Tuesday, February 19, 2013

சீற்றத்தை உள்ளடக்கியக் குரல்



பெண்ணியக் கவிதைகளால் தமிழ்க் கவிதை வேகம் பெற்று அர்த்தத்தில் அடர்த்தியில் புதுவீச்சோடு திகழ்ந்து வருகின்றது.பெண்மொழியால் தமிழ்மொழி புதிய புதிய பார்வையைப் பெற்று ஜனநாயகப்படுத்தப்பட்டு வருகின்றது.70களின் இரா.மீனாட்சி தொடங்கி 2008ன் கலைஇலக்கியா,ச.விசயலட்சுமி என புதியத் தடங்களை அவதானிக்கலாம்.

 ச.விசயலட்சுமியின் `பெருவெளிப்பெண் கவனத்தில் கொள்ளத்தக்க கவிதைத் தொகுப்பு.பெண்ணின் சீற்றத்தை உள்ளடக்கிய உரத்தக் குரலாக வெளிப்படும்  விசயலட்சுமியின் கவிக்குரல் சமுகம் சார்ந்த அக்கறை,பிரபஞ்சம் தழுவிய  அரசியல் குரலாகவும் ஒலிக்கிறது.

 ஜனநாயகமற்ற குடும்பத்தில் பெண் படுகின்ற பாட்டை,   பெண்ணின் சுயம்,அடையாளம் குறித்த தகிக்கும் குரல்களை  பதிந்து செல்கிறது தொகுப்பு.

சொற்களின் மாய விளையாட்டுகளை தள்ளி எளிய சொற்களின் வலிய அனுபவங்களை விசயலட்சுமி கவிதையாக்கி இருக்கிறார்.

மனுநீதி, ஆணாதிக்க அச்சில்களால்  வனையப்படுகின்ற பெண்ணின் தோற்றத்தை மறுத்து,தங்களின் உயிர்த் துடிப்பை உற்றுக் கற்றுக் கொள்ள  மொழிகின்ற, வேட்டை மிருகங்களின் வயிற்று இரையானாலும், செரிக்க மறுத்து உயிர்த்தலிற்காக போராடுகின்ற பெருவெளிப் பெண்கள் குறித்த நம்பிக்கைப் பதிவு.

குடும்பமும் சமுகமும் சூட்டும் பட்டப்பெயர், வசைப்பேச்சு கேட்டு புழுங்கும் பெண்ணாக இல்லாமல்,

`எல்லாவற்றிற்கும் நானே காரணம் என்ற/இரைச்சலுக்கு மத்தியில்/குத்தகை விட்ட யோனி மீட்டு/மீண்டும் உயிர்த்தெழுவேன்என்று தன் சுதந்திரத்தை மீட்டெடுக்க முயலும் நவயுகப் பெண்களின் குரலாக ஒலிக்கின்றது.

`புணர்வுகளில் முலை வெடித்து/தாயெனும் பட்டம் என்னைத்/தேய்த்து தேய்த்து உருவங் கொடுக்கையில்/சேகரித்த உள்மனக் கொந்தளிப்புகள்/நான் யாரென/வினா தொடுக்கும் நான்

ஆண்களின் நான் அகங்காரத்தின் வெளிப்பாடு.பெண்களின் நான் சுதந்திர வெளிப்பாடு.ஆணின் நானிலிருந்து பெண்ணின் நான் ப்ரமாண்ட வித்தியாசம் கொண்டது.பெண்ணின் நான் சுயத்தின் வெளிப்பாடு.

உலகமயமாக்கல் நகரங்களை மனிதர்களை வாழ்க்கையை சிதைக்கும் என்பதை `தெறித்த விலாகவிதையில் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

பசியழித்து உயிர் வளர்க்கும் அமுதசுரபியே கிடைத்தாலும் அதை வைத்து உறுபசி போக்க எண்ணாமல் எண்ணெய் வயல்களுக்காகவும்,அணுகுண்டுகளுக்காகவும் பயன்படுத்தும் ஆதிக்க நாடுகளின் அசல் முகவரியை காட்டுகிறது பயணம் கவிதை.

கொசாவா,ஈழம்,ஆப்கன் என தொடர்ந்த போர்கள் ஆனாலும் அரசியல்,சாதி, மதம் சார்ந்த வன்முறை ஆனாலும் இலக்காகி பலியாகுவது உயிர்ப்புகளின் கருவூலமான பெண்களே.

இயற்கையின் வடிவுறுவானப் பெண்களின் மீது தொடரும் ஆண்களின் கால கால யுத்தம் உறுப்புகளை சிதைப்பதோ வல்லாங்கு செய்வதோ மட்டுமின்றி  பெண்ணினத்தையே கருவறுக்கும் போருக்கு எதிரான அறைகூவலை ஏற்று அழிய மறுத்து உயிர்ப்பின் அரசியற்குரலாக  வெளிப்படுகின்றது இப்படி:

`வரையறைகளும் குறியீடுகளும்
குறி வைத்தாலும்
யாம்
விழுங்கி ஒளிரும் சூரியக் கரும்புள்ளிகளாய்
உயிர்த்தலின்
தொப்பூழ்க் கொடியாய்த் தொடரும்
பெருவெளிப் பெண்
என்று வெளிப்படும் குரல் ஆண்களால் பின்னப்படும் அழிமான வலைகளை அறுத்தெறியும் புதியக் குரலாக வெளிப்படுகின்றது.

 பெருவெளிப் பெண்,உயிர்ப்பு,நிரவல்,தனிமை,நட்பு,கதவின் ஓலம்,வழிந்தோடும் விசும்பல்,எல்லைகளுக்குள் இல்லை என சொல்லத்தக்க கவிதைகளால் நிறைந்திருக்கிறது பெருவெளிப் பெண்.
(நன்றி:புதிய புத்தகம் பேசுது/2008 நவம்பர்) 

No comments:

Post a Comment