Monday, August 12, 2013

அதிகாரத்தை நோக்கி நீண்ட சொற்கள்



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்,2012 ஆம் ஆண்டின் கவிதை இலக்கியத்திற்கான , செல்வன் கார்க்கி நினைவு விருது மற்றும் பரிசு ரூபாய் 5000 ஐ பெற்ற தொகுப்பு சிறகு முளைத்த பெண்.

ஸர்மிளா ஸெய்யித் கிழக்கிலங்கை மட்டக்களப்பு பகுதியின் ஏறாவூர் சார்ந்தவர்.`வாழ விரும்புகிறேன் இவரின் முதல் கவிதை. சிறகு முளைத்த பெண் இவரின் முதல் தொகுப்பு.கவிஞர்;ஊடகவியலாளர்;செயற்பாட்டாளர்;பெண்ணியவியலாளர் என பன்முகம் கொண்டவர்.

இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு இணக்கமான பகுதியினர் என சொல்லப்படும் கிழக்கு இலங்கையின் இஸ்லாம் சமுகத்திலிருந்து ஆளும் வர்க்கத்திற்கு எதிராக  வெளிப்பட்ட குரல் இவருடையது.  கண்டு கொள்ளாது நடப்பதும்,மெளனமாக இருப்பதும் மார்க்கப் பெருமையென சொல்லப்பட்டதிற்கு மாறாக ,அச்சமற்ற நெஞ்சோடும் நேர் பார்வையோடும், இழிவுகள் மீதான கருத்தாடலோடு இயங்குவதும், தன்னைத் திறந்த சிந்தனைகளின் சாவியால் மலை மீறி பறப்பதும் ,மத அடிப்படைவாதத்திற்கு ஆகாதென்பதனால்  அடிப்படைவாதிகளின் அச்சுறுதலுக்கும் ஆளானவர்.

சமகாலத் துயர்களின் மீதான கவனமும், அதிகாரத்தின் சிம்மாசனத்தை நோக்கி நீளும் சொற்களுமாய், மதத்தின் போலிமையை பொது வெளியில் காட்சிக்கு வைக்கும், வேலி மீறி துளிர்க்கும் சுதந்திரத் தன்மையும் அரசியலும் அழகியலும் கைவரப் பெற்ற ஒரு பெண்ணின் வாக்குமூலச் சொற்கள் இது.

சுருட்டப்பட்ட சூரியன் ,ஒளியிழந்த நட்சத்திரம் ,வெடிக்கும் வானம் ,தீப்பந்த மேகம்,பொங்கும் கடல்,பிளவுறும் பூமி,வெடித்துச் சிதறிய கர்ப்பிணி ஒட்டகம் என்று படிமத்தை அடுக்கி அடுக்கி யுத்தப் பேரழிவைக் காட்சிப்படுத்தி `நேற்று நாமிருவரும் சுவைத்த ஈச்சங்கனிகளின் மரம் அடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கிறதுஎன்று சொல்கிற பொழுது பாரிபடுகளத்திற்குப் பிறகு கபிலர் பாடும் இருந்த வாழ்வின் இல்லாமையின் பிம்பம் போலுமான `நீ இல்லாத இரவு என் கழுத்தை நெரிக்கிறது என்ற வரிகள் வழியாக துயறுரு பெண்களின் வாதையின் சித்திரம் காட்டப்படுகிறது.

உண்மையை எதார்த்தத்தை எந்த மாமன்னனும் விரும்பாததைப் போலவே தொகுப்பில் வரும் மன்னனும் காட்டப்படுகிறான்.`எங்கள் வயல்கள் அடையாளம் அறியாதோரால் ஆதாரம் இன்றி உரிமைக் கோரப்படுகின்றன;
எங்கள் வாழிடங்கள் அத்துமீறி ஆக்ரமிக்கப்படுகின்றனஎன்று மக்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை கட்டுக்கதைகள் என்றும் இவர்களெல்லாம் குழப்பவாதிகள் என்றும் சினந்து சீறும் மன்னன் பகிடி மொழியில் பகிறப்பட்டிருக்கிறான்.

 `அது குஞ்சோடும் ஆறாத காயங்களோடும் ,அலகினால் பொறுக்கும் நெல்மணி போல, சிறுகச் சிறுகக் காதலை சேமிக்கும் ;விட்டுப் பறந்த இடத்தில் காத்திருக்கும்.காதலை ஓயாது கூவும் என்ற வரிகளில் போரின் இருபக்கமும் சிக்குண்டு  வாழ்வும் வாழ்விடமும் பறிபோனச் சூழலில், தஞ்சம் சொல்லி வந்த பறவையை நீங்கிப் போன காட்சி வழி வெளிப்படும் ஒரு பெண்ணின் வாழ்வின் மீதான வாஞ்சை விருப்பு பக்கம் எங்கும் பரவிக் கிடந்து பதைப்பூட்டுகின்றன.

ஆலங்கட்டி,வேம்பு,தும்பை,இரவு,காற்று,பறவைகள்,நிலம் என இயற்கைப் படிமங்கள் வழி உணர்ந்தவைகளை அவைகளின் மீது சார்த்தி,தான் அவைகளாகவும் அவைகள் தானாகவும் துணையாய் சாட்சியாய் இருப்பதை தொகுப்பில் பார்க்கலாம். 

`ஒரு முறை எனைப் பாட விடுங்கள்;என் துயரங்களை இசைக்க விடுங்கள்
நான் சிட்டுக்குருவிகளோடு வானத்தை அளக்க வேண்டும்
விலங்குகளினால் இறுக்கினாலும் வார்த்தைகளால் அடித்தாலும்

நான் இசைப்பேன் எழுதுவேன்

என்று வாழ்வின் மீதான பேராவலில் சுதந்திர எழுத்தின் மீதான விருப்பில் அதிகாரத்தை மதபீடங்களை எதிர்த்த அறைகூவலில் முகிழ்த்த வரிகள் சிறகு முளைத்த பெண்

நன்றி:தீக்கதிர்/இலக்கியசோலை
2013 ஆகஸ்ட் 12


















































1 comment:

  1. வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் கவிதைப் பூக்கள் மனம் வீசட்டும் அதை என் மனசு நுகரட்டும்
    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    ReplyDelete