாவின்
அருள்மொழி ஆகும். உகப்படிப்பு மாலை வழிபாட்டிற்கான அருள்மொழி.
வாழப்படிப்பு, அய்யா வைகுண்டரால் சான்றோர் குலமக்கள் எனச்
சொல்லப்படுகின்ற இம்மக்கள் திரளை நன்றாக வாழுங்கள் ; புகழ்பெற வாழுங்கள்
என அய்யாவின் மொழியால் வாழ்த்துகின்ற பாடலாகும்.
கல்யாண வாழ்த்து, பிராமணர் இல்லாமல் சான்றோர் குலமக்களின் மூத்தவர்
குருவாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்கும் பொழுது அவர்பாட,
திருமணத்திற்கு வந்தோர் திருப்பிச் சொல்கின்ற பாடல் ஆகும்.

“ தெய்வச் சான்றோர்கள் நன்றாய் தழைத்துவாழ
கோத்தி ரத்து சான்றோர்கள் நம்முடைய
குடும்பத்தார்கள் நன்றாய் தழைத்துவாழ
கோட்டைத்தளம் மதிலிடித்து வாழநம்முடைய மக்கள்
கோடிச் சீமைக்கட்டி அரசாள வாழ
ஆல்போலே தழைத்து வாழ நம்முடைய
ஐவர்மக்கள் சீமைக்காட்டி அரசாள வாழ
பயலுடைய தரமறுத்துப் பண்டாரஞ் சீமையாள
மக்கள் நன்றாய் தழைத்துவாழ “
வாழப்படிப்பு – (அருள்நூல் பக்கம் 9)7
கோட்டைத்தளம் ; திருவாங்கூர் அரசு அதிகாரம்
ஐவர்மக்கள் ; அய்யாவின் சீடர்கள் ஐந்துபேர்
பண்டாரஞ்சீமை ; அய்யாவின் இயக்க வழி
வைகுண்டரின் மொழி, பெண்களை கவனத்தில் கொண்டு பேசுகிற மொழியாகவும்
இருக்கிறது. அவர்கள் உயர்வடைய வேண்டும், சமத்துவமாக நடத்தப்பட வேண்டும்
என்றும் பாடுகிற மொழியாகவும் இருப்பது சமயத்தமிழ் காண்கிற புதுத்திறப்பு
ஆகும்.
பெண்கள் குறித்து அவர்கள் அறிவு குறித்து பேசும்பொழுது,
“கல்கதவு போலே கற்பு மனக்கதவு
தொல்கதவு ஞானத் திறவுகோல்“ (அகிலத் திரட்டு பக்கம் 9)8
என கவித்துவமாக சொல்வது சமயத்தமிழ் சந்திக்கின்ற புதிய களம்தானே.
கவிதையும் கருத்தும்
அகிலத்திரட்டு 15600 வரிகளும், அருள்நூல் 2400 வரிகளும் கொண்டது. ( 1989
ஏப்ரல் பதிப்பு, 1988 மே பதிப்பு ) “இதில் சுவாமிகள் வாழ்க்கை வரலாறும்,
அவரது பணிகளும் விளக்கப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில்
அடித்தட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் விவரிக்கப்பட்டு, அவை
ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்கிறது.
இரண்டு “அருள்நூல்“ என்பது. இது அம்மானையில் கூறப்படும் செய்திகளை
உறுதிப்படுத்துவதுடன், சுவாமிகள் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத்
தொகுத்துத் தருகின்றது. அத்தோடு சுவாமிகளைப் பின்பற்றுவோர் கடைபிடிக்க
வேண்டிய ஒழுக்க நெறிகளையும் சுவாமிகளின் அறிவுரைகளையும் கொண்டுள்ளது.“9
அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ( காலச்சுவடு 2009 )
நூலின் முன்னுரையில் ( பக்கம் 34, 39 ) இதன் பதிப்பாசிரியர்
அ.கா.பெருமாள் எழுதுகிறார்; “அகிலத்திரட்டு இது ஞானம் பெற்ற ஒருவரின்
வாய்மொழிச் செய்தி. இந்நூலை இரண்டு பெரும் பகுதிகளாகப்
பகுத்துக்காட்டலாம்.
முதல்பகுதி ; அய்யாவின் காலம் வரையான உலகின் அதர்மத்திற்கு எதிரான
வரலாறு, புராணம் வழி விளக்கப்படுகின்றது.
இரண்டாம் பகுதி ; அய்யாவின் சமகால கலிநீசனின் ( திருவாங்கூர் மன்னர்
சுவாதித்திருநாள் 1812-1847 )வரலாறும் கொடுமையும், அதர்மத்திற்கெதிராக
அவர் கொடுத்த குரலும் விளக்கப்படுகின்றது.
அகிலத்திரட்டின் மொத்த பகுதியிலும் அய்யா வைகுண்டர் திருமாலின் அம்சமாகக்
கொள்ளப்படும் கருத்து இழையோடுகிறது. மட்டுமின்றி சிவம் + தாணு =
சிவதாணுவை விதந்தோதுகின்ற சைவ-வைணவ சமரசச் சிந்தனை அகிலத்திரட்டு
எங்கிலும் காணலாம்.
அகிலம் கூறும் தன்மானம் என்பது சுயமரியாதையை, வெளிப்படையான
அடிமைத்தளையிலிருந்து விடுபடுவதை சுயமரியாதை காட்டும்.“
” பாழிலேச் சான்றோர்க்குப் படுனீசன் கொள்ளுகின்ற
ஊழியங்களெல்லாம் உரைக்கக் கேளன்போரே
பனை கேட்டடிப்பான பதனீர் கேட்டேயடிப்பான்
கனத்தக் கற்கண்டு கருப்புக்கட்டி கேட்டடிப்பான்
நாருவட்டியோலை நாள்தோறுங் கேட்டடிப்பான்
வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான் ”
(அகிலத்திரட்டு பக்கம் 117) 10
படுனீசன் = திருவாங்கூர் மன்னர்
நாருவட்டி = பனைநார், ஓலையால் செய்யப்படும் பெட்டி




