இணைந்த இதயம்

Sunday, December 25, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி 17


                                                  
அடையாள அரசியலினூடாய்  அவன் 

கால ஓட்டத்தில் எல்லா காலத்திற்குமான மானுடத்தின் உள்ளத்தை,உணர்வை பதிந்து கொள்கிற படைப்பு கால வெளியில் காலூன்றி பயணிக்கும்.இதையே இன்னொரு நோக்கில் தீர்க்கப்படாத முரண்களை,சிக்கல்களை உள்வாங்கிக் கொள்கிற ஒரு படைப்பும் காலம் தாண்டி நிற்கும்.முரண்கள் தீர்க்கப்பட்டிருந்தாலும் முரண்களைப் பேசிய படைப்பும் அந்த காலத்தின் சுவடாக,தரவாக அடுத்த தலைமுறைக்கு வந்து உதவும். 

,நிகழ்தேவைகளுக்காக  கடந்த காலப் படைப்பை  பார்க்கிற பொழுது அந்த  படைப்பின் காலத்தின் வகிபாகத்தை  கவனியாமல் மறுக்கும் பார்வை ஊனம் கொண்ட மட்டுப்பார்வை .அதே பொழுது எந்த படைப்பும் விமர்சனத்திற்கு அப்பற்பட்டதல்ல;காலம் தாண்டிய மறுவாசிப்பில் புதிய புரிதல்கள் கிளைக்கக் கூடும்.அந்த வாசிப்பின் மையம் படைப்பு தொழிற்பட்ட காலத்தில் ஊடாட வேண்டும் அல்லாது சொந்த கருத்தாடலுக்கு உகந்த கன்ணாடி அணிந்து கொண்டு ஒன்றுமே இல்லை என பகடி செய்வது நேர்மை சர்ந்த ஆய்வு அல்ல. 

இன்று அடையாள அரசியல் பார்வை உலகாளவிய முறையில் எது சார்ந்தும் மறுக்க பிரயோகிக்கப்படுகிறது.இதை முன்னெடுக்கிற வலதுசாரி சக்திகள் வர்க்கப் பார்வைக்கு எதிர் பார்வையை முன் வைக்கிறார்கள்.இடதுசாரிகள் பாட்டாளி xமுதலாளி என்கிற எதிரை வைக்கிற பொழுது,சாதிகள்,மதங்கள் சார்ந்தவர்களை இல்லாதவர் x இருக்கிறவர் என்ற வர்க்க எதிர் கொண்டு  பார்க்கிற பொழுது,முழு மாநிலம் முழு தேசம் பாதுகாப்பானது என்றால் தனி நாடு,தனி மாநிலம்,சாதி, உட்சாதி என வர்க்க அரசியலுக்கு எதிர் எடுத்து முற்போக்கு சக்திகளுக்கு ஊறு செய்கிற பார்வை கொண்ட இந்த அடையாள அரசியல் ,இலக்கியம் மொழி என  யாவற்றையும் மறுக்கிற வன்முறைப் பார்வையை பாரதியின் மீதும் வைக்கிறது. 

இன்று பிற்படுத்தப்பட்ட ,ஒடுக்கப்படும் சாதி சார் புதிய பணக்காரர்கள் மத்தியில் புது வடிவாய் உலாவரும் பிராமணிய சனாதனத்தை அவதானிக்காமல்- உருவாகி வரும் சூத்திர பிராமணர்களை பாராமல்-தான் வாழ்ந்த காலத்தில் சாதியை மறுத்த-பிராமணிய சனாதனத்தை விமர்சித்த-பாரதியை இன்று ஒரு சாரார் பார்ப்பான் என்றும்-இந்துத்வா சக்திகள் அவனை இந்து மத காப்பாளன் என்று மறுப்பதையும் சுமப்பதையும் காண்கையில் நகைத்து பகடி செய்யவே தோன்றுகிறது.பென்ணியம் பேசுகிற ஒரு பிரிவு பெண்கள் பாரதியை கீழ்நிலையில் வைத்து பேசுவதையும் கவனிக்க முடிகிறது. 

