இணைந்த இதயம்

Sunday, June 16, 2013

மணிவண்ணனின் அகாலம்
இயக்குநர் நண்பர் மணிவண்ணன் அவர்களை 13 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பழைய படப்பிடிப்பு அரங்கில் ஒரு கலை இரவிற்கு அழைக்கும் பொருட்டு போய் சந்தித்தேன்;உடன் கலை இரவை நடத்தும் ஊரின் தோழர்கள் வந்திருந்தனர்.உள்ளே அவரை நான் தேட அவரோ,`தோழர் இந்தப் பக்கம் வாங்க’ என்று மரம் ஒன்றின் கீழ் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து எங்களைப் பார்த்து புன்முருவல் பூத்துக் கொண்டிருந்தார்.எங்களுக்கான இருக்கை எடுத்து வரச் சொல்லி,என்ன சாப்பிடுறீங்க என விசாரித்து, விவரத்தைக் கேட்டுக் கொண்டார்.சொன்னோம்.சரி வருகிறேன் என்று ஒத்துக் கொண்டு வந்தார்.

அன்றிலிருந்து தொடங்கிய எம் நட்பு அவரின் இறுதி வரைத் தொடர்ந்தது.நேரம் கிடைக்கும் பொழுது அவரைப் பார்க்க அவரின் திநகர் அலுவலகம்,வீடு என போயிருக்கிறோம். போகும் பொழுதெல்லாம் புதிய நூல்கள் குறித்த விசாரிப்பு,அரசியல்,சினிமா என பேசுவோம். தமுஎசவின் பல கலை இரவில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.2008 ல் அவர் விபத்து ஒன்றில் சிக்கி வீட்டு ஓய்வில் இருந்த பொழுது,தமுஎசவின் 11 ஆவது மாநில மாநாடு சென்னையில் நடக்க இருந்தது.அது பற்றி பேசினோம்.தான் மாநாட்டிற்கு வர இயலாது என்றார்.ஆனாலும் நிதி சேகரிப்பில் அவர் சொல்லி கதாநாயக நடிகர் ஒரு தொகை தந்து உதவினார்.

2004 ல் தமிழ்திரை உலக கலைமலர் ஒன்றை நாங்கள் கொண்டு வந்த பொழுதில் பல ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு ஆலோசனை தந்து உதவினார்.அவர் மகள் திருமணத்திற்கு அவர் அனுப்பிய அழைப்பு தாமதமாக கிடைத்ததால்,நேரில் சென்று வாழ்த்த இயலாததை சொன்ன பொழுது என்ன சம்பிரதாயம் தோழர்?விடுங்க; அடுத்தப் பணியைப் பார்ப்போம் என்று இயல்பாக பேசினார்.

இறுதி சில ஆண்டுகளில் முன் போல் பார்க்கவில்லை என்றாலும் தொலைபேசியில் பேசுவோம்;விசாரித்துக் கொள்வோம்.மணிவண்ணன் ஆரம்பத்தில்(1980) கோவையில் சோசலிஸ்ட் வாலிபர் முன்ணணியில் இருந்தார்.மார்க்சிஸ்ட் இயக்கத்தின் தொடர்பில் இருந்தார்.சினிமாவில் அவர் வளர்ந்த பொழுதும்,வேறு இயக்கத்தின் செல்வாக்கில் அவர் போன பொழுதும் தான் எங்கிருந்து புறப்பட்டோம் என்ற ஓர்மையை விட்டதில்லை.

அவருக்கு அஞ்சலி செலுத்த இன்று மாலை 4 மனிக்கு,கே.கே நகர் ஜெய்பாலாஜி நகர் வீட்டிற்கு சென்றிருந்தோம்.எளிய மக்கள் இரு பக்கமும் திரண்டு நின்றிருந்தனர்.சாரை சாரையாக அவர்கள் அஞ்சலி செய்து கொண்டிருந்தனர்.மணிவண்ணனோடு பழகிய பல கலைஞர்கள் வந்து சென்று கொண்டிருந்தனர். உடல் அருகே சீமான்,சத்யராஜ்,மனோபாலா அமர்ந்திருந்தனர். உடல் மீது அவர் இறுதியாக இருந்த நாம் தமிழர் அமைப்பின் புலிக் கொடி போர்த்தப்பட்டிருந்தது.

மதுரவாயல் மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ், நாம், சிகரம் செந்தில்நாதன்,தென்சென்னை தமுஎகச தலைவர்கள் அன்பரசன்,மயிலைபாலு வடசென்னை தமுஎகச செயலாளர் ஜேசுதாஸ் என நேரில் சென்று அஞசலி செய்தோம். நாம் போனதும் சீமான்,சத்யராஜ் கைக் கொடுக்க பற்றிக் கொண்டு நமது இரங்கலை இழப்பை புலப்படுத்தினோம்.அகால மரணம்.சினிமாவை செரிக்க வேண்டியவன் சினிமா சிக்கலில் மாட்டிக் கொண்டும்,நோய்மையில் சிக்கிக் கொண்டும் இறந்து போனது பேரிழப்பு..பேரிழப்பு..
படம்:தீக்கதிர் பிரகாஷ்

No comments:

Post a Comment