அருள்நூலில் வழிபாட்டுப் பாடல்கள், வழிகாட்டும் பாடல்கள், வைகுண்டரின்
அனுபவங்கள், சீடர்களுக்குச் சொன்ன அறிவுரைகள், கல்யாண வாழ்த்துப்
பாடல்கள் என இடம்பெற்றுள்ளன.
அகிலத்திரட்டில் ஒலித்த அய்யாவின் போர்க்குரல், அருள்நூலில் அறிவுரையாக
திரிந்து ஒலிக்கிறது. கோபம் கூடாது, சட்டத்தை மீறக்கூடாது, பொறுமையாக
வாழுங்கள் என்பதாக ஒலிக்கிறது,
இதிலேதான் வைகுண்டரின் மனதை வருத்தும் கவலை, வாழ்ந்த காலத்தில் ஆதரவு
திரளாத சூழல், சமூகத்தின் கிண்டல், எள்ளல், தவவாழ்க்கை மீதான விரக்தி,
தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக வெளிப்படுத்தும் அறிகுறி
போன்றவைகள் பதிவாகி இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக,
“வருத்தினோம் அம்மானைத்தன்னில் மானமாய்ப் புதியதாக
கருத்தினுள்ளகமே கொண்டு கவனித்தோர் அவர்க்கேதக்கும்
உருத்தில்லா கேட்போராகில் ஓருரைவெளியே காணார்
சிரித்துரை கேட்போ ரெல்லாம் சிவப்பொருள்வெளியே காண்பார்“
( அருள் நூல் பக்கம் 7 )11

அம்மானைவழி சொல்லப்படும் அகிலத் திரட்டுச் செய்திகளை உள்ளத்தில் ஏற்று
கவனித்து நடப்பாருக்கு நல்லது நடக்கும் என்றும் ; அக்கறை இல்லாமல்
கிண்டல் செய்வோர் சிவப்பொருளை அறிய முடியாது என்றும் ; குறை இல்லாமல்
கேட்போர் சிவப்பொருளை தன்னுள் அறிந்து கொள்வார் என்பதே இதன் விளக்கம்.

