Thursday, August 11, 2016

விந்தன் : முற்போக்குச் சிந்தனை மரபு


விந்தன்,தமிழ்ஒளி என்கிற பெயர்களை நான் ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவதியின் கலையுலக அனுபவங்கள் நூலின் வழியாக தொடக்கத்தில் அறிந்து கொண்டேன்.விந்தன் பற்றிய வாசிப்பில்,வடசென்னையின் சூளை பட்டாளத்தை சார்ந்தவர் என்கிற ஈர்ப்பும் அடுத்து வந்திருந்தது.
தமிழ்ச் சமுகத்தில் விந்தனின் ஆளுமை என்கிற கட்டுரையில் பேராசிரியர் வீ.அரசு சொன்னது போல `நடைமுறை சமுக அனுபவங்களை தனக்கான அரசியல் புரிதலோடு எழுத்தில் பதிவு செய்தவர் விந்தன்.

அந்த அரசியல் என்ன?
தொடர்ந்து நாற்பது ஆண்டு காலம் எழுத்தில் இயங்கியவர் விந்தன்.அமைப்பு சாராத ஆனால் கம்யூனிஸ்டுகள் மீது முற்போக்காளர்கள் மீது மரியாதை கொண்ட படைப்பாளி விந்தன் என்பதை அவரின் எழுத்தின் வழி அறிந்து கொள்ளலாம்.
1947 ல் விந்தன் எழுதிய வேலைநிறுத்தம் ஏன்? என்கிற நூலின் முன்னுரையில் தான் யார் என்பதை, தனது பார்வை எது என்பதை சொல்லியிருக்கிறார்.

`என்னை எழுத்தாளன் என்று சொல்வதை விட,தொழிலாளி என்று சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே பெருமையடைபவன்.என்றைக்காவது ஒரு நாள் இந்த நாட்டு அரசியல்,ஏன் உலக அரசியலே கூட தொழிலாளர்களின் கைக்குத்தான் வந்து சேரப் போகிறது என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது என்று தன்னைப் பற்றிய முன்னுரையை நூலின் முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.
பாலும் பாவையும் நாவலில் இடம் பெற்ற சகோதரி சரளாவிற்கு என்கிற கடித வடிவ முன்னுரையில் இப்படிக் காணக் கிடைக்கிறது:
`அகல்யாவிடம் எவ்வித வெறுப்பும் எனக்கு இல்லை.அவள் பணக்கார வர்க்கத்தைச் சார்ந்தவள் என்று குறிப்பிடும்பொழுது மட்டும்,எனக்கு அந்த இனத்தின்மேல் இயற்கையாக உள்ள வெறுப்பை ஓரளவு காட்டிருக்கிறேன்

விந்தன் கதைகள் தொகுப்பில் ரிக்‌ஷாவாலா என்றொரு கதை.
காலச்சுழற்சியில் ரிக்‌ஷா இழுத்த காளிமுத்து, தன்மகன் கைலாசநாதர் கோவிலின் தர்மகர்த்தாவாகி காரிலிருந்து இறங்கி வருவதை,கோவிலின் பண்டாரத்தின் வழியாக அறிகிறான்.மனைவியைப் பிரசவத்தில் பலி கொடுத்து,சிறைவாசமிருந்து மீண்டு கோவில் தோட்டக்காரனாக ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கும் காளிமுத்து,தன் மகன் கோவில் தர்மகர்த்தா என்று அறிந்து மகிழ்ச்சி கொள்ளாமல்,அவனோடு தன் வாழ்க்கையை கழித்துக் கொள்ளலாம் என்று நினையாமல் அதிர்ச்சியில் பட்டென்று இறந்து விடுகிறான்.

உயிர்விடுதல் என்கிற உத்தியின் வழியாக மகனே ஆனாலும் பணக்காரவர்க்கம் என்றதனால், அதனோடு இணைந்து வாழ்வதை விடவும் உயிர் நீப்பதே மேல் என்று காளிமுத்துவிற்கு சஞ்சலச் சாவை கொடுத்து விட்டு தன் பணக்காரவர்க்க எதிர்ப்பை கதையில் பதிவு செய்திருக்கிறார் விந்தன்.

