Sunday, October 21, 2012

தமிழ்த் தொலைக்காட்சிகள் மீதான எதிர்பார்ப்புகளும் ராபர்ட் முர்டோக்குகளின் வியாபாரமும்


90 களில் இருந்த தூர்தர்ஷன்,பொதிகை தொலைகாட்சிகளில் வெள்ளி ஒளியும் ஒலியும்,ஞாயிறு அன்று தமிழ் திரைப்படம் போக மீதி அனைத்து நாட்களிலும் இந்தி தொடர்கள்,ஆங்கில தொடர்கள் என்றிருந்த காட்சி ஊடகச் சூழலில் எழுந்த தமிழ்மொழி நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள்,கோபங்களுக்கு தீர்வு போல் வந்த ராஜ் தொலைகாட்சி பின்னர் வந்த சன் டிவி,அடுத்து வந்த ஜெயா டிவி என்று ஆரம்பித்து அடுத்து வந்த 22 ஆண்டுகளில் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து நிற்கிறது.அடுத்து சில மாதங்களில் மேலும் சில தொலைகாட்சிகள் வர இருக்கின்றன.இப்படி பெருகி விட்ட தமிழ் தொலைகாட்சிகளால் தமிழ் சிதைக்கப்பட்டு தமிங்கிளிஷ் ஆட்டம் போடுகின்றன என்று எழுந்த ஆவலாதிகளுக்கு மக்கள் தொலைகாட்சி இடைப்பட்ட ஆண்டிகளில் பதில் சொல்ல முயன்று ,பின்னர் இதுவும் தமிழ் இசை என்றால் இந்து,சைவம் சார்ந்த ஆன்மீகப் பாடல்கள் என்று கீழிறங்கி,விளம்பரத்தின் உண்மைத் தன்மைக்கு பொறுப்பல்ல என்று அறிவிப்பு செய்து விட்டு டெலிஷாப்பிங் செய்யும் அலைவரிசையாக சுருங்கி விட்டது. 

இந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளில் இத்தனை தொலைக்காட்சிகளால் தமிழ்ச்சமுகம் பெற்ற பெறுமதி என்ன என்கிற போது  பெரு நிறுவனப் பொருட்களின் நுகர்வோர்களாக மாற்றப் பட்டதோடு  அவைகளின் தனியார்மய ,தாராளமய  பொருளாதார அரசியல் சார் நோக்கிற்கு உகந்த பண்பாட்டு  நிகழ்வுகளை வழிமொழியும் ஊடகமாக தமிழும்,தமிழர்களும் மாற்றப்பட்டு இரு பெரும் கழகங்களுக்கு இடையில் ஆடப்படும் பல்லாங்குழி காய்களாக ஆக்கப்பட்டதான சோகமே மேடிட்டு நிற்கிறது. 

தேன்கிண்ணம்,தேனும் பாலும்,அமுத கானம்,தேனருவி  காலைநேர திரைப்படப் பாடல்களோடு,சினிமா ட்ரைலர்,மேட்னி ஷோ என்கிற  நண்பகல் திரைப்படம் போக  பெரும்பாலும் பொழுதுபோக்கு அலைவரிசைகளில் நெடுந்தொடர் முக்கிய பங்கு வகிக்கிறது.இப்பொழுது திரைப்படத்திற்கென தனி அலைவரிசைகளை முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருகின்றன.செய்திக்கென தனி அலைவரிசைகளை அதே முன்னணி தொலைகாட்சி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.  

சிறுவர்களுக்கென கதை சொல்லி சுட்டி டிவி,போகோ டிவி குதூகலப்படுத்தி வருகின்றன.பள்ளிக்கு போகும் போதும்,பள்ளி விட்டு வந்த பிறகும் அவர்களை சந்தோசப்படுத்துபவைகளாக தற்போது இவைகள் இருக்கின்றன.தொடர்களின் குழந்தைகள் பேசும் மொழியை பின்பற்றி,வீடுகளில் பாவனை மொழி பேசியும்,வளர்ந்த குழந்தைகள் பொம்மை  துப்பாக்கி பிடித்து மிரட்டியும்,சுட்டும் விளையாடி வருவதை இதன் பாதிப்பாக கொள்ள வேண்டி உள்ளது. 

