Sunday, March 10, 2013

மாற வேண்டிய சாகித்ய அகாதமி


சாகித்ய அகாதமி நிறுவப்பட்ட நாளை சென்னையில் வரும் 12 ஆம் திகதி  அகாதமி, பாரதிய வித்யாபவனில் விழாவாக நடத்துகிறது.இது மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிற அமைப்பு.

 பல்வேறு மொழிகள்,பண்பாடு,சிந்தனைப் போக்கு,இலக்கிய போக்குகளின் மேடையாக செயல்பட வேண்டிய அமைப்பு.யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் பின் செல்லாது,இலக்கிய வளர்ச்சியை முன்னிட்டு இயங்க வேண்டிய அமைப்பு.விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு பலரையும் இணைக்க வேண்டிய அமைப்பு.

இந்த சிந்தனை இல்லாமல் (அகில இந்திய அளவில் எப்படியோ) ஆனால் தமிழ்நாட்டு அளவில்  சிந்தனைத் தெளிவு இல்லாத கரடு தட்டிப் போன,ஆளும் கட்சிகள் சார்ந்த இலக்கிய  பிரமுகர்களுக்கு முறைவாசல் வேலை செய்கிற, பிரபலங்களுக்கு  சொறிந்து விடுகிற திண்ணையாக இருக்கிறது.

அகாடமி பெயரில் தமிழ்நாட்டில் நடைபெறும் விழா அழைப்பை பார்த்தால் தொடர்ச்சியாக சில பேர்களே பொதுக்குழு உறுப்பினர் என்ற அளவில் தன் பெயரை வறவேற்புரை,தொகுப்புரை,சிறப்புரை,ஆய்வுரை,கவியுரை என்று தங்களுக்கான வாய்ப்பை தாங்களே பங்குப் போட்டுக் கொள்கிற கேவலங்களின் கூடாரமாக இருக்கிறது.

நேரில் சொன்னோம்;அலுவலகம் பக்கம் போகிற போது அணுகுமுறையை மாற்றுங்கள் என்று சொல்கிறோம்.மண்டல அதிகாரியை பார்த்தப் பொழுதும் சொன்னோம்.ம்கூம்..மாற்றம் இல்லை.மீண்டும் அதே அணுகுமுறை,அதே கேவலங்களின் அரங்கேற்றம் என் தொடர்கிறது.

ஒர் அமைப்பு நிறுவப்பட்ட நாளின் விழா என்பது பல்வேறு இலக்கிய,சிந்தனைப் போக்குகளின் சார்பாளர்களை இது சார்ந்த படைப்பளர்களை அழைத்து கொண்டாடுவது என்பதே சரியானது.

மாறாக ஆளும் கூட்டணி,ஆளும் கட்சிகள் சார்பாளர்களை அழைத்து கொண்டாடுவ்து சாகித்ய அகாடமி தொடங்கப்பட்டதன் நோக்கத்தை குழி தோண்டிப் புதைப்பது ஆகும்


.இவர்கள் தமிழக அளவில் நடத்தும் அரங்குகள்,கூட்டங்களுக்கு நவீனப் படைப்பாளிகள்,இடதுசாரிகள்,பெண் படைப்பாளர்கள் ,அசல் தலித் படைப்பாளிகள், ஜனநாயக அணுகுமுறை கொண்டவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.அங்கொன்று இங்கொன்றாக ஊறுகாய் காரணம் காட்ட சில பேர்களை அழைத்திருக்கலாம்.

பொதுக்குழு உறுப்பினர்களை யார் திருப்தி செய்கிறார்களோ  அவ்ர்களை அழைத்து பேச வைப்பார்கள்;அவர்களை சுற்றி இவர்கள் நின்று கும்மியடிப்பார்கள்;ஆளும் கட்சிகள் சார்ந்த படைப்பாளிகள் அழைக்கப்படுவார்கள் என்கிற    நிலை தொடர்வதை எதிர்த்து, மக்கள் சார்ந்த படைப்பாளிகள் புறக்கணிக்கபடுவதை எதிர்த்து  மீண்டும் குரல் கொடுக்க வேண்டும்;போராட வேண்டும்.சாகித்ய அகாதமி பொது அமைப்பு;இதன் செயல்பாடும் பொதுவில் இருக்க விழைகிறோம் 

வரும் 12 ஆம் திகதி அமைப்பு நிறுவப்பட்ட நாள் விழாவிற்கு அழைக்கப்பட்டிருப்போர் யார்? யார்? அறிமுக உரை இராம குருநாதன்;பேச்சாளர்கள்:மாலதி செந்தூர்,அசோகமித்திரன்,சா.கந்த சாமி,அப்துல் ரகுமான்,இரா.வைரமுத்து,ஈரோடு தமிழன்பன்,மு.மேத்தா

No comments:

Post a Comment