“எப்போது கூவுமென்று இருக்குதே யெந்தன் நெஞ்சு
இன்னும் விடியல்லையோ சிவனே அய்யா“
( அருள் நூல் பக்கம் 21 )12

“ஒருமுத்துலோகமுத்து இந்த உலகமெங்கும் பெருத்தமுத்து
ஏகமுத்து நாகமுத்து எங்கும்முழு முத்தானேன்
வையகமெல்லாம் முத்தாச்சு அதைவகையறிவாரில்லையப்பா
காடெங்கும் கனத்தமுத்துஅதை கண்டெடுப்பார்யாருமில்லை
சத்துள்ளமுத்தப்பா அதுவுங்கள் சகலவினை தீர்க்கும்முத்து
பக்தியுள்ள முத்தப்பா அதுவுங்கள் பதியேறும்அந்தமுத்து
கண்டவர்எடுத்திடுங்கோ உங்கள்காரணத்தெய்வமப்பா“
(அருள்நூல் பக்கம் 39 )13
வைகுண்டரின் இயற்பெயர் = முத்துக்குட்டி

“நஞ்சுதின்று நாளாச்சு நான்மறையப்போறேனடா“
( அருள்நூல் பக்கம் 39 )14

“கும்பி கொதிக்குதடா எனக்கினி குடியிருக்கலாகாது
போவேன் கைலாசம் பின் ஆடிமாதத்திலே“
( அருள்நூல் பக்கம் 40 )15

கவிதையும் வடிவமும்
படைப்பு ஒன்று எந்த நோக்கத்திற்காகப் படைக்கப்படுகிறது? யாரை நோக்கி அது
பேசுகின்றது ? அவர்களின் புரிதல் என்ன? போன்றவைகளையெல்லாம் கவனித்து
படைப்பின் வடிவம் எதுவாக இருக்க வேண்டும் என்கிற புரிதல் படைப்பாளியைவிட,
சமூகத்தோடு ஊடாடுகின்ற, தொண்டூழியம் செய்கின்ற ஆளுமைகளுக்கு அதிகம்
தேவைப்படுகின்றது. தமது கருத்தை கொண்டு செல்கின்ற ஊடகம், சிக்கலாக
இருந்தால் பரந்துபட்ட மக்களை சென்றடைய இயலாது; கருத்து பௌதீக சக்தியாக
மாறி வெல்லற்கரியதாக நிலவாது என்பதினால் வடிவம் மீது படைப்பைப் போலவே
அதீத கவனம் தேவைப்படுகின்றது.
கல்வி கற்க வாய்ப்பில்லாத, சாதாரண உழைப்பாளி மக்களுக்கு புரியும்
வகையில், அவர்களுக்குப் பழக்கப்பட்ட நடையில், மொழியில், இசையில் தனது
அருள்வாக்கு அனுபவங்களை வைகுண்டர் பதிவு செய்திருக்கின்றார்.
பெண்களின் ஓய்வு நேர விளையாட்டான “அம்மானைப்பாடல் பிற்காலத்தில்
நாட்டுப்புற இலக்கியத்தில் பெரும் இடத்தை பிடித்துக்கொண்டது. பேச்சு
வழக்குச் சொற்கள், கூறியதை மீண்டும் கூறல், சொற்றொடர் மீண்டும் மீண்டும்
வருதல் அம்மானைப் பாடல்களின் இயல்பு.
அகிலத் திரட்டு, அம்மானை வடிவிலானது. வில்லிசை கதைகளுக்குறிய பாடல்களும்
அம்மானை வடிவிலேயே உள்ளன. இவை பெறுமளவில் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே
கிடைக்கின்றன. திருநெல்வேலி பகுதியில் 19ஆம் நூற்றாண்டில் அம்மானை வடிவம்
பரவலாய் அறியப்பட்டிருக்கின்றது. அகிலம் இந்த வடிவத்தின் வீச்சை
முழுதுமாய் பயன்படுத்தி இருக்கின்றது.
தன்முன் நிற்பவரை நோக்கி இதை கேட்பாய் என்று கூறும் அமைப்புடையது.
அகிலத்திலும் இதை காணலாம். தனக்கு முற்பட்டவற்றையும் மேற்கோள்
காட்டும்பொழுதும் முன்னோர் பாடினர் அம்மானை என்றும், முன்னே இருப்பவரிடம்
நான் கூறுவேன் கேள் அம்மானை என்றும் சொல்லும் நாட்டுப்புற மரபு
அகிலத்திலும் வருகின்றது.
அகிலத்திரட்டு 1939இல் தான் அச்சில் வந்திருக்கின்றது. அகிலத்திரட்டு
அம்மானை, வில்லிசை அம்மானைப் பாடல்களைப் போலவே காப்பு, அவையடக்கம், நூல்
சுருக்கம் என அமைந்துள்ளது. அகிலத்திரட்டின் காப்புப் பாடலில் நாராயணன்,
சிவன் இருவரும் வருகின்றனர். நூல் சுருக்கதில் வைகுண்டர்
திருச்செந்தூரில் ஞானம்பெற்ற நிகழ்வு குறிப்பிடப்படுகின்றது.“ 16
அகிலத்திரட்டின் காப்புப்பாடல் ;
‘‘ஏரணி மாயோன் இவ்வுலகில் தவசு பண்ணி
காரணம் போல் செய்த கதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன் சொல் தமிழ்க்குதவி
எனத் தொடங்கி
சிவமேசிவமே சிவமே சிவமணியே
தவமேதவமே தவமே தவப்பொருளே, என வளர்ந்து
எழுதுவேனென்றதெல்லாம் ஈசணருள் செயலால்
பழுதொன்றும் வாராமல் பரமேசொரி காக்க
ஈசன் மகனே இயல்வாய் இக்கதைக்கு
தோசமகலச் சூழாமல் வல்வினைகள்
காலைக் கிரகங் கர்ம சஞ்சலமானதுவும்
வாலைக் குருவே வாராமலே காரும்“ 17

