Sunday, December 11, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி 15




காலத்தின் திசைக்குரல் 

 புதிய  உலகம் புதிய இந்தியாவை  உருவாக்கும் தொழில்,தொழிலாளர்கள்,அறிவாளர்கள்,கலைஞர்கள் குறித்து ”தொழில்” எனும் தலைப்பிலான பாரதியின் கவிதை இது: 

இரும்பைக் காய்ச்சி உருக்குடு வீரே
   யந்திரங்கள்  வகுத்திடு வீரே
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
   கடலில்  மூழ்கிநன் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
   ஆயி  ரந்தொழில் செய்திடுவீரே
பெரும்பு  கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
   பிரம தேவன் கலையிங்கு நீரே 

மண்ணெடுத்துக் குடங்கள்செய் வீரே
   மரத்தை  வெட்டி மனைசெய்கு வீரே
உண்ணக் காய்கனி  தந்திடு வீரே
    உழுது  நன்செய்ப் பயிரிடு வீரே
எண்ணெய் பால்நெய் கொணர்ந்திடு வீரே
    இழையை  நூற்றுநல் லாடைசெய் வீரே
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்
    மேவிப்  பார்மிசைக் காப்பவர் நீரே 

பாட்டும்  செய்யுளும் கோத்திடு வீரே
   பரத  நாட்டியக் கூத்திடு வீரே
காட்டும்  வையப் பொருள்களின் உண்மை
   கண்டு  சாத்திரம் சேர்த்திடு வீரே
நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே
   நாடும்  இன்பங்கள் ஊட்டிவைப் பீரே
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
   தெய்வமாக  விளங்குவிர் நீரே 

பாரதியின் காலம் இந்தியாவில் எந்திரசாலைகள்,நவீன அச்சுக்கூடங்கள், உருவான காலம்.பாரம்பர்யத் தொழிகள் பலவும் மின்மயமான காலம்.மூலதனம் போட்டு தொழில் செய்யும் முதலாளிகள் உருவான காலம்.தொழிலாளி முதலாளி முரண் உருவான காலம்.இதன் ஊடாய் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளி வந்த காலம்.ஒரு கலை இலக்கிய ஆளுமை இவைகளை எதுவும் காணாமல் ,காலத்தின் திசை அறியாமல் வெறுமனே படைப்புகள் செய்வதனால் அந்த படைப்பில் காலம் இருக்காது;உண்மை இருக்காது;நவீனக்குரல் இருக்காது;நவீனமொழி இருக்காது.பாரதி காலத்தின் குரலை ஒலித்தான். 

முதல் பகுதியில்  தொழிலாளர்களைப் பற்றி,அடுத்தப் பகுதியில் கைவினைஞர்கள்,விவசாயிகள் பற்றி இறுதியில் கவிஞர்கள்,நாட்டியர்கள்,அறிவாளிகள் பற்றி சொல்லி அவர்களை விழியெதிர் காணும் கடவுள்கள் என்றும்,உலகத்தை காப்பவர்கள் என்றும் படைப்பில் ஈடுபட்டுள்ள பிரம்மர்கள் என்றும் சொல்லி அற்புதமாகப் பாடுகிறான் இப்படி :
”பெரும் புகழ் உமக்கே இசைக்கின்றேன்” 

சமூக இயக்கத்திற்குத்  தேவையான உற்பத்தியில் ஈடுபடுகிற  சக்திகளை, அவர்களை நிரல்  படுத்தும் முறையில் முதலாவது பாட்டாளிகளை முன் வைக்கிறான்.இந்த இடத்தில் பாரதி தன் தொழிலாளர்  கட்டுரையில் பதிந்ததை இங்கு பதிவது பொருத்தம்.”ஆதிகாலம் முதல் அறிவுப் பயிற்சி உடைய வகுப்பினர் கைத்தொழிலாளிக்கு கல்வி ஏற்படாதபடியாக வேலை செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்.எழுத்து தெரிந்த சூத்திரனை மிகவும் தொலைவில் விலக்கிவிட வேண்டும் என்ற வினோத விதியொன்று மனுஸ்ருதியில் காணப்படுகிறது.நம்முடைய தேசத்தில் மட்டுமேயன்று;உலக முழுமையிலும் எல்லா நாடுகளிலும். கைத்தொழிலாளருக்கு கல்வி பயிற்சி உண்டாகாத வண்ணமாகவே ஜனக்கட்டுகள் நடைபெற்று வந்திருக்கின்றன.” 

அறிவுடைய  சூத்திரர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை
  உற்பத்தியின் பக்கத்தில் என்பதாக ,தலைமைத்துவத்தின் பக்கத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த மானுட விரோத மனுசாத்திர விதிகளை புறக்கணிக்கும் பாரதி ,உலகம் முழுவதும் பாட்டாளிகளை நம் இந்திய புரிதலில் வர்க்கமாகவும் சாதியாகவும் உள்ள சூத்திரர்களை புறக்கணிப்பதை புரிந்து கொண்டு அவர்களை தன் கவிதையில் முன்னிலைப் படுத்துகிறான். 

அவர்களோடு உடன்வர வேண்டிய அடுத்த வர்க்கமான  கைவினைஞர்கள்,விவசாயிகள்,கலைஞர்கள்,படைபாளர்கள் பற்றி பாடுகிறான்.அதுவும் பெரும் புகழ் உமக்கே இசைக்கிறேன் என்று பாடுகிறான்.இந்த வரிசைப்படுத்துதலில் சரியான வர்க்க நோக்கு வெளிப்படுகிறது.இந்த வர்க்க நோக்கை இந்திய இடதுசாரிகள் மட்டுமன்று உலக முழுவதுமுள்ள இடதுசாரிகள்,கம்யூனிஸ்டுகள் நடைமுறைபடுத்தும் உத்தியும் ஆகும்.பாரதிக்கு இந்த பார்வை அவன் வாசிப்பினூடாக,சோவியத் தொடங்கி உலகம் முழுவதும் நடைபெற்ற இந்தியா,சென்னை வரை நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களை கற்று உணர்ந்ததலினால் வந்த பார்வை ஆகும்.  

கவிதையின் முடிப்பில் இந்த கூட்டணியை தொழிலாளர் வர்க்க கூட்டிணைவை நாட்டிலே அறம் தழைக்க வைப்பவர்கள் என்றும்,
இன்பத்தை  விளைவிப்பவர்கள் என்றும்  பாடியுள்ளமை அவனின் சரியான அரசியல் நிலைபாடு. 

இந்த 21 ஆம்  நூற்றாண்டில் இயங்கும் பல படைப்பாளிகள் உலகமயம்,தாராளமயம்,வால் ஸ்டிரிட்டை கைப்பற்றும் இயக்கம்,உலக இந்திய அளவிலான தொழிலாளர் எதிர்ப்பு இயக்கம் என எதையும் உள்வாங்காது காமம் என்றும் வெற்று இனவாதம் என்றும் பேசி எழுதி குப்பியில் குழம்பிக் கிடக்கிற இவர்களைப் பார்த்து பகடி செய்கிறான் பாரதி.

(2011 டிசம்பர் 12 தீக்கதிர் இலக்கியச் சோலையில் பிரசுரமானது)

No comments:

Post a Comment