Thursday, July 30, 2015

வாழ்வை அளந்து பார்க்கும் ஆன்மச்சொற்கள்








இன்று ஒரு பாடல் கேட்டேன். ஓ..ஓ..வென்று கூவி ஊருக்கு செய்தியைச் சொல்லும் பாடல். மேல் கீழ் இறங்காமல் நின்று சஞ்சாரிக்கும் குரல் வழியிலான பாடல்.

தப்பும்  பேடும் கிடாரும் வழி நடத்த,வாழ்வின் உண்மையைச் சொல்லும் பாடல் இது. நடைபாதையில் வாழ்வின் உண்மைகளை சித்தாந்தமாக சொல்லி வலம் வரும்  சித்தன் அல்லது சூஃபி ரீதியிலான சுண்டியிழுக்கும் பாடலை கேட்டேன்

.4.15 நிமிடம் ஓடும் பாடல்

.சின்னச் சின்ன சொற்கள் எடுத்து வாழ்வை அளந்து பார்க்கும் ஆன்மப்  பாடல். கவிதையை விழுங்கி விடாத கவனத்தோடு சொற்களுக்கும் , அதன் உணர்விற்கும் ஏற்ற மெட்டை கேட்டு , அதன் வழி நம் காதுகளைக் கோரும் பாடலாக இருக்கிறது.

இது தூர்தர்சனின் இசைத்திரட்டில்(ஆல்பம்) வந்திருக்கும் புதிய பாடல்.ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளர் ப்ரேம்குமார் இசையமைத்துப் பாடி இருக்கிறார். பாடலின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் இசையுமாகும்.

நானோர் நாடோடி
என் பயணம் எனைத் தேடி
பாதைகள் பல கோடி
அதன் திருப்பமோ உயிர்நாடி

உலகில் உண்மை எது பொய் எது என்று தேடுவதும் ,  நல்லதை தீயதை தேர முயல்வதும் , நெடும் வாழ்க்கைப் பயணத்தில் சஞ்சலமுறும் மனம் ,  தான் யாரென்று உரசிப் பார்த்து , சித்தாந்தம் பேசுவதும் ,வாழ்வை ஒரு புதிராக்கி மனதின் முன் நிறுத்தி மிரட்சியுறுகிறது மானுடம்

 இந்தத் தொனியிலான பாடலாகத் தொடங்கி  தொடர்ந்து வாழ்வின் மனிதரின் சிக்கல்களை பேசும் தான் யாரென தன்னை விசாரிக்கும் ஆன்மப் பாடலாக விரிந்து போகிறது.

மவுனம் எழுவதும்
வலியைத் தொடுவதும்
என்க்கொரு வேடிக்கையே

என வலியைத் தாண்டுவதாக சொல்லும் மனம் , அடுத்து வாழ்வின் தீராத வலிகளால்,

என் பெயர் உடன் பெயரா
என் பெயர் உயிர்பெயரா

என நின்று மருகி கேள்வி கேட்கிறது
முடிகிற புள்ளியை
தொடங்கும் புள்ளியாய்
புரிதல் தேடுகிறேன்

ஆயிரம் ஓட்டைகள் வாழ்வில் இருந்தாலும் வாழ்வின் மீதான நேசம் , மேல் கண்டவாறு வாழ்வை முடிகிற முற்றுப் புள்ளியாக இல்லாமல்,தொடரும் தொடர் புள்ளியாக பாவித்து தொடர்ந்து பாடிப் போகிற ப்ரேம்குமாரின் குரலிற்கான வரியைத் தந்து,  தனக்கான ஓரு வலுவான தடத்தை துலக்கப் படுத்தி,திரையிசையில் தனியிசையில் பயணிக்கும் கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினியை வாழ்த்துகிறேன். 

Sunday, July 26, 2015

அய்யப்பமாதவன் எனும் கவிஞன் கட்டித் தழுவும் ஒரு சதுக்கப்பூதம்:





அய்யப்ப மாதவன் அழைத்ததை ஒட்டி அவரின் புத்தனின் விரல் பற்றிய நகரம் கவிதை நூல் வெளியீட்டிற்குப் போயிருந்தேன்.இரண்டு காரணம் அவர் அழைத்தார்;அடுத்தது கவிதைப் பற்றி என்ன கருதுகோளை நிலைப்பாட்டை வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள. அவருக்கு நெருக்கமான அவரின் கவிதையோடு பரிட்சயம் கொண்ட ஒரு ஐம்பது பேர் நிகழ்வில் இருந்தோம்.

பேசிய பலரும் கவிதைக்கு இங்கு இடம் என்னவாக இருக்கிறது என்றும் ,காலமும் சமுகமும் கவிஞனை கையேந்த வைத்திருக்கிறது என்று கவலையைப் பதிவு செய்தனர். மாதவன் வெளியைப் பற்றி பசியைப் பற்றி சொந்த அனுபவ மொழியில் எழுதிருப்பதையும் பேசியது மகிழ்ச்சியே. மாதவனின் ஏற்புரை எனக்குப் பிடிக்கவில்லை.

அவர் பேசிய பல விசயங்களால் கவிஞர்கள் இப்படி விசயஞானம் இல்லாமல் இருக்கக் கூடாதே என்று ஆதங்கம் கொள்ள வைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை என்பதினால் தம்பி பூபதியின் கனிவில் நல்ல தள்ளுபடியில் 454பக்கம் கொண்ட நூலை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டேன்.

வாசித்தக் கவிதையில் சாம்பிளுக்கு இரண்டு.
அய்யப்ப மாதவனின் கவிதையில் படிமஅழகும் சமுகக் கோபமும் இருப்பதிற்கான இரண்டு அது.இருள்,மரம்,காற்று,நிலா, பனி,இலை,உதிர்தல் இப்படியாக வெளியைச் சொல்லும் பொழுது

`விடிவிளக்கென நிலா/பறவைக் கூடுகளில் படிந்திருந்தது’ என்கிறார்.

