Sunday, October 11, 2015

மனோரமா : சில ஞாபகங்கள்

ஞாபகம் 1

எங்கள் குடும்பம் அந்த ஆண்டில்தான் மெட்ராசுக்குப் குடிபெயர்ந்திருந்தது. 1969 என நினைக்கிறேன். அப்பொழுது எனக்கு 7 வயது. நாங்கள் குடியிருந்தது தண்டையார்பேட்டை பஸ் டெப்போவின் எதிரே இருந்த ஒரு பருப்புக் குடோன்.அங்கிருந்த குடியிருப்பில் சில தொழிலாளர்களின் குடும்பம் குடி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குடியிருப்பின் பின்பக்கத்திலிருந்த ( இன்றும் இருக்கும் )  அம்மணி அம்மாள் தோட்டம் நிறைய குடிசைகள் நெருக்கி இருந்தக் குடியிருப்பு. கீரைத்தோட்டம்,வாழைதோட்டம் இருந்த பகுதி.( இன்று அப்படி இல்லை ) அந்த தோட்டக் குடியிருப்பின்  லவுட் ஸ்பீக்கரிலிருந்து வந்தது ஜாம்பேட்டை ஜக்கு... இது சைதாப்பேட்டை கொக்கு என்ற பாடல்.அந்தக் காலத்தில் ஓகோவென்று கேட்கப்பட்ட மனோரமா பாடிய டப்பாங்குத்துப் பாடல்.  அதுதான் மனோரமா என்கிற பெயர் குறித்த என் முதல் ஞாபகம்.

ஞாபகம் 2

அதன்பின் எத்தனையோ படங்களில் அவரின் நடிப்பைக் கண்டு ரசித்திருக்கிறேன். தில்லானா மோகனம்பாளில் அவர் நடித்த ஜில் ஜில் ரமாமணி  என்றும் மறக்க முடியாத ஒரு பாத்திரம். காதல் நோயால் பாதிக்கப்பட்ட   சிவாஜி சண்முகசுந்தரம் ஜில் ஜில்  முகாமில் தங்கி இருப்பார். அவருக்கு சண்முகசுந்தரம் தன் நாதசுரத்தின் வழியாக நாதத்தை இசைத்துக் காட்டுவார் . அப்பொழுது ஜில் ஜில் கேட்பாள்: உங்க நாயனத்திலதான் இப்படிசத்தம்  வருதா?இல்ல எல்லா நாயனத்திலும் இப்படி வருமா? என்று  இசை மீதான பித்து கொண்டு கேட்கும் ஜில் ஜில் மனோரமாவின் வெள்ளந்தி மனம் என்றும் மறக்க முடியாதது.

ஞாபகம் 3
 சில ஆண்டுகளுக்கு முன்பு ,சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஜனநேசன் முன் முயற்சியில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இரவிற்கு மனோரமாவை அழைக்க என்னோடு ஜனநேசன் வந்திருந்தார். தியாகராய ந்கரில் இருந்த மனோரமாவின் வீட்டிற்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை சென்றோம். விவரத்தை சொன்னதும் எங்களைச் சந்திக்க மனோரமா முன்னறைக்கு வந்தார். நான் மனோரமா போல பல துறைஆளுமைகளை  சந்தித்திருக்கிறேன்.பழகியிருக்கிறேன். ஆனால் யாரிடமும் நான் காட்டாத ஒரு செயலை மனோரமாவிடம்  காட்டியது எனக்கே வியப்பாக இருந்தது .அவரின் காலைத் தொட்டு வணங்கினேன். இது என்னில் இல்லாத ஒரு பழக்கம். ஆனால் மனோரமாவைப் பார்த்ததும் அனிச்சையாக  நிகழ்ந்து விட்டது. விவரத்தைச் சொன்னேன். சரி காரைக்குடியா? அவசியம் வருகிறேன் என தேதியைக் குறித்துக் கொண்டார்.  எப்படி சுவரொட்டி அடிப்பது?எப்படி அவரை காரைக்குடிக்கு அழைத்துச் செல்வது என்றெல்லாம் மனோரமாவிடம் பேசினோம். மிகுந்த மரியாதையுடன் எங்களை நடத்தினார் மனோரமா. அவரிடம் அடுத்து தொலைபேசியில் பேசுவது என்று பேசி விடைப் பெற்றோம்.

ஞாபகம் 4
குறிப்பிட்ட் நாளில் மனோரமாவிடம் பேசினேன்.தம்பி நேரில் வா என்றார். சென்றேன். தேதியை பூபதி மாத்திட்டான்பா.என்ன செய்ய என்றார்? பூபதியிடம் பேசவா என்றேன்.வேண்டாம்பா.அவன் கேட்க மாட்டான் என்றார்.நான் உணர்ந்து கொண்டு அம்மா பூபதியிடம் நீங்க பேசுங்க,பொன் வைக்கும் இடத்தில் நாங்கள் பூ வைப்போம்.அவசியக் காரைக்குடிக்கு நீங்கள் வரவேண்டும் என்றேன்.எனக்கும் வர ஆசை.பூபதி வேறு எங்கோ தேதி கொடுத்திட்டான் என்று வருத்தப்பட்டார். சில நாட்கள் சென்று மனோரமா வீட்டிற்கு போன் செய்தேன்.அவரின் மகன் பூபதி போன் எடுத்தார்.விவரம் சொன்னேன்.அம்மா வர வாய்ப்பில்லை;விட்டுடுங்க என்றார்.எவ்வளவு பேசியும் பூபதி கேட்கவில்லை.

ஒரு மகத்தான கலைஞரான தன் தாயை கலைக்கு மரியாதை அளிக்கும் ஓர் இலக்கிய அமைப்பு அழைத்து மரியாதை செய்ய ஆசைப்படுகிறது.அனுப்பி வைப்போம் என்ற பண்பு பூபதியிடம் இல்லாது போயிற்று. மனோரமாவிடம் இப்படி அருமை அறியாத மகனின் சொல்லை தவிர்த்து விட்டு,வருகிறேன் என்று சொல்லும் உறுதியையும் காண இயலாது போயிற்று.

இன்று அந்த மெய்யான  கலைஞரின் பிரிவு(
2015 அக்டோபர் 10 இரவு )  துக்கத்தின் அடர்த்தியைப் பெருக்குகிறது.   மழையும் துக்கத்தைப் போலவே பொழிந்து கொண்டிருக்கிறது.
படம்: கருப்பு கருணா