Tuesday, August 2, 2011

தென்திசை கர்ப்பகிரகமும் கிழக்கு வாசலும்(சிதம்பரம் கோவிலில் தொடரும் தீண்டாமை)




தன் மீதான விமர்சனம் கடுமையாகிற போதெல்லாம் ,தான் சூத்திரகுலத்தில் பிறந்ததால் தன்னை விமர்சிக்கிறார்கள் என ,வூடு கட்டி அரசியல் சித்தாட்டம் ஆடும் திருவாளர் கலைஞர் இப்போது புதிய மனுதர்ம தாசனாக மாறி,சூத்திரர்களை அவர்கள் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.


ஜூலை 14 ஆம் தேதி சிதம்பரம் தெற்கு கோபுர வாசல் எதிரே தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தெற்கு கோபுர வாசலுக்கு அடுத்து இருந்த பாதையின் வழியாக நந்தன்[கி,பி 5 ஆம் நூற்றாண்டு] நுழைந்த விக்ரமசோழர் திருமாளிகை பாதையின் மதில்சுவற்றில் சமீப காலம் வரை இருந்து பின் அடைக்கபட்ட வழியை திறந்து விடக் கோரினார்கள்.


ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற காமராசர் பிறந்தநாள் விழாவில் பேசிய கலைஞர்,இல்லாத நந்தனுக்காக குறிப்பிட்ட பாதை தீண்டாமையின் வடிவம் எனச்சொல்லி அதை திறந்துவிடக் கோருகிறார்கள் . இந்த ஆட்சியின் நல்ல திட்டங்களை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் போராடுகிறார்கள்.முடிந்த பிரச்சினையை முடுக்கி விட்டு கலவரத்தை உண்டாக்க முயற்சிக்கின்றனர்.


தி.மு.க வும் காங்கிரசும் தீண்டாமையை விரும்புகின்றவர்களா? சாதியை விரும்புகின்றவர்களா? கோவிலையே திறந்து விட்ட பின்பு நந்தன் நடந்த பாதை என்று சொல்லி ஒரு போராட்டமா? என்று கேட்டிருக்கிறார்.


[ தினமணி 2010 ஜூலை 16 ]


இந்த சமூகத்தில் இந்த ஆட்சியில் தலித்துகளுக்கு இழைக்கபட்ட கொடுமைகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது என்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்தான் முடிந்த பிரச்சினையை கிளறி விடுகிறார்கள் என்றும் பேசி கலவரத்தை தூண்டிவிடப் பார்ப்பதே திருவாளர் மூனா கானாதான்.


மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஜூலை 31 ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற்ற தியாகி கக்கன் நூற்றாண்டு விழாவில் பேசும் போது தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றாக ஒழிக்கப்படவில்லை.இரட்டைக் குவளை முறை தொடர்கிறது என்று பேசி தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென நினைப்பவனே காங்கிரஸ்காரன் என பேசியிருக்கிறார்.


[ தினமணி 2010 ஜூலை 31]


மூனா கானாவுக்கான பதிலை அவரது கூட்டணிக் கட்சித் தலைவரும் ,மத்திய உள்துறை அமைச்சருமான சிதம்பரமே சொல்லி விட்டார்; எனவே நாம் நந்தன் பிரச்சினைக்கு வரலாம்.


இல்லாத நந்தனா?


கி.பி 5ஆம் நூற்றண்டில் வாழ்ந்த நந்தனைப் பற்றி மக்கள் மத்தியில் புழங்கி வருகிற கதைகளும் உண்டு.வரலாற்றுக் குறிப்புகளும் உண்டு.சிதம்பரத்திற்கு தெற்க்குபக்க ஊரான ஆதனூரில் ஒரு கூத்திசைக் கலைஞராக வாழ்ந்தவர் நந்தப்பறையன். பெரும்பற்றப் புலியூர் அல்லது தில்லைவனம்[சிதம்பரத்தின் ஆதிப் பெயர்] வாழ் கூத்தாண்டவனை[சிவன்] கும்பிடப்போன நந்தனை பறையர் என்பதால்,கோவிலுக்குள் விடாது தடுத்து எரியும் நெருப்பில் இறக்கி பார்ப்பனர்கள் கொன்று விட ,அதை அடுத்து பறையர் மக்களிடத்தில் உருவான கொந்தளிப்பை சமாளிக்க ஜோதி மயமானான் நந்தன் எனக் கதையை மாற்றி ஏடுகளில் எழுதி வைத்தார்கள்.