இந்த வரிகள் விவரணைக்கு அப்பாற்பட்ட புலனால் உணரத்தக்க காட்சியின் உணர் அனுபவத்தை கிளர்த்தி அடடா என பரவசம் கொள்ளச் செய்தது. அடுத்தது பாசிசம் என்கிற கவிதையில் பசியும் வறுமையும் ஒருவரை ஓர் உள்நாட்டுப் போராளியாய் மாற்றிவிடக் கூடும் என அச்சப் படுகிற கவிதையின் இடத்தில்` அரசாங்கப் பணிக்காக கையூட்டு வாங்கும்/அதிகாரிகளின் அமைச்சர்களின் தலைகளைத் துண்டாடும் சமுக சேவகனாய் மாறக்கூடும்’ என்கிற அரசியல் கவிதையின் குறிப்பிட்ட இடத்தின் கவிதாவேசம் அய்யப்பனை முதுகில் தட்டி தொடர்ந்து எழுது மாதவா என்று சொல்லத் தோன்றுகிறது.

ஆனால் இவர் , கலைஞர்களை படைப்பாளிகளை மதிக்கத் தெரியாத சினிமாவின் கரங்களுக்குள் தன்னை சிறைப்படுத்திக் கொள்ளும் குரூர முயற்சியை விவரித்துச் சொல்லி ஏற்புரையில் தன் கவிதை-இது கொண்டாடப்படும் இடம்-இதன் அழகு-இதன் கோபம் என எதுவும் பேசாமல் தேர்ந்தெடுத்த தன் 300 கவிதைகளை சினிமா உலகின் முன் விசிட்டிங் கார்டாய் விரித்து நின்ற பரிதாபத்தை சினிமாவின் வசீகரத்தை என்ன சொல்ல? (சினிமா வெறுப்பு எனக்கில்லை; அழைக்கும் சினிமாவைக் கொண்டாடலாம்)

நிகழ்வில்அய்யப்பமாதவன்,கருணாபிரசாத்,சூர்யதாஸ்,பாரதிகிருஷ்ணகுமார்,அழகியசிங்கர்,பா.கிருஷ்ணன்,ரவிசுப்ரமணியன்,விஜயபத்மா,
அப்பணசாமி, தேவேந்திரபூபதி,யவனிகாஸ்ரீராம், சீனுராமசாமி,தோழமை பூபதி,ஆதிரா முல்லை,சந்திரா, நாச்சியாள் சுகந்தி, வேல்கண்ணன்,கே.என்.சிவராமன்,மதிராஜ்,தம்பி யுவகிருஷ்ணா என தோழர்கள்-நண்பர்களின் சந்திப்பு நேற்றைய மழை பெய்த அந்திப்பொழுதை மேலும் அன்பால் ஈரப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

Friday, July 10, 2015

உள்ளூர் வரலாற்றைப் பாதுகாப்போம்







போன சனி(ஜூலை 4)  அன்று பழவேற்காடு போய் வந்தோம்.அங்கு நடைபெற்ற சென்னை திரைப்படசங்க பயிலரங்கு பற்றி தனியே வலைப்பூவில் எழுதுவேன்.

இங்கு நான் சொல்ல வருவது, பொன்னேரியிலிருந்து பழவேற்காடு வரை செல்லும் 19 கிமீ பயணத்தில்,வழியெங்கும் சின்ன சின்ன ஊர்கள்.அந்த ஊர்களின் பெயர்கள் அழகான தமிழ்ப்பெயராக இருக்கின்றன.அவைகள் பண்புப்பெயர்களாக,காரணப்பெயர்களாக,இடுகுறிப்பெயர்களாக இருக்கின்றன

ஊர்களின் கடையெங்கும் சொந்தப் பண்பாட்டினை ஊனப்படுத்தும் பன்னாட்டுக் கம்பெனிகளின் குளிர்பானங்கள்,  முகப்பில் கட்டிவிடப்பட்டிருக்கின்றன.கழகங்களின் நிறம் உதிர்ந்து போன கொடிக்கம்பங்கள் அங்கு என்ன அரசியல் நிலவுகிறது என்பதை உணர்த்தி நிற்கின்றன.

 எனக்கு வந்த விசனம் என்னவெனில்,


பழவேற்காடு,காஞ்சிவாயல்,நடுப்பாலை,தொட்டிமேடு,காவல்பட்டி,சின்னகாவனம்,பொன்னேரி என்று இலங்குகின்ற ஊர்களை,அந்தந்தப் பெயர்களின் ஆதிக்காரணம் அறிந்து,அந்த மக்களுக்குஅந்தந்த ஊர்களின் சிறப்பைச் சொல்லி, ஊரையும் பெயரையும் தம் சொந்த பண்பாட்டினையும் (சாதி-மத பண்பாடு அன்று) பாதுகாக்க வேண்டி அந்தந்த ஊர் பஞ்சாயத்து நிர்வாகம் ,அங்கிருக்கும் தமிழ் ஆர்வலர்கள் முன்வரவேண்டும்.

தெருவின் பெயரை புதியாய் எழுதி வைக்கிறோம் என இயங்கும் அரசு,இப்படியான ஊர்களின் பெயரையும் பண்பாட்டினையும் ஆயும் பொருட்டு நிதி ஒதுக்கி,அந்தந்த ஊர்களில் இது சார்ந்த நூலகம் ,ஆவண காப்பகம் அமைத்து சொந்த உள்ளூர் பண்பாட்டு தரவுகளை பாதுகாக்க முன் வரவேண்டும்.