அழகியல்
படைப்பின் உள்ளீடு, உள்ளுணர்வு ஒட்டியே அதற்கான அழகியல் அர்த்தம்
கொள்கிறது, சொற்கோலமாய், இசைக்கோலமாய், உத்திவகையாய்,
காட்சிப்படுத்துதலாய் இருக்கிறது அழகியல்.
வைகுண்டரின் படைப்புகள் அம்மானை, வில்லிசை என நாட்டார் இசைக்கோலத்தில்
வடிவங்காட்டுகின்றது.
வைகுண்டரின் படைப்புகளை பதம் பிரித்து வாசித்தாலோ, தெரிந்த தாளக்கட்டோடு
பாடி பார்த்தாலோ, இதன் அருமை புரியும்.

“உயிர்த் தோழமைபோல் உறவு கொண்ட நாரணரே
மெய்த் தோழமையை விட்டு பிரிந்தது முதல்
பிரிந்து மலைந்தேன் பச்சை நிறமாலே“ 18
இவ்வரிகளின் உணர்வுக்கேற்றார்போல் நாம் வாசிக்கையில், நமக்கு பழக்கமான
சந்தம், தாளம் இணைந்து கோலம் காட்டி நிற்பதை உணரமுடியும்.

“சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய்
சிவசிவா தானானோம் தானானோம் தானானோம்
சிவசிவா நானானோம் நானானோம் நானானோம்
சிவசிவா தந்தநன்னம் தந்தநன்னம் தந்தநன்னம்“ 19

இங்கு சிவசிவா என்பது வெவ்வேறு சொற்களிலான அளவோசையோடு பின்னப்பட்டு
இருக்கின்றன. வாய்திரந்து வாசித்து பார்ததால்தான் இதன் அழகு புரியும்.
இசையும், கூத்துமாகக் கலந்தது சிவம் என்பதால் தாளக் கட்டிலான ஓசையை
இணைத்து சொல்லப்பட்டிருப்பதாகவும் கொள்ளலாம். மொத்தத்தில் இது
அழகுணர்ச்சியோடு இறை சார்ந்த தத்துவ நோக்காகும்.