மனிதன் இதழில் 1954 ல் விந்தன் எழுதிய காந்தியவாதி கதை,காந்தியம் பேசிக் கொண்டே அதற்கு முரணாக ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தோல்மண்டி துளசிங்கராயரைப் பற்றியது. தீபாவளிக்கு தீபாவளி ஊர்ப்பிள்ளைக்ளுக்கு பட்டாசு வாங்கிக் கொடுத்து, தயாளக்குணம் கொண்டவராக காட்டிக் கொண்ட துளசிங்கராயரின் உண்மைமுகம் இந்த தீபாவளியில் அம்பலமாகி விடுகிறது.தனது அன்பாட்டிகளுக்கு பிறந்த பிள்ளைகளை ஊர்பிள்ளைகளாக பாவித்து,வழக்கமாக அணியும் மேல்துண்டு கீழ்துண்டு கூட இல்லாமல்,அன்பாட்டிகள் மத்தியில் எளிமையின் உச்சிக்கே சென்று அம்மணமாகி நின்று வாய்மையும் தூய்மையும் வளர்த்தார் என்று காந்தியத்தையும் அது பேசி ஏய்த்த மனிதர்களையும் பகடி செய்திருக்கிறார் விந்தன்.

விந்தனின் தடங்கள்
பாலும் பாவையும் நாவலில் விந்தனின் மனவோட்டத்தை சிந்தனையைச் சொல்லும் சில இடங்களை பார்க்கும் பொழுது,தன்னை சுற்றி நிகழும் அரசியல்,சமுக,பண்பாட்டு நிகழ்வினூடாக விந்தன் பாத்திரங்களை அமைத்துக் கொள்வதிலும் அவர்களின் மொழியினூடாக தன் கருத்தை துலக்கப்படுத்தவும் செய்திருக்கிறார்.

கனகலிங்கம் அகல்யாவிடம் இந்திரன் போன்ற ஆட்களின் சுயநலம் குறித்துப்  பேசும் பொழுது `பிறர் தனக்கு உபயோகமாக மட்டும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறவனே இந்த காலத்தில் புத்திசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் அறியப்படுகிறார்கள்என்று சொல்லுமிடத்தில் அறிவு, பொதுநலம் இல்லாது காசு பணம் தேடி அலையும் சுயநலமாக மாறி நிற்கிறது என்ற விமர்சனத்தையும் விந்தன் பதிகிறார்.

அகல்யா மீதான காதலை வெறும் பண உறவாக மாற்றி அகல்யாவை கை விடும் பொழுது `உன்னை கடவுள் காப்பாற்றட்டும் என்று சொல்லிவிட்டு ஓடிய இந்திரனை விமர்சிக்கும் கனகலிங்கம்`அனேகமாக கடவுளை துணைக்கு அழைப்பவர்கள் அல்லது கடவுளுக்கு பயன்படுபவர்கள் பலரும் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவர்கள்,கன்னக்கோல் திருடர்கள்,தூங்கும் பொழுது கழுத்தை அறுப்பவர்கள் என்ற உரையாடலின் வழியாக கடவுளின் இடம் எது? கடவுளை யார் ஏமாற்றுகிறார்கள்?கடவுள் உண்டா என்கிற கேள்வியையும் பாத்திரங்களினூடாக பதிந்து விடுகிறார்.

பாலும் பாவையும் நாவலின் 4 ஆவது அத்தியாயத்தின் தொடக்கத்தை வாசிப்பவர்கள், மகாகவி பாரதி மீதான விந்தனின் மரியாதையைப் புரிந்து கொள்ள முடியும்.தமிழை சொந்த சரக்காக மாற்றி அதன் வளர்ச்சியை முற்போக்கு வழியில் செலுத்த விரும்பாத இலக்கிய சனாதனிகள் மீதான கண்டனத்தையும் விந்தன் இந்த அத்தியாயத்தில் பதிந்திருப்பார்.
 தொழில் நிமித்தம் புத்தகக் கட்டுகளை தோளில் வைத்து சுமந்து வரும் கனகலிங்கத்திடம் அகல்யா`ஒரு கூலியாள் வைத்து கட்டுகளை கொண்டு வரலாமே;உங்களுக்கென்று ஒரு கெளரவம் உண்டுதானே என்று கேட்குமிடத்தில்  `அவரவர்க்கான சொந்தத் தகுதி பார்த்து வரும் கெளரவம் மட்டுமே மேலானது; கெளரவத்தை தேடிப் போகக்கூடாது;அது தானாய் வரவேண்டும் என்று தகுதி சார்ந்த கெளரவம் பற்றி கனகலிங்கம் வழியாக விந்தன் சொல்லுமிடம் அறிவுபூர்வமானது.

