Tuesday, February 19, 2013

சீற்றத்தை உள்ளடக்கியக் குரல்



பெண்ணியக் கவிதைகளால் தமிழ்க் கவிதை வேகம் பெற்று அர்த்தத்தில் அடர்த்தியில் புதுவீச்சோடு திகழ்ந்து வருகின்றது.பெண்மொழியால் தமிழ்மொழி புதிய புதிய பார்வையைப் பெற்று ஜனநாயகப்படுத்தப்பட்டு வருகின்றது.70களின் இரா.மீனாட்சி தொடங்கி 2008ன் கலைஇலக்கியா,ச.விசயலட்சுமி என புதியத் தடங்களை அவதானிக்கலாம்.

 ச.விசயலட்சுமியின் `பெருவெளிப்பெண் கவனத்தில் கொள்ளத்தக்க கவிதைத் தொகுப்பு.பெண்ணின் சீற்றத்தை உள்ளடக்கிய உரத்தக் குரலாக வெளிப்படும்  விசயலட்சுமியின் கவிக்குரல் சமுகம் சார்ந்த அக்கறை,பிரபஞ்சம் தழுவிய  அரசியல் குரலாகவும் ஒலிக்கிறது.

 ஜனநாயகமற்ற குடும்பத்தில் பெண் படுகின்ற பாட்டை,   பெண்ணின் சுயம்,அடையாளம் குறித்த தகிக்கும் குரல்களை  பதிந்து செல்கிறது தொகுப்பு.

சொற்களின் மாய விளையாட்டுகளை தள்ளி எளிய சொற்களின் வலிய அனுபவங்களை விசயலட்சுமி கவிதையாக்கி இருக்கிறார்.

மனுநீதி, ஆணாதிக்க அச்சில்களால்  வனையப்படுகின்ற பெண்ணின் தோற்றத்தை மறுத்து,தங்களின் உயிர்த் துடிப்பை உற்றுக் கற்றுக் கொள்ள  மொழிகின்ற, வேட்டை மிருகங்களின் வயிற்று இரையானாலும், செரிக்க மறுத்து உயிர்த்தலிற்காக போராடுகின்ற பெருவெளிப் பெண்கள் குறித்த நம்பிக்கைப் பதிவு.

குடும்பமும் சமுகமும் சூட்டும் பட்டப்பெயர், வசைப்பேச்சு கேட்டு புழுங்கும் பெண்ணாக இல்லாமல்,

`எல்லாவற்றிற்கும் நானே காரணம் என்ற/இரைச்சலுக்கு மத்தியில்/குத்தகை விட்ட யோனி மீட்டு/மீண்டும் உயிர்த்தெழுவேன்என்று தன் சுதந்திரத்தை மீட்டெடுக்க முயலும் நவயுகப் பெண்களின் குரலாக ஒலிக்கின்றது.

`புணர்வுகளில் முலை வெடித்து/தாயெனும் பட்டம் என்னைத்/தேய்த்து தேய்த்து உருவங் கொடுக்கையில்/சேகரித்த உள்மனக் கொந்தளிப்புகள்/நான் யாரென/வினா தொடுக்கும் நான்

ஆண்களின் நான் அகங்காரத்தின் வெளிப்பாடு.பெண்களின் நான் சுதந்திர வெளிப்பாடு.ஆணின் நானிலிருந்து பெண்ணின் நான் ப்ரமாண்ட வித்தியாசம் கொண்டது.பெண்ணின் நான் சுயத்தின் வெளிப்பாடு.

உலகமயமாக்கல் நகரங்களை மனிதர்களை வாழ்க்கையை சிதைக்கும் என்பதை `தெறித்த விலாகவிதையில் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

பசியழித்து உயிர் வளர்க்கும் அமுதசுரபியே கிடைத்தாலும் அதை வைத்து உறுபசி போக்க எண்ணாமல் எண்ணெய் வயல்களுக்காகவும்,அணுகுண்டுகளுக்காகவும் பயன்படுத்தும் ஆதிக்க நாடுகளின் அசல் முகவரியை காட்டுகிறது பயணம் கவிதை.

கொசாவா,ஈழம்,ஆப்கன் என தொடர்ந்த போர்கள் ஆனாலும் அரசியல்,சாதி, மதம் சார்ந்த வன்முறை ஆனாலும் இலக்காகி பலியாகுவது உயிர்ப்புகளின் கருவூலமான பெண்களே.

