விஸ்வரூபம் தமிழ்நாட்டில் 7 ஆம் திகதி வெளியாகவிருக்கிறது என்பதை கமல் அறிவித்துவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கமலும்,நீதிமன்றத்திற்கு வெளியே தமிழகஅரசின் தலைமையில் கமல்,இஸ்லாமிய பழைமைவாத அமைப்புகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அரசு தரப்பும் படத்தை திரையிட தமக்கு ஆட்சேபனையில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இது குறித்த வழக்கு நடைமுறைகளை முடித்து வைப்பதாக நீதிபதி இராஜேசுவரன் அறிவித்துவிட்டார்.
ஆனாலும் கேள்வி நீடிக்கின்றது.தமக்கு ஒத்து வராத ஒரு கலைஞர் என்றால் அவரை பிடிக்காத நடிகராக்கி காட்டுவதும் ஒரு திரைப்படத்தை உடனடியாக முடக்குவதும்,அந்தக் கலைஞரை தம்மை அண்டி நிற்க வைப்பதும் என்பதான அரசாங்கத்தின் தொடரும் அராஜக நடைமுறைக்கு மாற்றம் தேவை என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது
மத்திய அரசின் சினிமேட்டோ கிராஃபி(1952) சட்டத்தின் 10 ஆம் பிரிவை ஒட்டி மாநில அரசு(1957)ஆண்டில் ஏற்படுத்திக் கொண்ட சட்டப்படி பராசக்தியில் ஆரம்பித்து தண்ணீர் தண்ணீர் வழியாக இன்று விஸ்வரூபம் வரை தேவைப்படும் பொழுதெல்லாம் பிடிக்காதவர்கள் மேல் இதனை ஆயுதமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர்.ஆட்சிகாலத்தில் கோமல் சாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகத்தை இயக்குநர் பாலசந்தர் திரைப்படமாக எடுத்தார்.இதை தனது இலட்சிய படம் என்றார் பாலசந்தர்.அப்போது செய்தித்துறை அமைச்சராக இருந்தவர் பெரியாரின் சீடர் என்று இன்றளவும் பேசிக் கொண்டிருக்கும் ஆர்.எம்.வீரப்பன்.இவர்கள் தான் தண்ணீர் தண்ணீர் படத்தை தடை செய்ய முயன்றார்கள்;மீறி இந்தப் படம் வந்த பொழுது ஆங்காங்கே ஆள் வைத்து மிரட்டினார்கள்.படத்தை எதிர்த்து கருத்துகள் சொன்னார்கள்..ஆனாலும் படம் வெற்றிகரமாக ஓடியது.
இவர்கள் படத்தை தடைசெய்ய முயலக் காரணம் படம் பேசிய அன்றைய அரசியல். எம்.ஜி.ஆர் தன் படங்களில் அரசியல் பேசுவார்;கொடி காட்டுவார்.தானே முதல்வராக இருந்த பொழுது இன்னொரு படம் மாநிலத்தின் அரசியலை பேசினால் பயந்து அலறி தடை செய்ய முயல்வார்.இதே எம்.ஜி.ஆர் திரைப்படத்தை தடை செய்யும் மசோதாவை 1987 ல் கொண்டு வந்த பொழுது பெரிய எதிர்ப்பை சந்தித்தார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் திரையுலகின் கோபத்திற்கு களம் அமைத்து சிறப்பு மாநாடு ஒன்றை சென்னையில் நடத்தியது.பின்னர் மசோதா கிடப்பில் போடப்பட்டது என்பது வரலாறு.
இதே பாதையில் ஜெயலலிதாவும் இறங்கி இருக்கிறார்.அதுவும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி சட்டப்படி அடிக்கப் பார்க்கிறார்.
தணிக்கைச் சான்றிதழ் பெறாத படங்களை பொதுத் திரையிடுதலிலிருந்து விலக்கி அமைதியை காக்க வேண்டி மாநிலத்திற்கு பொறுப்பளிக்கப்பட்ட `திரையிடுதலை முறைப்படுத்தும் சட்டத்தை ,தானே தணிக்கை வாரியம் என்பது போலவும் ,முழுப்பொறுப்பு என்பதாகவும் நினைத்துக் கொண்டு ,தணிக்கைப் பெற்ற படத்தை அமைதிக்கு குந்தகம் செய்யும் என்று சொல்லி பொதுத் திரையிடலிலிருந்து நீக்கி வைப்பது சட்டத்தை தன் தேவைக்கேற்ப வளைப்பது ஆகும்.
அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டப் பிறகு அதனுள் நின்று செயல்பட வேண்டிய அரசு அதை மீறுவது என்பது தவறான செயல்.அதிகார வரம்புப் பட்டியலை மாற்ற வேண்டும் என்று மாநில மக்களின் கருத்தையும் அறிந்த பிறகு மாநில அரசு இதற்கான இயக்கத்தை எடுக்க முன் வந்தால் அதை ஆதரிப்பது என்பது தனி.பிரச்சினை இப்பொழுது இதை ஒட்டி அல்ல.
விஸ்வரூபத்தை பொறுத்த அளவில் ஜெயலலிதா அரசு பொறுப்பை மீறி போக்கிரித்தனமாக நடந்து கொண்டது என்பதே யதார்த்தம். விஸ்வரூபத்தை15 நாட்கள் திரையிட தடை செய்ததை எதிர்த்து ஊடக உலகம,அரசியல் உலகம்,முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,திரை உலகினர்,பொதுமக்கள் கொந்தளித்ததை ஒட்டி சமரசம் செய்கிறேன் என்று இறங்கி வந்தார். மாநிலங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றப் படங்களை தம் மாநில எல்லைக்குள் கொட்டகையில் திரையிட லைசென்ஸ் என்கிற அனுமதி தர அல்லது மறுக்க மட்டுமே இயலும்.படத்தை தடை செய்யும் அதிகாரம் இல்லை.
தணிக்கை பெற்ற படத்தை மறு தணிக்கைக்கு உந்தித் தள்ளுவது என்பதோ,சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் நேரும் என்பதோ சொல்லும் இந்தக் காரணம் பெண்களை படுகேவலமாக சித்திரித்த பல தமிழ்ப் படங்களை எதிர்த்து பெண்கள் கொந்தளித்தப் பொழுது திரையரங்கின் முன் போராட்டம் நடத்திய பொழுது அரசு அசைந்து கொடுக்கவே இல்லை. பராசக்தி ,சிவப்புமல்லி,தண்ணிர் தண்ணீர் ,விஸ்வரூபம் என்று மட்டும் அரசு விஸ்வரூபம் காட்டி நின்றது;நிற்கிறது.
குறிப்பு:நண்பர்களின் வருகையும் வாசிப்பும் உவப்பு தருகின்றது.
உங்கள் கருத்தை மேலும் தெரியப்படுத்துங்கள்;விவாதிப்பு பார்வையை துலக்கமாக்கும்;நன்றி
Well said. Samy
ReplyDeleteநன்றி சாமி
ReplyDelete