இந்தத் தரவுகளிலிருந்து விந்தனின் அரசியல் நோக்கு எது என்பதை  உணர்ந்து கொள்ளலாம்.அது முற்போக்குச் சிந்தனை சார்ந்ததாக இருக்கிறது.சமுகத்தின் முரண்பாடு குறித்ததாக இருக்கிறது.ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கம் பற்றியதாக இருக்கிறது.தொழிலாளி எதிர் முதலாளி  என்று இருக்கிறது.ஆளும் வர்க்க சித்தாந்த நோக்கை பகடி செய்வதாக இருக்கிறது.

வாழ்வின் மீது பின்னபட்ட படித்தவர்களின் சூதுவலைகள்;அவர்களின் பொதுநல தேட்டமில்லாத தன்னை மட்டுமே முன் வைக்கும் சுயநலம்;கடவுளின் வேர்;கடவுள் எவரின் கைக்கருவி; தமிழின் வளர்ச்சி மீது அக்கறை செலுத்தாத இலக்கிய செக்குதன்மை கொண்ட பழமைவாதிகள்;சொந்தத் திறமைகளினூடாக கிளைக்கும் தனிமனிதர்கள் மீதான மரியாதையை ஏற்பு செய்வதற்கு மாறாக மரியாதையின் அளவுகோலாக பணத்தை முன் வைக்கும் அபத்தம் என்று தனியுடைமை சமுகத்தின் கீழ் கிளைத்து பெருகும் நலிவுப் போக்குகள்;இதன் மீதான மாற்றுப் பார்வையுடன் கூடிய விமர்சனம் என்பதான தன்மையில் கருக்கொள்கிறது விந்தனின் முற்போக்கு சிந்தனை.

உண்மை துலங்கும் இடங்கள்
விந்தன் எழுத்து மீது ஒரு கேள்வி வந்து விழுந்தது.காதலைப் பற்றி விந்தன் எழுதுவது ஏன்?என்பதுதான் கேள்வி.விந்தன் சொன்னார்:`காதல் வெற்றி தோல்வி ஆவதும் கூட,பொருளாதாரம்தான் தீர்மானிக்கிறது.தீர்மானிக்கிற பொருளாதாரத்தைதான் என் கதைகள் பேசுகின்றன.

காதல்,அன்பு,பரிவு உள்ளிட்ட உணர்வுகளை வெறும் காசு பண பட்டுவாடா உறவாக்கி மனிதர்களை தன்னலத்தில் ஆழ்த்தும்  பொருளாதாரத்தின் குணத்தைப் பற்றியப் புரிதலை, எளிய மனிதர்கள் மீதான படர்த்தும் பேரன்பை,தனியுடைமை சமுகத்தை பகடி செய்யும் படைப்பாளுமையை எதன் வழியாக விந்தன் பெற்றிருக்க இயலும்? முற்போக்கு,இடதுசாரி நூல்களை பரிச்சயம் செய்ததிலிருந்தும் தான் வாழ்ந்த சுற்றுசூழலின் தாக்கங்களிலிருந்தும் அல்லாமல் வேறு எதிலிருந்து கற்றிருக்க இயலும்?

வறிய வர்க்கத்தில் பிறப்பதனாலேயே ஒருவரின் மனம் பகுத்தறிவையோ அறிவியல் பாங்கையோ பெற்று விடுவதில்லை.உலகம்-நாடு-மாநிலம் இதை ஒட்டிய கேள்விகள் முரண்பாடுகள் மட்டுமே உடனடியாக ஒருவரின் மனதை திருப்பி வைக்க இயலாது.வட்டாரம்-ஊர்-பகுதி சார்ந்த ஒருவரின் வாழ்நிலை அனுபவங்கள் பெறுமானங்கள்;இயக்கங்கள் மனிதர்கள் அவர்களில் வெளிப்படும் எச்சங்களை சொந்த பெறுமானங்களிலிருந்து ஒப்பீடு செய்கிற பொழுது உரசிப் பார்க்கிற பொழுது மனம் உண்மையைத் தேடுகிறது.பொய்யை வெறுக்கிறது.உண்மை துலங்கும் இடங்களை மனிதர்களை எழுத்துகளை கண்டடைகிறது.

