Monday, July 17, 2017

மல்லிகைப் பூவே ..... மல்லிகைப் பூவே

                                                              மல்லிகைப் பூவே
                                                                மல்லிகைப் பூவே
                                                                பார்த்தாயா?
                                                                 பொன்மாலை
                                                                எங்கள் தோட்டத்தைப்
                                                                பார்க்கப் பூத்தாயா?
                                                                ஆயிரம் கோடிகள் செல்வம்
                                                                அது
                                                                யாருக்கு இங்கு வேண்டும்
                                                                 அரை நொடி என்றால் கூட
                                                                  இந்த
                                                                ஆனந்தம் ஒன்றே போதும்
                                                                 பூவே
                                                                எங்கள் தோட்டத்தைப்
                                                                 பார்க்கப் பூத்தாயா

இது கவிஞர் தாமரை எழுதிய பாடல். இசை எஸ்.ஏ. ராஜ்குமார்.இயக்குநர் விக்ரமன் இயக்கிய உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் இடம் பெற்றப் பாடல்.அஜித்தும் ரோஜாவும் ஆர்ப்பாட்டம் இல்லாத நளினமான நடனத்தில் ஆடிப் பாடி நடித்தப் ரசிகர்களை மகிழ்வித்தப் படம். 1999 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம். யார் பாடியது என்று நான் பார்த்த யூ டியூப் பதிவில் செய்தி இல்லை.

தாமரையை தமிழ்நாடெங்கும் , யார் இந்த தாமரை என விசாரிக்க வைத்தப் பாடல்.இது.  தாமரை எழுதிய இரண்டாவது பாடல்.   மல்லிகைப் பூவை முன் வைத்து, அதனிடம் ஒரு பெண் தன் மனதை பார்வையை பகிர்ந்து கொள்வதான தொனியில் பாடல் காட்சிபடுத்தப் பட்டிருக்கும். பெண் குரலோடு ஆண் குரலொன்றும் டூயட் பாடியிருக்கும்.


பாடலே கவிதையாகவும் வண்ணம் கூட்டி நிற்கும் பாடல்.

ஆயிரம் கோடிகள் செல்வம்
அது
யாருக்கு இங்கு வேண்டும்
அரை நொடி என்றால் கூட
இந்த
ஆனந்தம் ஒன்றே போதும்

பாடலின் பல்லவியில் வரும் இந்த வரிகளால்தான் என்னளவில் கவிஞர் தாமரை அவர்கள் குறித்த கவனமும் மதிப்பும் உருவாகியது. பணம் மட்டுமே மனிதர்களின் ஏற்பை மறுப்பை நிகழ்த்த வல்லது என்கிற தனியுடைமை சார்ந்த கருத்துருவாக்கம் , சமுகத்தின் செல்நெறியாக இருக்கிறது ; தொடர்ந்து கொண்டிருக்கிறது..இதன் பின்னணியில் எழுதப்பட்ட இந்தப் பாடல், பணத்தை செல்வத்தை அதன் மதிப்பை மறுத்து, அந்த இடத்தில் அன்பை பரிவை கூட்டுறவை அதனூடாக உருவாகும் ஆனந்தத்தை முன்மொழிந்து பாடுகிறது
.
நட்பில் காதலில்  குடும்பத்தில் சமுகத்தில் ஆயிரம் கோடி செல்வத்தை துச்சமாக மதித்து , பணத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள் மீதான நேசத்தை பாடல் எழுதிச் செல்வது என்பது, அன்பை பரிவை பொதுவுடைமையை நோக்கிய மாறுதலை நோக்கிய , அதனை முன்னெடுத்துப் போராடுகிற அன்பு சக்திகளுக்கு இந்தப் பாடல் மிகுந்த உற்சாகத்தை தந்து கொண்டே இருக்கும்.

 வடசென்னை திருவொற்றியூர் தேரடியில் நிகழ்ந்த , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின், கலை இரவு மேடையில் கவிஞர் தாமரை 1999 ஆண்டில்  , இந்தப் பாடலிற்காக அழைத்துப் பாராட்டப்பட்டர் . எனது கேள்விகளுக்கு கவிஞர் தாமரை பதில் சொல்லும் நேர்காணலாக நிகழ்ச்சி வ்டிவமைக்கப்படிருந்தது.

No comments:

Post a Comment