Saturday, August 20, 2016

காடெல்லாம் பிச்சிப்பூவு








  https://www.youtube.com/watch?v=yg1uGOPHW-s
காடெல்லாம் பிச்சிப்பூவு....
கரையெல்லாம் செண்பகப்பூ..
கரையெல்லாம் செண்பகப்பூ...

இந்த வரிகளை எங்குக் கேட்டாலும் அப்படியே சொக்கி நின்றுப் பாடலைக் கேட்பேன். அப்படி சொக்குவதற்கு இரண்டு காரணம் உண்டு.

ஒன்று இளையராஜாவின் இசையிலும் குரலிலும் கேட்பது. தெம்மாங்குப் பாடல் வடிவில் மிக எளிமையாக இனிமையாகப் பாடி இருப்பார் ராஜா. அப்படியே மனசைப் பிசையும் இசை அது.

இரண்டாவது பிச்சிப்பூக் காடுகளைக் கன்ணாரக் கண்டவன். அந்தக் காடுகளில் ஓடியாடி விளையாடியவன்.தலைக்கு மேல் வளர்ந்திருக்கும் பிச்சிப்பூச்  செடிகளை , எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை,ஆரல்வாய்மொழி,வெள்ளமடம் போன்ற ஊர்களின் புன்செய் காடுகளில் , 75 க்குப் பிற்பாடு முதல் இன்று வரை பிச்சிப்பூ பயிர் செய்தல் நடந்து வருகின்றது.

வானம் பார்த்தப் பூமி என்பதால், முன்னர் சோளம்,கம்பு,வரகு, நிலக்கடலை,பருத்தி என பயிர் செய்த காலம் போய், பக்கத்து எல்லையான கேரளாவில் பூவிற்கு நல்ல கிராக்கி என்பதால், வயிற்றுப் பிழைப்பிற்கு என்று, முன் சொன்ன பயிர்கள் பயிரிடுதல் யாவும் பின்னுக்குப் போய், எங்கள் ஊரெங்கும் பிச்சிபூ காடு வளர்ந்து இன்று  பசியை ஓரளவுப் போக்கிக் கொண்டிருக்கிறது.

பிச்சிப்பூக் காடுகளில் தினசரி பூக்களை கொய்ய பெண்களும் சிறுவர்களும் போவார்கள்.அமுல் பால்பவுடர் டப்பா அளவிற்கு பூக்களைக் கொய்து தந்தால், 50 பைசா தருவார்கள். மாதம் குறைந்தது 15 ரூபாய் கிடைக்கும். காலையில் சூரியன் உதிக்கும் சற்று முன் காடுகளில் புகுந்து, காலை 7 வரை பூக்களை கொய்யலாம். அன்று வெளிச்சந்தையில் அரிசி கிலோ 2 ரூபாய் .இந்தக் காசில் 7 கிலோ அரிசி வாங்கலாம். சினிமா டிக்கெட் 50 பைசா முதல் 1 ரூபாய் வரை இருந்தது. வாரம் தோறும் ஊர் , டூரிங் டாக்கிசில் சினிமா பார்க்கலாம்.ரொம்ப ஆசை எனில் திருவனந்தபுரம் போய் செம்மீன்,சகாவு, மீனமாசத்தில் சூரியன் என்று பார்த்து வந்த நாட்களும் உண்டு.

அவன்தான் மனிதன், சில நேரங்களில் சில மனிதர்கள், புதிய அடிமைகள், கண் சிவந்தால் மண் ,சிவக்கும்,உதிரிப்பூக்கள், புதிய வார்ப்புகள், நினைத்தாலே இனிக்கும் ,அன்னக்கிளி, பூட்டாதப் பூட்டுகள்,கரையெல்லாம் செண்பகப்பூ, என்று இந்தக் காசில் தேடித் தேடி படம் பார்த்தது உண்டு.
இந்த பால்ய நினைவுகள் யாவையும் இந்தக் காடெல்லாம் பிச்சிப் பூவு, கரையெல்லாம் செண்பகப்பூ கிளர்த்தி விடும்.

எங்கள் நாஞ்சில் நாட்டின் ஆற்றுபாசனம் கொண்ட சென்பகராமன்புதூர், தாழக்குடி,தேரேகால்புதூர், வீரநாராயணமங்கலம்,அழகியபாண்டிபுரம்,பூதப்பாண்டி,ஒளவையார்மடம் போன்ற நீரோடும் கரைகளில், அல்லிகள் சிரிப்பதை,  சிவப்பும் வெண்மையும் பச்சையுமாக தாமரைகள் பூத்துக் கிடப்பதை, தாழம்பூ கரையெல்லாம் தனித்த மணம் வீசுவதை ,ஆங்காங்கு செண்பகப் பூக்கள் தாழை போலுமான வேறொரு மணம் பரப்புவதை யாவும் இந்தப் பாடல் வரிகள் கிளர்த்தி,உடல் எந்த ஊரில் எங்கிருந்தாலும் ,  பதின்பருவ மனம் அப்படியே காற்றில் ஏறி ,  நாஞ்சில் மண் போய் விடும்.

எங்கள் பகுதிகளில் தென்னை, கமுகு, வாழை, நெல் என செழித்துக் கிடப்பதை இந்தப் பாடல் , ஓர்மையில் கொண்டு வந்து நிறுத்தி, மயக்கம் தரும்.

  காடெல்லாம் பிச்சிப்பூவு..
.கரையெல்லாம் செண்பகப்பூ
சாய்ந்தாடும் நெற்கதிரே
சதிராடும் வாழைகளே
தேனாட்டம் வெள்ளம் ஒட
ஓடுதடி என் மனசு

என்று கேட்கும் இந்தப் பாடல், இளையராஜாவின் இந்தப் பாடல், ஜி.என்.ரங்கராஜனின் இயக்கத்தில், கரையெல்லாம் செண்பகப்பூ படத்தில் ,  1981 களில் கேட்ட இந்தப் பாடல் , என்றும் உடன் வந்து இழைந்து , மானுட சமுகத்தின் அன்பை நேசத்தை காதலை வாழ்த்தை சாரல் போலும் , தூவியபடி சொல்லிக் கொண்டே ஒலிக்கின்றது.

காடெல்லாம் பிச்சிப்பூவு
கரையெல்லாம் செண்பகப்பூ

No comments:

Post a Comment