கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியிருக்கும் கிருதுமாலை
கவிதையை இந்த வார ஆனந்தவிகடனில் பார்த்தேன்.கிருதுமால் என்கிற சொல்லை எங்கோ படித்த ஞாபகம் முந்தி வந்தது. தமுஎகச அமைப்பின் பணி நிமித்தமாக அடிக்கடி மதுரை போய் வரும் நான்,மதுரையின் நாளிதழ்களை வாங்கிப் படிக்கும் பொழுது செய்திகளினூடாய் பண்பாடு,உள்ளூர் வரலாறு,இயற்கை,சுற்றுசூழல் குறித்த செய்திகளை படிப்பதுண்டு.அப்படியான ஒரு வாசிப்பில் இந்த கிருதுமால் சொல்லும் மனதில் தங்கிவிட்டது.
இன்று மதுரையில் சாக்கடையாக அறியப்படுகிற கிருதுமால் கால்வாய்,ஒரு காலத்தில் நதியாக இருந்து இராமநாதபுரம் வரை ஓடி,ஒன்றரை லட்சம் கிருஷிகாரர்களுக்கு விவசாயிகளுக்கு பயன்பட்ட நதியின் மணலை அள்ளி அள்ளி,நதியோட்டம் தடைபட்டு ,நதி பயணப்பட்ட படுகையெல்லாம்,குடியிருப்புகளாக குறுக்கப்பட்டு,அதன் மீதம் சாக்கடையாக அறியப்படும் பேரவலத்தை,அதன் ஆதி வரலாற்றை, கிருதுமால் தண்ணீரை குடித்து வளர்ந்த மக்களின் தொடர்ச்சியாக வந்து நிற்கும் தமிழச்சி தங்கபாண்டியன்,கிருதுமாலை கவிதை வழி பாடியிருக்கிறார்.
கிருதுமால் சொல்லை வாசிக்கும் பொழுது ஊடாக திருமால் என்கிற சொல்லும் வந்து நிற்கிறது.கிருதுநதி நடந்த நிலமெல்லாம் திருமாலின் இடமாக அவரைப் பின் தொடர்ந்த மக்களின் நிலமாக இருந்ததை உணர்த்தும் குறிச் சொல்லாக கிருதுமால் இருப்பதை உணரலாம்.
பழைய மாமதுரை சார்ந்து அழகர்,சுந்தரேசப்பெருமாள்,கள்ளழகர் என்கிற வைணவச் சொற்களும் வைணவத்தைப் பின் தொடரும் மக்களின் வாழ்நிலையும் உடன் வந்து நிற்கிறது.மதுரையின் மேற்கு கிழக்காய் ஓடிய வைகையின் தென்புறத்தில் ஊரும் சொக்கனும் மீனாட்சியும் அருள் பாலிக்க,ஊரின் வெளியே வடக்கு ஆற்றங்கரையைத் தாண்டி சுந்தேரசப்பெருமாள் என்கிற அழகர் என்கிற திருமால் மாமதுரையினுள் வரயியலாத அரசியலின் பின்னணியை,திருமாலைத் தொடரும் கிருதுமால் மக்களின் வாழ்வையும் இதனூடாக இணைத்துப் பார்க்க வேண்டி உள்ளது.
வைகைக்கு இணையாக நாகமலையில்(நாகமலை புதுக்கோட்டை) தோன்றி ஒரு முன்னூறு கிலோமீட்டர் சுற்றுவட்டார நிலத்தினூடே இராமநாதபுரம் வரை ஓடி பாசனத்திற்குப் பயன்பட்ட கிருதுமாலும் திருமாலைப் போலவே ஊரினுள்ளிருந்து புறப்படுத்தப்பட்டிருக்கிறது.
சமணர்களின் வழிபாட்டுக்குரியதாக நாகப்பாம்பு இருந்ததை நாகமலையோடு ஒப்பிட்டு,மதுரையில் சமணத்தை ஒழிக்க பாண்டியஅரசுக்கு நெருக்கமான சைவம் செய்த அனல்வாதம்,புனல்வாதம்,கழுவேற்றம் போன்ற அழிச்சாட்டிய கிருத்திரிம நிகழ்வுகள் எல்லாம் இந்தக் கவிதையை வாசிக்கையில் வந்து போவதை தடுக்க இயலவில்லை.