இப்போது தொலைக்காட்சி தொடர்களுக்கு புதிய வகை பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்.வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் பெண்களின் பொழுதுபோக்கு என்று கிண்டலடிக்கப்பட்ட இத்தொடர்களுக்கு இன்று இளந்தலைமுறையினரிடம் வறவேற்பு இருக்கிறது.நீ தெருவில் நிற்க வேண்டும்.தெருத் தெருவாய் அலைய வேண்டும்.நீ சித்திரவதைப் பட்டு சாவதை நான் பார்க்க வேண்டும்.என்றெல்லாம் கண்ணை உருட்டி,பல்லைக் கடித்து கொடூரமாய் பேசும் வசனங்கள் இல்லாத தொடர்களே இல்லை.விஜய் தொலைகாட்சியின் நிகழ்ச்சிகள் சற்று மாறானவை.அதில் வரும் தொடர்கள் குடும்பவெளியைத் தாண்டிபள்ளி,கல்லூரி,அலுவலகம்,நகரவெளி என நகர்ந்து தொடர்களைத் தருகிறது.(அ.ராமசாமி;இந்தியா டுடே 2012 மார்ச் 21) 

இத்தொடர்களின் மொழி, மொழிமாற்றம் செய்யப்பட்ட தொடர் உட்பட காட்சி ஊடகத்திற்கான மொழியாக இல்லாமல் அதி உணர்ச்சிகளை காட்சிபடுத்தும் மொழியாக இருக்கிறது.பெண்கள் உக்கிரமாக அழுகிறார்கள்;சூது செய்கிறார்கள்;இவர்களின் காட்சிப்படுத்துததலே அச்சமூட்டுகிறது.மதம்,கடவுளோடு சம்மந்தப்படாத வாழ்வையோ,மனிதர்களையோ பெரும்பாலும் பார்க்க முடிவதில்லை.எளிய மக்களின் வாழ்வு இங்கே பதிவாவதில்லை  

காலையில் ராசிபலன் அனைத்து அலைவரிசைகளிலும் சொல்லப்படுகிறது.தினம் ஒரு திருத்தலம்,அருள்நேரம்,திவ்யதரிசனம்,ஆலய தரிசனம்,ஜீசஸ்கால்ஸ்,கந்தசஷ்டி கவசம் என சன்,கலைஞர் தவிர அனைத்து தொலைக்காட்சிகளும் பக்தியில் திளைத்து கல்லாவை கவனிக்கின்றன.பொதிகை,வின்,தமிழன் தொலைக்காட்சிகளில் கட்டண நேரத்தில் கிருத்துவ,இஸ்லாமிய பரப்புரை செய்யப்படுகிறது.  

உள்ளுர் செய்திகள் என்ற தன்மையில் தினத்தந்தி பாணி செய்திகள் சன்,கலைஞர்,ஜெயாவில் ஒளிபரப்பபடுவது சலிப்பைத் தருகிறது.முன்னர் விஜய்யில் பார்த்த பினராய் ராயின் என்.டி.டி.வி வழங்கிய தரமான செய்திகள் போல் இல்லாவிட்டாலும்,மற்ற தொலைகாட்சிகளோடு ஒப்பிடுகையில் பார்க்க கூடிய அளவில் இருக்கின்றன புதியதலைமுறை செய்திகள்.டெல்லி.லண்டன் என்று செய்தி நிகழும் களங்களுக்குச் சென்று செய்தியைத் தருவது பாராட்டக்கூடியது 

 சூப்பர் சிங்கர்,ஜூனியர் சிங்கர்,நீயா நானா,சரவணன் மீனாட்சி,சத்யமேவே ஜெயதே போன்ற விஜய் தொலைக்காட்சியின்  நிகழ்சிகள் ,படித்த இளைஞர்களை,குழந்தைகள்,பெண்களை  புதிய தேடல் ரசனை கொண்ட நேயர்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டது.விஜய் பன்னாட்டு ஊடக முதலாளி ராபர்ட் முர்டோக்கினுடையது என்பதை மனதில் கொள்ளவும் 

 பன்னாட்டு நிறுவனங்கள்,உள்நாட்டு பெருநிறுவனங்களின் விளம்பரங்களே நிகழ்ச்சிகளின் தன்மையை நிர்ணயிக்கிறன.தொலைகாட்சி நேயர்களின் பார்வையை தனக்கு சாதகமான முறையில்  சுயநலம் கொண்டவர்களாக,வாய்ப்புகளை சுகிக்கும் அதீத ஆர்வம் கொண்டவர்களாக  ,அதற்காக எதையும் செய்யும் மனம் கொண்டவர்களாக மாற்றி தமது சந்தை கலாச்சாரத்தை உறுதிப்படுத்தவும் விரிவுப்படுத்தவுமான முறையில் தொடர்களை தயாரிக்கவும் செய்கின்றன