( தகவல் உதவி – இசை அறிஞர் அரிமளம் சு.பத்மநாபன் )
கண்ணுக்குத் தெரிந்த பருப்பொருளான மனிதன், குற்றம் குறையற்று அல்லது
குறைகளை உணர்ந்து அதிலிருந்து விடுபபட்ட மனித மனமே இறை ஆகும். அம்மனம்
அறிவால் உணர்ந்து ஒருமுகமாக ஆகிற பொழுது தன்+ஆனாய் = தன்னானாய்,
தான்+ஆனோம் = தானானோம், நான் +ஆனோம்= நானானோம் என்ற படிநிலைகளில்
மனிதமனம் சிவம் ஆகிறது என்கிறார் வைகுண்டர்.




இங்கே சொல்லப்படுகின்ற மனிதமனம் வைகுண்டர் வாழ்ந்த காலத்தில்
ஓடுக்குமுறைக்கு ஆளான சாணார் மக்கள் சார்ந்தது ஆகும். பொருளாதார, சமூக,
அரசியல் சார் அதிகாரவர்க்கத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அரி, சிவன் ஆன
பெருந்தெய்வங்களை எளிய மக்களுக்கு, ஓடுக்கப்பட்ட மக்களுக்கு
நெருக்கமாக்கி, அதுவும் நீயும் வேறல்ல ; ஒன்றே தான் என சமூகத்தின்
விளிம்பு நிலை மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறார் வைகுண்டர். இது
இறையியல் விடுதலை நெறி ஆகும்.

இந்த அணுகுமுறை சமயத் தமிழுக்குப் புதியது. இவ்வணுகுமுறையை தமது
படைப்புகளில் பயன்படுத்தி, தமது நெறி தழைக்க, இதனூடாக மாற்றுமரபை
உருவாக்க முனைந்தார் என்பது சமயத் தமிழுக்கும், இசைத் தமிழுக்கும்,
மொத்தத்தில் தமிழுக்கு பெருமை சேர்ப்பதாகும்.

அடிக்குறிப்புகள்
1. முத்துக்குட்டிசுவாமி.பொ - அகிலத்திரட்டு - பக்கம் 152
2 கிருஷ்ணநாதன்.தா - அய்யா வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும் - பக்கம் 40
3, அருணன் - தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு - பக்கம் 02

4. நீலகண்டன்.வெ - அய்யா வைகுண்டர் - பக்கம் 25

5. பாஸ்கரமார்தாண்டன்.பொன் – அய்யா நாராயணர் - பக்கம் 115

6. அரிகோபாலன்.இரா - அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திட்டு அம்மானை
பெருமாள்.அ.கா (ப.ஆ) முன்னுரை - பக்கம் 36

7. பகவான் வைகுண்டர் - அருள்நூல் - பக்கம் 9
பாலராமச்சந்திரன்.த (ப.ஆ)
8. முத்துக்குட்டிசுவாமி.பொ - அகிலத்திரட்டு - பக்கம் 9
9. அருணன் - தமிழகத்தில் சீமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு - பக்கம் 30
10. முத்துக்குட்டிசுவாமி.பொ - அகிலத்திரட்டு - பக்கம் 117
11. பகவான் வைகுண்டர் - அருள்நூல் - பக்கம் 7
பாலராமச்சந்திரன்.த (ப.ஆ)
12. மேற்படி - மேற்படி - பக்கம் 21
13. மேற்படி - மேற்படி - பக்கம் 39
14. மேற்படி - மேற்படி - பக்கம் 39
15. மேற்படி - மேற்படி - பக்கம் 40
16. அரிகோபாலன்.இரா - அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திட்டு அம்மானை
பெருமாள்.அ.க (ப.ஆ) முன்னுரை - பக்கம் 32, 33
17. முத்துக்குட்டிசுவாமி.பொ – அகிலத்திரட்டு - பக்கம் 1,4
18. மேற்படி - மேற்படி - பக்கம் 129
19. பகவான் வைகுண்டர் - அருள்நூல் - பக்கம் 02
பாலராமச்சந்திரன்.த (ப.ஆ)
             2010 ஜூன் 23-27  கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடில் சமய அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை

No comments:

Post a Comment