இயற்கையின் வடிவுறுவானப் பெண்களின் மீது தொடரும் ஆண்களின் கால கால யுத்தம் உறுப்புகளை சிதைப்பதோ வல்லாங்கு செய்வதோ மட்டுமின்றி  பெண்ணினத்தையே கருவறுக்கும் போருக்கு எதிரான அறைகூவலை ஏற்று அழிய மறுத்து உயிர்ப்பின் அரசியற்குரலாக  வெளிப்படுகின்றது இப்படி:

`வரையறைகளும் குறியீடுகளும்
குறி வைத்தாலும்
யாம்
விழுங்கி ஒளிரும் சூரியக் கரும்புள்ளிகளாய்
உயிர்த்தலின்
தொப்பூழ்க் கொடியாய்த் தொடரும்
பெருவெளிப் பெண்
என்று வெளிப்படும் குரல் ஆண்களால் பின்னப்படும் அழிமான வலைகளை அறுத்தெறியும் புதியக் குரலாக வெளிப்படுகின்றது.

 பெருவெளிப் பெண்,உயிர்ப்பு,நிரவல்,தனிமை,நட்பு,கதவின் ஓலம்,வழிந்தோடும் விசும்பல்,எல்லைகளுக்குள் இல்லை என சொல்லத்தக்க கவிதைகளால் நிறைந்திருக்கிறது பெருவெளிப் பெண்.
(நன்றி:புதிய புத்தகம் பேசுது/2008 நவம்பர்) 

Tuesday, February 12, 2013

காவற்பெண்டுகள் தோழிகளின் துயரம் சொல்லும் வஞ்சியர் காண்டம்





 இராதெ முத்து 
இளங்கோவடிகளின் சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்தை மறுவாசிப்பு செய்த முறையில் நிகழ்த்தப்பட்ட  நாடகம் பிரளயனின் வஞ்சியர் காண்டம்.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோட்டம் அமைக்க இடம் தேடியதும்,வடபுலம் சென்று கல் எடுத்து வந்தமையும்,கோட்டம் அமைத்தமையும் ஆன காட்சிகள் கொண்டது இளங்கோவின் வஞ்சிக்காண்டம்.

பிரளயனின் வஞ்சியர் காண்டமோ கன்ணகியின் செவிலித்தாய் காவற்பெண்டு,கண்ணகியின் தோழி தேவந்தி,ஆயர்சேரி மாதரி மகள் ஐயை ஆகியோர் வழி கண்ணகியின் தெய்வப் பிம்பம் கலைக்கப்பட்டு,அவளுள் கனன்ற எண்ணங்களை,மதிப்பீடுகளை,மனிதர்கள் குறித்த அளவுகளை அசை போடும் நிகழ்வின் வடிவம்.

நீர் கலசத்தோடும் முளைப்பாரிகளோடும் கூட்டம் கூட்டமாக மக்கள் குடவாயில் கோட்டம் காணச் செல்கின்றனர்.இவர்களோடு கோட்டம் காண செல்கிறார்கள் காவற்பெண்டு,தேவந்தி,ஐயை.

தேவந்தியும் ஐயையும் கண்ணகியின் சிறு பருவம்,அவளின் வளர்ப்பு முறை,மாதவி குறித்து கண்ணகியின் உயர்மதிப்பீடு ,புகாரில் தனிமையில் கண்ணகி வாழ்ந்த அவலம் ,மதிரையில் கோவலனோடு வாழ்ந்த துயரம் என காவற்பெண்டிடம் விவாதித்து விவாதித்து தாங்கள் அறிந்து கொள்ளும் முறையினூடாக பார்வையாளர்களுக்கு ஒரு புதிய கண்ணகியை,இதுவரை அறியப்படாத நவீன கண்ணகியை நம்மோடு உலவவிட்டிருக்கிறார்கள்.

 நாகநாட்டிலிருந்து புகாருக்கு,மதுரைக்கு  காவற்பெண்டுகள் தாங்கள் அடிமையாய் வந்த வரலாற்றை கண்ணகிக்கு முந்தைய மூன்று தலைமுறைகளின் வரலாறு தொட்டு பேசுவதும்,மாசாத்துவான் மகளுக்கு பால் ஊட்டுவதற்காக காவற்பெண்டுகள் வணிககுலத்தாரால் கருவுறச் செய்யப்பட்ட கண்ணீர் கதையையும்,தன் மடியில் வேல்கம்பு தாங்கி வெதுவெதுப்பான குருதியை ஓடவிட்டு உயிர்துறந்த தலைக்கோலியான தன் காதலனை நினைத்து காவற்பெண்டு அழுவதும் அரற்றுவதுமான காட்சிகள் வழி ,இலக்கியத்தில்,நாடகத்தில் பதியப்பெறாத காவற்பெண்டுகள்,தோழிகளின் துயரக்கதையை நாடகம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறது.