.எனது தங்கம் எனது உரிமை என்று ஒரு ஜூவல்லரி விளம்பரத்திற்காக  சமுக மாற்றத்திற்கான புரட்சியை கொச்சைப் படுத்திய விளம்பரத்தையும் காண முடிந்தது. பொருட்களுக்கான அறிமுகச் சந்தை தொட்டு விற்பனை உயர்வு வரை பெண்கள் காட்சிப்படுத்தப் படுகிறார்கள்.காட்சிப்படுத்துதலில் ஆபாசமும் வக்கிரமும் தலை தூக்கி ஆடுகிறது.ஒரு நறுமணப் பொருட்களுக்கான விளம்பரத்தில் இதைப் பயன் படுத்திய ஆடவனோடு உடன் வந்தவனை விட்டு விட்டு பெண் செல்வதாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

நேர்முகம்,சந்தித்த வேளையில், போன்ற நிகழ்வுகள் அன்றி படைப்பாளர்கள் ,கலைஞர்கள் பங்கு பெறும் வேறு நிகழ்வுகள் இல்லை.கவிதை,நூல் அறிமுகம்,புதிய கலைகளின் அறிமுகம் இல்லை என்றாகி விட்டது.இலக்கிய விழாக்கள் ஒளிபரப்பபடுவதில்லை.பொதிகையில் இதற்கான வாய்ப்புகள் உண்டென்ற போதும் நிகழ்ச்சி தயாரிப்புகளில் அதனிடம் அழகியல் கவனம் இல்லாததால் அது நேயர்களை ஈர்க்க முடியாமல்  இருக்கிறது. ரியாலிட்டி ஷோ என்ற  பெயரிலான நிகழ்வுகள் அதில் பங்கேற்கும் குடும்பத்தவரின் தவறுகளை ஊரறியக் காட்டி அசிங்கப்படுத்துவதிலும் இதனால் மனமுடைந்த  சிலர் இறந்த நிகழ்வையும் காண நேர்ந்தது.



அரசு,அரசு சார்பு நிறுவனங்கள் அன்றி தனியார் முதலீட்டில்  சமுக நோக்கின்றி  பெருலாப நோக்குடனே இயங்கும் அமைப்பு எதுவும் மக்களின்  வாழ்வின் மீதோ அவர்களின் நலன்கள் மீதோ அக்கறை கொள்ளாது. வாழ்க்கை,பண்பாடு குறித்து ஜனநாயக மத சார்பற்ற  கவனம் கொண்டு இயங்க வேண்டிய அச்சு,மின்னணு ,காட்சி ஊடக அமைப்புகள் தனியார் கையில் இருப்பது  பொருள் குவிப்பிற்கான  வாசலாக இருக்குமே அன்றி முன்னேற்றத்திற்கான பண்பாட்டுப் பாதைக்கு உதவாது.

3 comments:

  1. well written article!!thanks---chezhiyan,tanjore.

    ReplyDelete
  2. என்னது தமிழ்நாட்டில் நாற்பத்தொரு தமிழ் சனல்களா உண்மையாகவா? தயவு செய்து என்னென்ன என்று பெயர் தர முடியுமா ?எனக்கு தெரிந்தது ஏழு,எட்டு சனல்கள்தான்.
    அடுத்து நால்லதொரு அலசல் ,உண்மையில் சினிமாவை தாண்டி வேறு எதையும் சிந்திக்க மாடார்களா?விஜய் ஒன்றுதான் சற்று வித்தியாசமாக செய்கிறார்கள்.இங்கு முன்று தமிழ்நாட்டு சானல்கள் தான் பார்க்க முடியும்
    எத்தனையோ செய்யலாம் .தமிழை கெடுத்ததை தவிர என்ன செய்துவிட்டார்கள் .மக்கள் நினைத்தால் மாற்றலாம் இவர்களை

    ReplyDelete
    Replies
    1. ஆம் மக்கள் நினைத்தால் மாற்றலாம் கரிகாலன்.உங்கள் பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி.
      ராஜ்,ராஜ் செய்தி,ராஜ் ப்ளஸ்,சன்,சன் செய்தி,கேடிவி,ஆதித்யா,சன் மியூசிக்ஸ்,சுட்டி டிவி,சன் லைப்,சன் ஆக்சன்,சிரிப்பொலி, கலைஞர்,கலைஞர் செய்தி,இசையருவி,முரசு,ஜெயா,ஜெயாசெய்தி,ஜெயா ப்ள்ஸ்,ஜெயா மூவி,மக்கள்,தமிழன்,வசந்த்,வின்,மெகா,சீ,பொதிகை,விஜய்,ஜீடிவி,புதிய தலைமுறை,சங்கரா,சத்யம்,பாலிமர்,கேப்டன்,கேப்டன் செய்தி,இமயம்,எண்டிடிவி ஹிந்து,போகோ,தமிழ் டிஸ்கவரி,தமிழ் ஹிஸ்டரி,

      Delete