Wednesday, November 9, 2016

தேசாந்திரியின் கதை



தேசாந்திரியாக இவர் ஊர் ஊராகச் சுற்றியப் பொழுதில் சென்னையின் ஒரு மாலை நேரத்தில் கற்பகாம்பாள் அவின்யூவில் 2000 ஆவது ஆண்டில் சந்தித்தேன். சில வார்த்தைகள் பேசினோம். என்ன பேசினோம் என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது. அந்த காலத்தின் வெம்மை , வாழ்வின் அலைச்சல் , ஏமாற்றம் அவ்வாறு பேச வைத்திருக்கும்.அன்றிலிருந்து இன்று வரை அவர் மீதான அன்போடும் அவரின் எழுத்துகளோடும் எம் பயணம் தொடர்கிறது.
உயரத்திற்கு வந்த பின்பும் அவரிடம் தொடர்ந்து வெளிப்படும் தோழமை ; செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கை ; எழுத்துகளை வாசித்து நம் கருத்துகளைச் சொல்லும் பொழுதில் அவர் முகத்தில் வெளிப்படும் புன்னகை ; வெளிப்படைத்தன்மை இவரை நம் எழுத்தாளர் என்று உறவுக் கொண்டாடச் சொல்லும். வாசிப்பின் எழுத்தின் மீதான அவரின் ஆளுமை, சுயமரியாதை அவரின் உயரத்தை அதிகரிக்கவே செய்யும்.
சோவியத் படைப்புகளின் மீது அவருக்கான ஈடுபாடு, அதற்காக ரஷ்ய மொழியைக் கற்றது, வீடு தேடிப் போவோரை வறவேற்று மணிக்கணக்கில் பேசும் உற்சாகம், அழுத்தம் திருத்தமாக சொற்களைப் பயன்படுத்துவது என்று அவரின் இருப்பு நம்மை வசீகரிக்கும்.
நேர் உரையாடலில் அவரோடு பேசும் பொழுது “என்..ன தோழர் “என்று குழந்தமையோடு கேட்கும் அந்த அணுகுமுறை மேலும் மேலும் அவரோடு நம்மை அய்க்கியமாக்குகிறது. ஒரு பொழுதும் தன்னை மற்றவர்கள் மீது நிறுவிக் கொள்ள மாட்டார். மாறாக இயல்பான அணுகுமுறையில் வசிகரித்துக் கொள்வார்.
அவர் மீது நம் கூடுதல் பிரியத்தின் காரணம் , இவர் நம் காலத்தின் புதுமைப்பித்தன் ; நம் காலத்தின் ஜெயகாந்தன். உழைப்பாளி மக்கள் மீது அக்கறையும் நேசமும் கொண்டவர் என்பதால் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மீது பொங்குமாங்கடலென நம் நேசம் ததும்பி நிற்கிறது.
( சென்னை காமராசர் அரங்கில் நவம்பர் 07 அன்று நடைபெற்ற சோவியத் புரட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழாவில் பங்கேற்க வந்த எஸ்.ரா,உடன் டி.லட்சுமணன் & நாம் )

No comments:

Post a Comment