கணவனுக்காக பிறந்த வீட்டிற்காக ஊருக்காக தனது ஆசைகள் விருப்பங்கள் நசுக்கப்படுவதையும்,தன் துயரம் மாறி நல்வழி பிறக்க தீர்த்தமாடி கோயில்கள் வழிபட்டு வரவா என தேவந்தி கண்ணகியிடம் கேட்குமிடத்தில் `உன்னைவிட்டு பிரிந்த உன் கணவனுக்காக எத்தனை தீர்த்தமாடினாய் உன் கணவன்உன்னிடம்  வரவில்லையே;கோவலன் மட்டும் எப்படி மீண்டு வருவான்’ எனக் கேட்டு கண்ணகி சொல்லும்`உன் அகத் தீர்த்தமாடி உன்னையே அறிவது நல்லது’என்கிற இடம் மூடத்தனத்தை,தெய்வமின்மையை விமர்சிக்கும் இடமாக துலக்கமுறுகிறது.

பட்டறிவால் சுயசிந்தனை கொண்ட பெண்ணாக, சமுகத்தை உணரும் பென்ணாக ,மாறிய கண்ணகியை பாண்டியனிடம் தேரா மன்னா செப்புவது உடையேன் என்று சிலம்பை உடைத்து நியாயம் கோரிய பெண்ணாகிய கண்ணகியை ,இயக்கி என்றும் கொற்றவை என்றும் காளி என்றும் மாற்றி, பின் தொடரும் சமுகத்தை மூடத்தனத்தில் ஆழ்த்தும் திருப்பணியை செய்த சேரன் செங்குட்டுவனின் அதிகார முகத்தை கிழித்தெறியும் புதிய புனைவாக அழகியலோடு வெளிப்பட்டிருக்கிறது வஞ்சியர் காண்டம்.

தேசிய நாடகப்பள்ளி,மண்டல வள மையம்-பெங்களூரு,தென்னக பண்பாட்டு மையம்-தஞ்சாவூர் இணைந்து நடத்தும் ஒருமாத கால உண்டு உறைவிட நாடகப் பயிலரங்க பங்கேற்பாளர்கள் வழங்கும் வஞ்சியர் காண்டத்தின் இயக்குநர் பேராசிரியர் ராஜூ,நாடகப்பனுவல் பிரளயன்.

மேடையில்:க.பிரியங்கா-கண்ணகி/சே.அஜிதா-காவற்பெண்டு/ம.வித்யா-தேவந்தி/ஆ.ரூபா-ஐயை/சு.நந்தினி-மாதரி/த.மகேஸ்வரி-கண்ணகியின் தாய்/மதியழகன் -மாநாய்க்கன்/ச.மணிகண்டன் -கோவலன்/சாரதி கிருஷ்ணன்-கூத்தன்/மா.மோகன்-உவச்சன்/பிரகதீஷ்வரன்- பூசகன்


2013 பிப்ரவரி 12 அன்று சென்னையில் நாடகத்தை நிகழ்த்த மேடை அமைத்தவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவல்லிக்கேணி கிளை மற்றும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மற்றும் கல்வியாளர்  பிரின்ஸ் கஜேந்திரபாபு. 

Sunday, February 10, 2013

தி.பரமேசுவரியின் ஓசை புதையும் வெளியை முன் வைத்து பெண்ணெழுத்தின் ஓர்மையும் ஓசையும்




எனக்கான வெளிச்சத்தைத்  தொடர்ந்து தி.பரமேசுவரியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாக வந்திருக்கிறது ஓசை புதையும் வெளி.வெளிவந்து ஓராண்டு ஆகிவிட்டது.இலக்கிய வெளியில்,ஆய்வு வெளியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற இவரின் இந்தத் தொகுப்பு இதுவரை கவனிக்கப் படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்று மட்டும் சொல்ல முடிகிறது.

ஓசை புதையும் வெளி என்கிற சொற்களின் கவித்துவமும் அது உணர்த்தி நிற்கும் வெளியும் ஆயிரமாயிரம் கேள்விகளையும்,பெண்வெளி குறித்த  புரிதல்களையும் கிளர்த்துகிறது.