இந்தப் பின்னணியில்  பாரதியின் காலம்,இடம்,அரசியல் வர்க்கம்,இலக்கியம்,சமயம்,சாதி,பெண்ணியம், குறித்து புதிய வாசிப்பின் அரசியல் முன்னெடுக்கப்பபடும் சூழலில் மொத்தக் கவிதைகளுள் பெரிதும் பயிலப்படாத அவன் கவிதைகள் வழியாகவும்,அவன் எழுத்துகள் வழியாகவும் நவீன தமிழ்பரப்பிற்கு அவனை மறுஅறிமுகம் செய்ய மேலிட்ட ஆவலின் விளைவாய் இந்தத் தொடரின் சாத்தியத்தை தீக்கதிர் ஆசிரியர் குழுவும் , இலக்கியச் சோலை பொறுப்பாளர் மயிலை பாலுவும் வழங்கினர்.ஏராளமான நண்பர்கள்,தோழர்கள் நூலாக வெளிவர வேண்டுமென்ற ஆவலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.விரைவில் நூலாகவும் வெளிவர உள்ளது. 

நான்கு மாதம்,17 வாரங்கள் தொடர்ந்த கட்டுரைக்கு  கிடைத்த பெரிய வறவேற்பு ,உற்சாகத்தை பாரதிக்கு கிடைத்த மரியாதையாக ,மீண்டும் மீண்டும் யாவராலும் பாரதி பயிலப்படுகிறான் என்பதாக எடுத்துக் கொள்கிறேன்.பாரதி மறைந்த இந்த 90 ஆண்டு காலத்தில் அவனைப் பற்றி அவன் படைப்புகளைப் பற்றி மறைமலை அடிகள் நூலகத்தின் பதிவுப்படி 500 றிற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்பதே பாரதி பரவிக் கொண்டு இருக்கிறான என்பதைச் சொல்கிறது. எந்தத் தடைகளாலும் திரிபுகளாலும் பாரதி தேங்கிவிட மாட்டான் என்பதையும் வந்த நூல்கள் உணர்த்துகின்றன.பாரதி பற்றிய நேர் புரிதலுக்கு ,கம்யூனிஸ்ட்கள்,இடதுசாரிகள் ,முற்போக்காளர்கள்  சார் படைப்பாளிகள்,இயக்கத் தலைவர்களின் பங்களிப்பு முக்கியமானது. 

தன் காலத்தில் பாரதியும் அவ்ன் சார்ந்த குடும்பம்,தோழர்கள் அடைந்த துன்பங்கள்,துயரங்கள் அளவிடற்கரியது கைது,இரட்டை ஆயுள் தண்டனை,நாடு கடத்தல்,தலைமறைவு ,குடும்ப வாழ்கையை வேவு பார்த்தல்,அடக்குமுறை எனத் தொடர்ந்த காலத்தில் வாழ்க்கையை பணயம் வைத்து தன் அரசியற் கொள்கை வெற்றி பெற,நாடு விடுதலை பெற சூறாவளியாய் சுழன்ற தீச்சுடர் பாரதி.. 

கொள்கைக்கும்  செய்கைக்கும் உள்ள தூரம் என்கிற தன் கட்டுரையில் இப்படி எழுதுகிறான் பாரதி:
கொள்கைக்கும் செய்கைக்கும் ஒற்றுமை இருக்கிறது.பகுத்தறியும் சக்தி இல்லாத எவனுக்கும் கொள்கையென்று ஒன்று இருக்காது.தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய மனதால் ஒப்புக் கொள்ளும் கருமத்தொடரின் அஸ்திவாரம்.தான் குடிக்கும் காபிக்காகவும்,தான் தின்னும் சோற்றிற்காகவும் ,தான் உடுத்தும் ஆடைக்காகவும்  ஒருவன் தன்னுடைய அருமையானக் கொள்கைகளைக் கைவிடுவானானால் அவனினும் பதரான மனிதன் ஒருவன் இருக்க முடியாது. 