அன்றைய சென்னையின் இன்றைய வடசென்னையின் சூளை பட்டாளம் விந்தன் வாழ்ந்த ஊர்.இந்தப் பகுதி மாநில அரசியலின் மையமான பகுதி;போராட்டங்களின் மையமான பகுதியுமாக இருந்தது.பக்கிங்காம் கர்னாடிக் மில்,ட்ராம்வே கம்பெனி,ரயில்பெட்டி தொழிற்சாலை,பேசின் பிரிட்ஜ் அனல்மின்நிலையம்,புளியந்தோப்பு ஆயுதக் கிடங்கு,சென்னை நகராட்சி மாளிகை,நவீன அச்சுக்கூடங்கள் என்று சூளையைச் சுற்றி  ஜவுளித் தொழில்,மின்சாரம்,அச்சகம்,ஆயுதம்,போக்குவரத்து சார்ந்த சாலைகள் இருந்தன.திரளான உதிரித் தொழிலாளர்களும்  தம் கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருந்தனர்.

திரு.வி.க, வி.சர்க்கரை செட்டியார்,செல்வதி செட்டியார்,கஸ்தூரிரங்க அய்யங்கார்,பி.பி.வாடியா,வ.உ.சி, ப.ஜீவானந்தம்,பி.ராமமூர்த்தி,கே.முருகேசன்,கே.மாணிக்கம் போன்ற தொழிலாளர் தலைவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உடன் நின்று போராடி கனன்றிருந்த ஊரில்தான் விந்தன் குடியிருந்தார்.
இந்தப் போராட்டங்கள்  அனைத்தும் விந்தனின் அரசியல்,சமுக,பண்பாட்டு சிந்தனையை வளர்க்க பயன்பட்டிருக்கின்றன.இந்தப் பகுதி மக்களின் மூச்சும் பேச்சுமாய் இருந்த கருத்துகள் விந்தனின் ஆளுமையை செதுக்கியிருக்கின்றன.இதற்கு அவரின் வேலைநிறுத்தம் ஏன் என்கிற நூல் மிக முக்கிய ஆவணமாகும். இது 1946 ல் நடைபெற்ற எழுச்சிகள், போராட்டங்கள்,தேசத்தை உலுக்கிய சம்பவங்கள்,பொருளாதார சீர்குலைவு,சமுக முரண்பாடுகளை அலசும் அரசியல் கட்டுரை நூல்.
 
கள ஆவணம்
இதன் முதல் கட்டுரை போலீசார் உள்ளிட்டவர்களின் வேலைநிறுத்தம் குறித்தது.அதன் தொடக்கம் இப்படி இருக்கிறது:
இன்று எங்கு நோக்கினும் வேலைநிறுத்தம்.
பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.பஸ் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.ரயில்வே தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.டிராம்வே தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.
இன்னும் சர்க்கார் சிப்பந்திகள்,தபால் இலாக்கா ஊழியர்கள்,ஹோட்டல் பாட்டாளிகள்,,நகரச்சுத்தி தொழிலாளிகள்,துறைமுகத்தை சேர்ந்த கூலிகள்,எதிலும் சேராத ரிக்‌ஷாவாலாக்கள் இவர்களோடு சேர்ந்து எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்னும் முதுமொழிக்கு பாத்திரமான உபாத்தியாயர்களும்கூட வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
அந்த பொல்லாத போலீசார் இருக்கிறார்களே அவர்களுக்கும் கூடவா கடமையும் பொறுப்பும் இல்லாது போய்விட்டன.

ஆனாலும் என்ன அந்த எதிர்பாராத அதிசயம் ஒரு நாள் நடந்துவிட்டது
அன்று போலீசார் வேலைநிறுத்தம் செய்ததோடு இல்லாமல் தாங்கள் அத்தனை நாளும் பெற்று வந்த அதி மர்மமான சம்பள விகிதத்தையும் அம்பலப்படுத்தி,சர்க்காரின் மானத்தை வாங்கி விட்டார்கள்.
இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன?
சில சுயநலவாதிகள் சொல்வது போல தொழிலாளிகளின் அவசரப் புத்திதான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்று சொல்லிவிட முடியுமா?முடியாது! பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சதியும்,முதலாளி வர்க்கத்தின் பேராசையும்தான் மேற்கூறிய வேலைநிறுத்தங்களுக்கு காரணம் என்று சொல்ல வேண்டும்.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டிற்கு முன் விடுதலைக்கான மிக முக்கியமான எழுச்சியைப் பற்றி விந்தன் எழுதியிருக்கிறார்.இந்தப் போராட்டங்கள் அனைத்தும் 1946 காலக்கட்டத்தில் நடந்தது.இந்த ஆண்டில் பம்பாய் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த தல்வார் என்ற போர்கப்பலின் சிப்பாயிகள் வேலைநிறுத்தம் செய்தார்கள்.பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை கீழே போட்டு விட்டு,காங்கிரசின் மூவர்ணக் கொடி,முஸ்லிம் லீக்கின் பிறைக்கொடி,கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியை கைகளில் ஏந்தியவாறு வீரசுதந்திரம் வேண்டி வேலைநிறுத்தம் செய்தார்கள்.

