Tuesday, April 9, 2019

யோக்யராஜா..பராக்..பராக்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை கலைக்குழு உருவாக்கியிருக்கும் வீதிநாடகம் யோக்யராஜா. பன்னிரண்டு காட்சிகள் கொண்டதாக நாடகம் இருக்கிறது. இருபத்தைந்து நிமிடத்தில் ஐந்தாண்டு ஆட்சிகளின் அவலத்தை அம்பலப்படுத்தி விடுகிறது நாடகம்.நாடகம் தொடங்குகிறது. பாதிக்கப் பட்டவர்கள் ஒவ்வொருவரும் தங்களை ரத்தசாட்சியாக மாற்றி தங்கள் வாக்கு மூலத்தை பார்வையாளர்கள் முன் வைக்கிறார்கள். வனிதாவின் தாயார், ஒரு விவசாயி, பொறியியல் படித்த இளைஞன், ஓர் இளம்பெண், மேலும் சிலர் தாங்கள் இதனால் பாதிக்கப்பட்டோம் என சொல்வதோடு நாடகம் தொடங்குகிறது.கதை சொல்லி அடுத்து வருகிறார். ஆம் இவர்கள் பாதிக்கப்பட்டது உண்மை. யாரால் பாதிக்கப்பட்டார்கள்? இவராலா? அவராலா? எவரால் பாதிக்கப்பட்டார்கள்? என்று பார்வையாளர்களை நோக்கி கேட்கிறார் கதைசொல்லி.ராஜா ஒருவர் மேடையின் மையத்தில் போடப்பட்டிருக்கும் நாற்காலியை சுற்றி சுற்றி கூத்து அடவு முறையில் ஆடிக் கொண்டு வருகிறார். நாடகம் ஒவ்வொரு காட்சியை விவரிக்கத் தொடங்குகிறது.
எட்டு வழிச் சாலை, பணமதிப்பு நீக்கம், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி, கும்பல் பாலியல் கொடுமை, ரபேல் விமான ஊழல், நிலத்தடி நீரும் காற்றும் பாதிக்கப்பட்ட முத்துநகரம் என காட்சிகள் ஒவ்வொன்றாக பார்வையாளர்கள் முன் நடிக்கப்படுகிறது. இடையில் காட்பாடியும் வெந்நீரும் நான் நீ என்று அடித்துக் கொள்கிறார்கள். பின் சமரசமாகிறார்கள். ராஜா மகிழ்ச்சி கொண்டு அவர்களை அணைத்துக் கொள்கிறார்.இப்படி பயணிக்கும் நாடகம், நடந்ததை மீண்டும் பார்வையாளர்களின் ஞாப கத்திற்கு கொண்டு வருகிறது. கடந்து போன காட்சிகள் ஒவ்வொன்றும் பார்வை யாளர்களால் அசை போடப்பட்டு காட்சிகள் விரிய விரிய புரிந்து கொண்டு நாடகத்தை ரசிக்கிறார்கள்; சிரிக்கிறார்கள்; கையொலி எழுப்புகிறார்கள் பார்வை யாளர்கள்.
நாடக விவரணைக் காட்சிகள் முடிந்த பிறகு கதை சொல்லி மீண்டும் பார்வை யாளர் முன் வருகிறார். இந்த அவலங்கள் தொடர வேண்டுமா; ஒழிக்கப்பட வேண்டுமா என கேள்வி கேட்கிறார். மாற்றப்படுவதற்கு மாற்றம் அவசியம். அந்த மாற்றத்தை கொண்டு வரும் அணியாக இருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அவரவர் சின்னத்தில் வாக்களிக்க கோருகிறார் கதை சொல்லி. நாடகம் முடிந்து விடுகிறது.முடிந்த இடத்திலிருந்து பார்வையாளர்கள் யோசிக்கத் தொடங்குகிறார்கள்.அரசியல் ஊக்கம் பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கலைஞர்களால் ஒரு வார கால அவகாசத்தில் கூட்டாக முகாமில் நாடகம் உருவாக்கப்பட்டது. தொழிலாளர்களும் இளைஞர்களுமாக இணைந்த நாடகக்குழு மத்திய சென்னை, வடசென்னை என வலம் வருகிறது. பாடல்கள், காட்சி மாற்றத்திற்கான இசைக்கோர்வை, கலைஞர்களை தனித்துவமிக்கவர்களாக காட்டிக் கொள்ளும் சிவப்புநிற இடுப்புத்துண்டு, காட்சி அமைப்பிற்கான மூங்கில்கள் என நாடகம் தனித்து அடையாளம் கொள்கிறது
.-இரா.தெ.முத்து
நெறியாள்கை தி.ராசேந்திரகுமார் - ஜி.உதயகுமார், பாடல் : நா.வே.அருள்.
நன்றி ; தீக்கதிர் 2019 ஏப்ரல் 8

1 comment: