Sunday, June 9, 2013

காட்சி ஊடகம் :அகத்தை புறத்தை மாற்றும் தூண்டல்



இப்பொழுது படித்தவர்களும் விரும்பிப் பார்க்கப்படுகிற ஊடகமாக தொலைக்காட்சி மாறி இருக்கிறது.செய்திகள் மட்டுமே பார்த்த இப்பிரிவினர் பொழுது போக்குகளுக்கான செலவையும் நேரத்தையும் கணக்கில் கொண்டு தொலைக்காட்சி முன் தன்னை ஒப்புக் கொடுத்திருக்கின்றனர்.இவர்களை வசிகரிக்க வேண்டி புதிய புதிய நிகழ்வுகளை இவ்வூடகங்கள் முன் வைக்கின்றன.

திரைப்படங்கள்,நெடுந்தொடர்கள்  மட்டும் தொலைக்காட்சிகளுக்கு போதுமானதாக இல்லை.பார்வையாளர்களின் பல அடுக்குகளை கைப்பற்ற வேண்டி டாக் ஷோ எனப்படுகிற கலந்துரையாடல்,விவாதமேடை,உரத்த சிந்தனை  நடத்தப்படுகின்றன.

எத்தனைக் கோணம் எத்தனைப் பார்வை,உண்மையைச் சொல்கிறேன்,நாடும் நாமும் போன்ற தலைப்புகளில் முன்னுக்கு வருகின்ற பொதுவான பிரச்சினைகளின் அடிப்படையில் செய்தி அலசல்கள்,விமர்சனங்கள் செய்யப்படுகின்றன.உழைக்கும் மக்கள்,நடுத்தர மக்கள் படும் அல்லல்கள்,சந்திக்கும் தாக்குதல்கள்  இந்த அலசல்கள்,விவாதங்களில் காண முடிவதில்லை.

இந்த நிகழ்வுகளில் நமது படைப்பாளிகளான அ.குமரேசன்,ச.செந்தில்நாதன்,அருணன்,தமிழ்ச்செல்வன்,களப்பிரன்,பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்றவர்களை  அவ்வப்பொழுது பார்க்க முடிகிறது.நந்தலாலா கேப்டன் தொலைக்காட்சியில் தினந்தோறும் காலையில் பல்சுவைத் தகவல்களை பேசி வருகிறார். கிடைக்கும் வாய்ப்புகளை நமது பார்வையிலான செய்திகளை சொல்லவும் பகிரவும் நம்மவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.இது மாதிரியான பார்வைகள் தொலைக்காட்சியின் பரவலிற்கும் அவசியப்படுகிறது.தொலைக்காட்சியின் எல்லை வரம்பை நமது உரையாடல் மீறும் பொழுது தணிக்கை செய்யப்படுவதையும் காண முடிகிறது.

விஜயகாந்த் அவரின் தொலைகாட்சியில் மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார்.

 தந்தி தொலைக்காட்சியில் சீமான் மக்கள் முன்னால் என்கிற விவாத அரங்கை ஞாயிறு தோறும் நடத்தி வருகிறார்.இந்நிகழ்ச்சிகளில் தம் நிலை சார்ந்து மத்திய அரசை,மாநில அரசை விமர்சிக்கவும் சில உள்நாட்டு நிறுவனங்களை விமர்சிக்கவும் பயன்படுத்துவதன் வழியாக மாநில முதலாளிகளின் தொழில் நிறுவனங்களின் ஆதரவை ஊடக ஆதரவை பெற முயற்சிக்கின்றனர்.

நாதஸ்வரம்,வாணி ராணி,உதிரிப்பூக்கள் போன்ற நெடுந்தொடர்கள் வீட்டுப் பெண்களை வசீகரித்திருக்கின்றன.வீட்டுப் பெண்களின்  தனிமை, பணி,பொழுதுபோக்கு, நுகர்வுச் சந்தை போன்றவைகளை மையப்படுத்தி இத்தொடர்கள் தயாரிக்கப்படுகின்றன.சிரமங்களுக்கு பெண்கள் முகம் கொடுப்பது, குடும்பத்திற்காக பெண்கள் சவால்களை ஏற்பது ,அதில் பெண்கள் வெற்றி பெற முயல்வது போன்ற உளவியல் கூறுகளால் இத்தொடர்கள் வெற்றிகரமாக பெண்களிடம் உலா வருகின்றன.

சமூகப் பொறுப்புள்ள,சக மனிதர்கள் மீது அன்பும் கடப்பாடும் உடைய ஆட்டோ ஓட்டுநராக நடிகர் சேட்டன், சிவநேசன் என்கிற  பாத்திரத்தில் உதிரிப்பூக்கள் தொடரில் நடித்து வருவது தொலைக்காட்சியின் இன்னொரு முகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் , இம்மாதிரியான காட்சிப்படுத்தலிற்கு தொழிலாளர் இயக்கத்தின் அன்றாட போராட்டப் பங்களிப்பும் காரணமாக இருக்கின்றது.

 மகாபாரதம் தமிழில் தமிழ்க் கலைஞர்களால் நடிக்கப்பட்டு திராவிட அரசியல் குடும்ப   சன் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பப்படுகிறது.இதே குடும்பத்தை சார்ந்த சுட்டி தொலைக்காட்சியில் பக்தி சார்ந்த அனிமேஷன் சித்திரக் கதைகள், தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன.கிருஷ்ணன்,முருகன்,சிவன் தொடர்களை தயாரிப்பவர்களுக்கு குழந்தைகளிடம் சமுக மறுமலர்ச்சிக்கு உழைத்த திருவள்ளுவர்,பெரியார்,அம்பேத்கர்,திரு.வி.க,அண்ணா என்றாவது கொண்டு செல்லத் தோன்றவில்லை. 

மூன்,லோட்டஸ் என புதிய தொலைக்காட்சிகள் வந்திருக்கின்றன.முன்னர் என்.டி.டி.வி-ஹிந்து தொலைக்காட்சியாக இருந்தது இப்பொழுது தந்தி டிவியாக வந்து கொண்டிருக்கிறது.உள்ளூர் அளவில்  சிறு வணிகம்,தொழில் சார்ந்து நிறைய  தண்டுவட தொலைக்காட்சிகள் செயல்படுகின்றன.உள்ளூர் தொலைக்காட்சி சார்ந்த  நிகழ்வுகள் வடிவமைப்பு,ஆலோசனை சொல்வது என்ற முறையில் இவர்களோடு தொடர்பு வைத்துக் கொண்டு நமது கருத்து பரவலிற்கு முயலலாம்.

முன்னர் சில தொலைக்காட்சிகளில் குறும்படம்,ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை இப்பொழுது காண இயலவில்லை.கலைஞர் தொலைக்காட்சியில் சினிமாவில் நுழையும் ஆர்வத்திலுள்ள புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் நாளைய இயக்குநர்  நிகழ்வில் சினிமாவின் சிறிய வடிவமான குறும் படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

தொடர்ந்து கவிதைகள்,கவின்கலைகள்,நிகழ்த்துக் கலைகள்,தமிழிசை போன்றவைகளுக்கு பெரிய தொலைக்காட்சிகளில் இடமில்லை என்கிற யதார்த்தம் நம்மை ஏதோ செய்கிறது;ஏதோ செய்யத் தூண்டுகிறது.இந்தத் தூண்டல் நம் அகத்தையும் புறத்தையும் மாற்றும்படி தொடரட்டும்.

(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் (2013 ஜூன் 08,09)வைக்கப்பட்ட அறிக்கை)

No comments:

Post a Comment