இந்த கிளர்ச்சியை காங்கிரஸூம் லீகும் ஆதரிக்கவில்லை.கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்,இவர்களின் வேலைநிறுத்தத்தை ஆதரித்து,நாடு தழுவிய முறையில் வேலைநிறுத்தங்கள்,ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.இந்தியாவின் தட்பவெட்பம் மாறிவிட்டது;ராணுவம்,போலீஸ் கிளர்ச்சி செய்வதால் இனி இந்தியாவை ஆள இயலாது;அதிகாரத்தை இந்திய முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளான காங்கிரஸ்,முஸ்லீம் லீகிடம் ஒப்படைத்து விட்டு, வெளியேறுவது சரி என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் முடிவெடுத்து,பின் வெளியேறியது.

பிரிட்டிஷ் அரசு இந்த முடிவை எடுப்பதற்கு முக்கிய நிகழ்வாக இருந்தது,இந்த கப்பற்படை எழுச்சி இவர்களை ஆதரித்து நாடு தழுவிய முறையில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள்.சென்னையிலும் மிக வலுவாக இந்த போராட்டக்கள் நிகழ்ந்தது.இதைத்தான் விந்தன் முதல் கட்டுரையில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
போராட்டங்களை ஆதரித்து அதன் நியாயப்பாடுகளை ஆதரித்து பிரிட்டிஷ் மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் போக்குகளை அம்பலப்படுத்தி நூல் முழுவதும் பேசியிருப்பார்.இந்த கள அனுபவம் வாழ்வு அனுபவம் விந்தனின் எழுத்துகளில் முற்போக்கை, எந்தப் பக்கத்தில் நிற்பது என்கிற தெளிவை தந்திருக்கிறது.

தொடர்ந்து இந்த பாதையில் முன்னேறிச் செல்வதில் அவருக்கு நிகழ்ந்த பலவீனம் பொருளாதார ரீதியிலான சரிவில் தொடங்கியது என்றாலும்,இயக்கம் சாராத படைப்பாளியாக கலாநிதி சிவத்தம்பி சொல்வது போல`சுயேட்சையான போக்கு கொண்டவராக விந்தன் இருந்ததனால்அடுத்தக் கட்ட நகர்தலிற்கான தடுமாற்றம் இருந்தது.படைப்பின் நோக்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான, இயக்கத்தின் தத்துவ வெளிச்சத்தோடு கூடிய சுயேட்சை அணுகுமுறையை விந்தன் கைக் கொள்ள விரும்பவில்லை.
எனினும் த.ஜெயகாந்தன் சொல்வது போல `தொழிலாளி வர்க்க எழுத்தாளர் அவர் ஒருவர் மட்டும் தான்என்கிற தொடக்ககால கம்பீர அடையாளம் விந்தனுக்கு இருந்து கொண்டே இருக்கும்.
ஆதார நூல்கள்:
1)தோழர் விந்தன்:தமிழ்ச்சமுக இயக்கத்தில் விந்தனின் ஆளுமை-பேராசிரியர் வீ.அரசு
2)விந்தன் கதைகள்:தொகுப்பு-மு.பரமசிவம்
3)பாலும் பாவையும்-விந்தன்
4)மனிதன் இதழ் தொகுப்பு-மு.பரமசிவம்
5)கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-மார்கஸ்,ஏங்கெல்ஸ்
6)வேலைநிறுத்தம் ஏன்?-விந்தன்
7)தமிழ்நாட்டுத் தொழிற்சங்க இயக்கம்-என் நினைவுகள்-பி.ராமமூர்த்தி
8)விந்தன் இலக்கியத் தடம்-மு.பரமசிவம்
9)ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்-ஜெயகாந்தன்
சாகித்ய அகாதமி-சென்னைப் பல்கலைக்கழகம்

(2014 ஜூன் 26 அன்று, சாகித்ய அகாதமி-சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறையும் இணைந்து எடுத்தக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது)

No comments:

Post a Comment