மானுட சமூகத்தின் வரலாற்று ஓர்மை குறித்தப் பதிவு,பண்பாடு,அரசியல்,பொருளாதாரம் குறித்தப் பதிவுகள் ஈராயிரம் ஆண்டுகளாக புழங்கப்பட்டு வரும் மொழியின்  பெண்வெளியும் ,பெண்மொழியும் ஆண் மைய சட்டகத்தினூடாய் வனையப்படுவதும்,வனைதலின் நிர்ப்பந்தம் தொடர்ந்து நீடிப்பதும் தொழிற்நுட்ப ரீதியிலான வளர்ந்து வரும் ஓர் இனத்தின் மேம்படாத அகத்தின் மறுபக்கத்தை காட்டி நிற்கிறது.

தி.பரமேசுவரியின்  வெளியெங்கும் பெண் சுயம்,பெண் விருப்பு,பெண் தேடல் புதைக்கப்படுதலும் சுயத்தை மீட்டுக் கொள்வதற்கான ஓர்மையும் ஓசையும் கவிதைவெளி எங்கும் காணப்படுகின்றன.பெண் சுயமும்,பெண் விருப்பும் அது சார்ந்த கிளைத்தலும் எப்பொழுதும் வெளி சார்ந்தும்,வெளி தொடர்புடைய காலம் சார்ந்துமே காணப்படுகின்றன.

பெண் உணர்வுகளின் நுண்ணறைகளில் புதைந்து கிடப்பதை, அவர்களன்றி யாராலும் புரிந்து கொள்ள இயலாதவைகளை, தொடரும் ஆணுலக நெருக்கடிகளில் இருந்து தம்மை மீட்டெடுப்பதற்கான செயலாக, நவீனப்பாடினிகள் தான் அறிந்த மொழியில் தன்னுணர்வைப் பதிவு செய்து வருகின்றனர்.இங்கு பரமேசுவரி முத்தங்களால் ஆனது தன் உலகம் என்று தான் கட்டமைத்திருக்கும் பெண்ணின் அவசமான பரவசத்தை வெளிப்படுத்துகிறார்.

இந்தப் பெண்ணின் உணர்தலில் ”நிரம்ப நிரம்பத்  தளும்பாத ஆதிக்கிண்ணத்தில் சுழன்று கொண்டிருக்கும் உடல்கள் கனன்று கனன்று கறுத்த இரவுகளில் வெளிச்சத்தை படர்த்துகிறது” என்றும்,இரவை ஆடையாகப் போர்த்திக் கொண்ட தன்னை முத்த உமிழ்நீரில் எரியும் பனிக்காடாய் மாற்றியதன் வழி ஒவ்வோர் முறையும் தான் உயிர்ப்பதாகவும் சொல்லிப் போகும் கவிதையில் இரவு அன்பின் பற்றுக்கோடாய் படிமமாகிறது.நினைவெனும் கொடும்பறவை எனும் கவிதையில்  யாருமற்றப் பகல் பொழுதில் குற்றுயிராய் கிடக்கும் தன்னை  ராஜாளி போலுமான தனிமை உடல் பரத்திக் கொத்துகிறது என்று,பகல்பொழுது பதியப்படுவதன் நிமித்தம் பொழுதெல்லாம் காமமும் காதலும் உடனுறைய உருகுகிறது மொழி.

காதல் சார்ந்த அன்போ,நட்பு  சார்ந்த அன்போ வலியை வெளிப்படுத்தினாலும் அதனை விட்டு விலக இயலாத மென்மனம் கொண்டமை உதிர ஓவியம்,செம்மலர்,என்றும் பெயர் போன்ற கவிதைகளில் காட்சிப்படுத்தப்பட்டு,உருளும் கண்ணீர்த்துளிகளை உணவாக்கிக் கொண்ட மனங்கொத்திப்பறவையின் கூரிய வசைச்சொற்களை தாங்க இயலாததுடன்,ஏமாற்றி அணிவிக்கப்பட்ட சங்கிலியுடன் வறட்டு ஓலமிடும் நாயென அடையாளப்படுத்தப்படும் பொருந்தாத திருமண உறவு மனங்கொத்திப் பறவை,சங்கிலியில் திரியும் சுதந்திரம் கவிதைகளில் விரிகிறது.

மரபார்ந்த குடும்ப வெளி அல்லது  உறவு வெளி பெண் மனதை புறக்கணிப்பதையும்,பெண் மனதின் விடுதலை கிளைப்புகளை தாண்டிச் செல்வதுமான மனதைக் கொண்டிருக்கிறது.உதிரப் பெண் மனதும் கூட சக பெண் மனதின் அகச்சிக்கல்களையோ அல்லது மலர்ச்சிகளையோ ஏற்றுக் கொள்ளாமல் மரபார்ந்த குடும்ப வெளியில் வதைபட தருதலை தொகுப்பினூடாய் வாசிக்கிற பொழுது  அதிர்கிறது மனம்.