இதை நாம் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சந்நியாசியான சுந்தரரின் திருத்தொண்டர்தொகையில் பார்க்கலாம்.மற்றொரு சந்நியாசியான நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியிலும் காணலாம்.விரிவாக இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதல் அமைச்சரான சேக்கிழாரின்[கி.பி 12] பெரியபுராணத்தில் படிக்கலாம்.


எரியும் நெருப்பிட்டு நந்தனை கொன்றதால் மக்கள் மத்தியில் உருவான கோபம் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.இன்னும் சிதம்பரம் கோயிலில் நந்தனுக்கு நீதி வழங்கப்படவில்லை.


நந்தன் நுழைந்த தெற்கு வாசல்


45 ஏக்கர் பரப்பளவுள்ள சிதம்பரம் கோவில் நான்கு சுற்று கட்டுமானம் உள்ள பெருங்கோவிலாக மாறியது 12 ஆம் நூற்றாண்டிலிருந்துதான்.இதற்கு முன் நந்தன் காலத்தில் வில்வமரங்கள் அடர்ந்த சுற்றுகட்டு ஏதுமில்லாத தெற்கு பக்கம் நோக்கிய ,இன்றைய நிருத்தசபை உள்ள பகுதிதான் ,அன்றைய மூலட்டானம்[கர்ப்பகிரகம்]நந்தன் நுழைந்த பகுதி.இதுதான் சமீபகாலமாக உட்பக்க கதவோடும் வெளிப்பக்கம் பூச்சுமானமுமாய் அடைக்கப்பட்டிருக்கும் மதிற்சுவர்.இதன் எதிரே ஏழு அடுக்கோடு நிற்கிறது தெற்குகோபுர வாசல்.இதைக் கட்டியது சோழ இளவரசியை மணந்த பல்லவ மன்னன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்.


இன்றைய மூலட்டானம் பழைய மூலட்டானத்திற்கு நேர் எதிரே உள் வாங்கிய நிலையில் தெற்குபக்கம் பார்த்துதான் உள்ளது.ஆனால் பிரதான நுழைவு வாசல் கிழக்கு பக்கம் பார்த்தே சோழர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


அன்றும் இன்றும் தெற்குபக்கம் மூலட்டானம் இருக்க தெற்குபக்க கோபுர வாசல் ஏன் அடைத்து வைக்கப்பட்டுள்ளது?நவீன ஆரூர்ச்சோழ மகாராஜா மூனா கானா பதில் சொல்வாரா? தெற்குகோபுர வாசலுக்கு அடுத்து விக்ரமசோழர் திருமாளிகை என சொல்லப்படுகின்ற பாதையிலேயே இன்றும் அடைக்கப்பட்ட பகுதியின் எதிரில் நந்தி,பலிபீடம் உள்ளது எதைக் காட்டுகிறது கலைஞரே?


1600 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதி வழியாக நந்தன் நுழைந்ததால் சோழ,பல்லவ,நாயக்க ஆட்சிகளுக்கு பிறகு இன்று தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கோவில் வந்த பிறகும் ,பகுத்தறிவும்,நவீனச்சிந்தனையும் வளர்ந்த பிறகும் வேறெந்த காரணமில்லாமல் தெற்குகோபுர வாசல் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தீண்டாமை இன்றி வேறென்ன?


இந்த வரலாற்று ஆதாரங்களை கலைஞரே உங்களாலோ அல்லது உங்கள் அரசவைக் கவிஞர்களாலோ மறுக்க முடியுமா?வேண்டாம் வறட்டு ஜம்பம்;ஒரு சூத்திரர் மனுதர்மத்தை காக்க புறப்படலாமா?நீங்கள் சோழன் வழியைப் பின்பற்றக்கூடாது.சோழர்கள் அனைவரும் உதட்டளவில் தமிழ் பேசி உண்மையில் மனுதர்மத்தைக் காத்து நின்றவர்கள்.


சொல்வதை சொல்லி விட்டோம்.எனவே மூலட்டானம் நோக்கி நிற்கும் தெற்குகோபுர வாசலை திறந்துவிட ஏற்பாடு செய்யுங்கள்.உச்சநீதிமன்ற தடைகளை களைய ஏற்பாடு செய்யுங்கள்.பெரியாரின் சீடர் எனில் விரைந்து நடவடிக்கை எடுக்கவும்.இல்லை எனில் ஆயிரம் ஆயிரம் புதிய நந்தன்கள் தீண்டாமையின் வடிவமாய் திகழும் தெற்குவாசல் சுவரை திறப்பார்கள்;கூத்தாண்டவர் முன் யாரும் சமம் என்பதை உரக்கச் சொல்வார்கள்.

No comments:

Post a Comment