இத்துனை அழுத்தமான  காத்திரமான நேர்பார்வை கொண்டவன் பாரதி.இந்தக் கொள்கைக்காகவும்,மானுட மேன்மைக்காவும்,தனிநபர் சுதந்திரத்திற்காகவும் தீ நடுவிடை தன் எழுத்தை,வாழ்வை வைத்தான்.பகலில் இருக்க ஒரு வீடு;இரவில் படுக்க நண்பர்கள் வீடு என கொள்கையைக் காப்பாற்ற அல்லாடினான்.தனிநபர்கள் மீது மிகுந்த அன்பும்,நேயமும் கொண்டவன். பிரிட்டிஸ் அரசோடுதான் பகையே தவிர தனிப்பட்ட முறையில் பல வெள்ளைக்கார அதிகாரிகள் நண்பர்கள் மீது நட்பை பேணினான்.தொடுக்கப்படுகிற தாக்குதல்களை கண்டு சினந்தான்.அவைகளை சட்டப்படி சந்திக்கவும் முயற்சித்தான்

.கொள்கைக்கும்  செயலுக்குமான ஒற்றுமையை  பெரும்பாலும் கடைபிடித்தான்.சில நிகழ்வுகளில் அவன் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் இன்று சமரசம் என்ற சொல்லில் அர்த்தப் படுத்தப்படுகிறது.பிரிட்டிஸ் அரசுக்கு எதிரான திலகரின் தேசபக்த புதிய கட்சியின் மீதான கடும் அடக்குமுறை,தலைவர்கள் நாடு கடத்தப்படல் போன்ற அன்றைய நிர்க்கதியான சூழலில் தற்காத்துக் கொள்வதற்கு இந்த சில செயல் தவிர்க்க முடியாதது.. என்றே புதிய வாசிப்பில் கொள்ள வேண்டி உள்ளது.மாற்றப் படவேண்டிய.சமூகத்தில் வாழ்கிற பொழுதே அந்த சமூக அரசியலின் சில வாய்ப்புகளை பயன்படுத்தாமல் அழிவதுதான் வீரம் என்பது விவேகம் அல்ல. 

தன் இறுதி வரையிலும் கவிதையில் தெறித்த அரசியலுக்கும்,அரசியலில் சுடர்விட்ட படைப்பிற்கும் பாலமாக செயல்பட்டான் பாரதி. 
பயமறுத்து பொய்மைச் சாடி,காக்கை குருவியும் கூட தங்கள் உறவாகும் போது,கடலும் மலையும் தங்கள் கூட்டம் என்கிற பொழுது யாவரும் தம் உறவாக,தாமே யாவருக்குமான உறவாகக் கண்ட சமத்துவம்,சுதந்திரம்,சகோதரத்துவமாய் ஒளிர்ந்த அவன் கவிதை; பொதுவுடைமையைப் புரிந்து கொள்ள முயன்ற அவன் படைப்பு என்னாளும் சோதிமிக்க நவகவிதை. 

ஜயபேரிகை கவிதை இதோ: 

ஜயபேரிகை  கொட்டடா-கொட்டடா
ஜயபேரிகை  கொட்டடா கொட்டடா 

பயமெனும்  பேய்தனை யடித்தோம்-பொய்மைப்
    பாம்பைப்  பிளந்துயிரைக் குடித்தோம்
வியனுல கனைத்தையும்  அமுதென நுகரும்
    வேத  வாழ்வினைக் கைப் பிடித்தோம் 

இரவியினொளியிடைக்  குளித்தோம்-ஒளி
    இன்னமு  தினையுண்டு களித்தோம்
கரவினில்  வந்துயிர்க் குலத்தினை  யழிக்கும்
    காலன்  நடுநடுங்க விழித்தோம் 

காக்கை குருவி எங்கள் ஜாதி –நீள்
    கடலும்  மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந்  திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
    நோக்க  நோக்கக் களியாட்டம்

No comments:

Post a Comment