கவிதையின் முடிவில் தமிழச்சி குறிப்பிட்டிருக்கிற அரசின் 2011 ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கை `வைகைக்கும் கிருதுமாலுக்கும் தொடர்பு இல்லை’என்று சொல்லி முடிகிறது.
காலந்தோறுமான சமுகத்தின், சமுகத்தை வழி நடத்தும் ஆட்சியின் எதிரும் புதிருமான, பழமைக்கும் புதுமைக்குமான, முற்போக்கிற்கும் பிற்போக்கிற்குமான,நாத்திகத்திற்கும் ஆத்திகத்திற்குமான,ஒன்றிற்கும் மற்றொன்றிற்குமான, ஆட்சியாளர்களின் தேவைக்கும் பொதுமக்களின் தேவைக்குமான இடையில் நடைபெறும் கருத்துப் போராட்டங்கள்,திட்டங்கள் கருத்தை உள்வாங்கும் அல்லது மாற்றுக் கருத்தை முன் வைக்கும் மக்களின் வாழ்நிலையை அவர்களின் நிலத்தை நீரை, சூழலை பாதிப்பதை இதனூடாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
அரசிற்கும் அரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான, அரசின் உள்நோக்கு செயற்திட்டத்திற்கும் அதனால் சாக்கடையாகிப் போன நதிக்குமான முரண், நதியின் புலம்பலாக கண்ணீர் ஓலமாக அன்றைய நதியால் வாழ்ந்த மக்களின் ஆவலாதியாக விசனமாக வந்திருக்கிறது கவிதை.
பாண்டியர்களின் சைவசார்பு சமணம் வைணவத்திற்கு எதிரான, இவைகளைப் பின்பற்றும் மக்களுக்கு எதிரான சதியாக வைகை எதிர் கிருதுமால்,சொக்கன் எதிர் அழகர்,ஊர் எதிர் புறம் போன்ற எதிர் நிலைபாடுகளின் வழியாக இயங்கியதை வரலாற்று பொருள்முதல்வாத நோக்கில் அறிந்து கொள்ளலாம்.
ஆங்கில துரைமார்களின் காலத்திலும் புதிய துரைமார்களின் காலத்திலும் கிருதுமால் குறித்த வரலாற்று புரிதல் இன்றி,விளைநிலங்களை வேறு தேவைகளுக்கோ நகர்மயமாக்கலின் பொருட்டோ ஓடிய நதியோட்டத்தை முடக்குவது தேவை என்கிற அரசியல் சதிராட்டம் வழியாக,நதி சாக்கடையாக மாற்றப்பட்டு அதன் ஆதி ஓர்மை அறுபட்டு கிடக்கும் இடத்தை தொட்டுப் பேசுகிறது கிருதுமாலை.
நதியின் பாடாக மட்டுமின்றி நதியோடிய நிலத்தின் வரலாற்றை சொல்லும் உள்ளூர் வரலாறாக,மக்களின் வணக்கத்திற்குரிய ஒச்சம்மா,லிங்கம்மா,கச்சம்மா,எல்லம்மா போன்ற சிறுதெய்வ மரபை ஓர்மை செய்யும் பனுவலாக கிருதுமாலை தொடுக்கப்பட்டிருக்கிறது.
கவிதையின் இறைச்சியில் பாடுபொருளில் அதிகாரத்திற்கு எதிரான குரல்
ஒலிக்கிறது;இந்தக் குரல் வறவேற்கப்படவேண்டியது.கார்ப்பரேட்டுகளின்
உலகமயமாக்கலில் உள்ளூர் நிலமும் நீரும் சூழலும் கைமாறும் அரசியலுக்கு
எதிராக அவர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்
ஆட்சியாளர்களுக்கு எதிரான குரலை மக்கள் சார்பாக இலக்கியத்தில்
மனசாட்சியுள்ள ஒரோர் படைப்பாளியும் பதிவது தேவை.அது ஒச்சம்மாவின்
குரலாக துவரிமானின் குரலாக உள்ளூர் முகங்கொண்டு ஆங்காரமாகவும்
ஓங்காரமாகவும் ஒலிக்கட்டும்;வாழ்த்துகள் தமிழச்சி தங்கபாண்டியன்.
No comments:
Post a Comment