இணைந்த இதயம்

Thursday, September 29, 2011

நான் பனை


யாரின்
கனிவுக்காகவும்
காத்திருப்பதில்லை
நான்

 கூடைகளுக்காகவும்
துயில் பாய்களுக்காகவும்
என் துகிலை அரிந்து கொள்ளலாம்
நீங்கள்

குருத்தோலை நாட்களிலும்
புஞ்சை காட்டு வேலைக் காலங்களிலும்
 குறுத்தரிந்து
சிலுவைகளாக
கஞ்சிப் பட்டைகளாக
உருவாக்கிக் கொள்ளுங்கள்

சுபகாரிய தோரணங்களில்
பெரு விழாக்களில்
என் குலை அரிந்து
ஓலை அரிந்து உங்கள் வாழ்விடங்களை
அலங்கரித்துக் கொள்ளுங்கள்

காட்டுப் பயிர்களையும்
வீட்டுக் காவல்களையும்
கருக்கு மட்டைகளால்
காத்துக் கொள்ளுங்கள்

உங்கள் போதைக்கு
என் பதநீரை கள்ளாக்கிக்
கொள்ளுங்கள்

சூடு தணிக்க
என்
நுங்கை அருந்துங்கள்

 பிள்ளைகள்
சிறுதேர் உருட்டி விளையாட
நுங்கு நீக்கிய
என் கூந்தல்களை
சக்கரமாக்கிக் கொள்ளுங்கள்

உங்கள் சாதிச் சண்டைகளில்
என் கருக்கு மட்டைகளை
 ஆயுதமாக்கிக் கொள்வீர்கள்

ஆனாலும்
நீங்கள் என் வேர்களில்
நீர் ஊற்ற
பிரயாசைப் பட வேண்டாம்


 மழை பொய்த்தாலும்
சூரியன் காய்ந்தாலும் அன்றி
 உங்கள் மனம் 
காய்ந்தாலும்
காயாமல் கனிவேன்
நான் பனை.

No comments:

Post a Comment