ஆற்றுபடுத்தும் ஆணை
பூம்புகார் பிரசுரத்தார் வெளியிட்ட பாரதியார் கவிதைகள் நூலில் ஞானப் பாடல்கள் பகுதியில் உள்ள சென்றது மீளாது கவிதை இது:
சென்றதினி மீளாது மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
மக்கள் மீது பேரன்பு கொண்டு அவர்கள் எதிர்கொள்ளும் வாதைகள் அழிந்து போகும்;எதற்கும் எப்போதும் கவலை கொள்வதை தவிர்த்து நடக்கும் செயல்களை மனதில் நிறுத்தி இன்று புதிதாகப் பிறந்தோம் என்று கவலை அற்ற மகிழ்ச்சியான மனதோடு வாழுங்கள் என்று சொல்வது குறி சொல்லும் முறை அல்ல.
தன்னை சமூகத்தை சுற்றி நடக்கும் மாற்றங்களை உள்வாங்கிக் கொள்கிற அரசியல் சார் கவி மனது,மாற்றங்களை உருவாக்கும் புதிய சக்தி மீது ,புதிது புதிதாய் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்கள் மீது பேரவா கொண்டு ,இவர்களால் மாற்றம் வரும் என்று நம்பிக்கை சுமந்து ,இவைகள் பற்றி தெளிவில்லாத ,கஞ்சி குடிப்பதற்கு இயலாத காரணம் இவை என தெளிவு இல்லாத எளிய மக்கள் மீது நேசம் கொண்டு ,அவர்களின் தலை வருடி,கரம் தொட்டு கவலை விடு;மாற்றம் வரும் என ஆறுதல் சொல்ல ஆழ்ந்த அரசியல் கவிமனதால் மட்டுமே இயலும். ஆற்றுப்படுத்துவது புரட்சிகாரர்களுக்கு மட்டுமே சாத்தியம்.ஏனெனில் இவர்கள் அரசியல்,பொருளாதார,பண்பாட்டு காரணிகளால் மாற்றம் சாத்தியம் என்ற அறிவியல் பார்வை உடையவர்கள்.பாரதி இப்படியான தெளிவு கொண்டவன்.
பாரதி மறைந்து 5 மாதங்களில் அவன் விருப்பப்பட்டபடி அழகிய தாளில்,உயர்வான அச்சில்,அழ்கிய எழுத்துகளில் அவர் மனைவி செல்லம்மா ஸ்வதேசகீதங்கள் என்ற பாரதியின் இரண்டாம் தொகுப்பை வெளியிடுகிறார்.அதில் ஆங்கிலத்தில் ஒரு முன்னுரை.10 பக்கம் கொண்டது.அதுவும் அவரின் அரசியல் வாழ்க்கை குறித்த முன்னுரை.அதில் சில வரிகள்:
“தமிழ் மறுமலர்ச்சியை முன்னெடுத்த முன்னோடி மறைந்து விட்டான்.தேசியத்தால் ஈர்க்கப்பட்ட புறநானூற்று பாணன் மறைந்து விட்டான்.ஆனாலும் பல நாயகர்களைப் போல இவனும் தன் வசீகர புல்லாங்குழல் பாடல்களால் நம்மோடு வாழ்கிறான்.ஒரு தடவை வாழ கிடைத்த வாழ்க்கையில் ,ஏராளமான மாநாடுகள்,குழுக்கூட்டங்களில் ஆளும்கூட்டத்தை கீழிறக்கும் வண்ணம் அவன் குரல் ஒலித்தது.அதே பொழுது அதிகாரகூட்டத்திற்கு எதிராக தமிழ்நாடெங்கும் அனற்வரி பூண்ட கவிதைகளை பாடினான்;எழுதினான்”
இந்த முன்னுரையை பாரதியின் நண்பரும்,தொழிற்சங்கத் தலைவருமான,பாரதியை ஆற்றுபடுத்தியவர்களுள் முக்கியமானவருமான வி.சக்கரை என தன்னை அழைக்கும் சக்கரை செட்டியார் எழுதி இருக்கிறார்.
இத்தகைய தெளிவு கொண்ட பாரதி,நாட்டு விடுதலையில் எளிய மக்களை நாட்டம் கொள்ளச் செய்ய இந்த ஆறுதலை கவித்துவ வரிகளில் அதே பொழுது,உரிமையோடு அதட்டிஓர் ஆணையிடும் தோரணையில் பாடிச் செல்கிறான்.இந்த உரிமையும் ஆணையிடுதலும் யாவருக்கும் வாய்த்து விடாது.மக்களை நேசிக்கிற ,மக்களால் நேசிக்கப்படுகிற ஆளுமைகளுக்கு மட்டுமே இது இயலும்.இது ஆணவக்குரல் அல்ல.ஆணவக்குரல்களை அடிவருடிகள் மட்டுமே ஏற்பர்.மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பாரதியின் ஞானப்பாடல்களை நம்மால் கடந்துவிட இயலாது.அவனின் தத்துவதரிசனம் அங்கே துலங்குகிறது.அவனின் ஞானப்புதையல் அது.தொடக்க காலத்தில் அவன் கொண்டிருந்த பல தெளிவின்மைகளிலிருந்து அவன் அனுபவம் சுடரும் பகுதி அது.பலவித வடிவமைப்பில் பல கோணங்களில் உண்மையை தேடும் இடம் அது.இது விதந்தோதுதல் அல்ல;அவன் மனதின் இயல்பை புரிந்து கொண்ட பின் எழுந்த அலைஓசை இது.