பெண் இருப்பின் பிரக்ஞை  உணராத ஆண் மனம் போகம்  பாவிக்கும் இடமென பெண்ணுடலின்  மீதான  ஊர்தலை உணர்வற்ற மரவிரல்களெனவும்,நனைவின் புதைமணற்வெளி எனவும் அவதானிக்கிற பெண் சுயம்,வீடு தாண்டிய வெளியின் புரிதலின் போதாமையினால்  குடும்பச் சட்டத்தினூடாய் பயணம்  செய்ய நினைக்கின்ற, தொடர்ந்து தொடுக்கப்படுகிற   கற்சலனத்தினால் ,வாசல் தொடுகிற மனதை மீட்டெடுத்துக் கொண்டு ,ஊர்கூடி இட்ட நுகத்தடியின் கயிறு அறுத்து தன் போக்கில் பயணித்து திரியும் பெண்வெளியிலான  சுயத்தை பரக்கப் பார்க்கலாம்.

சுதந்திரத்திற்கு பிறகான ஆண்டுகளில் பெண் கல்வி,பெண் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியான அவதானிப்புகள் மற்றும் இலக்கியப் பதிவுகளினூடாய்,ஏற்பட்ட வளர்ச்சிகள் அல்லாமல் தொண்ணூறுகளுக்குப் பிறகான பொருளாதார புதுப்பித்தல் வெளியின் தேவை சார்ந்து அரசு சாரா பணியிடங்கள் பெண்களுக்கு கிடைத்தப் பொழுதும்,பெண் குறித்தப் ஆணுலகப் பார்வையில் பாகுபாடு நீடிக்கின்றது.இந்தப் பாலினப் பாகுபாடு உலகமயச் சூழலில் சுழன்றடிக்கிறது.குடும்பங்களில் சமத்துவமற்ற வேலைப் பிரிவினைகளால் அதிகபட்ச சுமைகளைப் பெண்கள் சந்திக்கின்றனர்.

ஓரளவு பொருளாதார சுயச்சார்பு ,கல்வி காரணமாய் பெண் தன்  சுயம்,இருப்பு,சூழல் குறித்து கவனம் கொள்கிறாள்;கேள்விகளை  எழுப்புகிறாள்;சுயத்தின்  மீதான பாகுபாட்டை குலைத்துப் போட முயல்கிறாள்.வீடுகளில் அவள் மீதான எழும் கேள்விகள் முடிந்து போய்விடவில்லை.கணவராதிக்கக் குரல் சில இடங்களில் உயர்ந்தும் வேறு சில இடங்களில் தாழ்ந்தும் காணப்பட்டாலும்,அந்த ஆதிக்கக் குரல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன

இந்தச் சூழலில் தன்னுணர்வுக் கொண்ட பெண் மொழிகளில் தலைகீழ் மாற்றம் ஏற்படுகிறது..தன் இருப்பை புரிந்து கொள்ளும் மனங்களில் தன் விருப்பை ,அன்பை பதியனிடுகிறாள்.ஊர்பாட்டை பெரிதாய் செவி மடுப்பதில்லை.தன் பாட்டையை விரிவாக்குகிறாள்.சுயம் செல்லும் பாதையில் த்ன்னை விதைக்கிறாள் இப்படி:

கொதிக்கும் உலையை
உற்று நோக்கும் கண்கள்
உள்ளிருக்கும் ஈரம்
முழுவதையும் வெளியேற்றுகிறது
இறுகிப் பாறையாகிறேன்
மோதும் காற்றிலிருந்து எழுகிறது
பறையோசை
திசையெங்கும் அதிர்வுகளாய்
ஊழிக்காலம் தொடங்குகிறது ரெளத்ரமாய்(உள்ளிருக்கும்  ஈரம்)

ஓசை புதையும் வெளி
தி.பரமேசுவரி
வெளியீடு
வம்சி புக்ஸ்
திருவண்ணாமலை

Wednesday, February 6, 2013

விஸ்வரூபம் :சர்ச்சையும் சந்தேகமும் 4








விஸ்வரூபம் தமிழ்நாட்டில் 7 ஆம் திகதி வெளியாகவிருக்கிறது என்பதை கமல் அறிவித்துவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கமலும்,நீதிமன்றத்திற்கு வெளியே தமிழகஅரசின் தலைமையில் கமல்,இஸ்லாமிய பழைமைவாத  அமைப்புகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அரசு தரப்பும் படத்தை திரையிட தமக்கு ஆட்சேபனையில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இது குறித்த வழக்கு நடைமுறைகளை முடித்து வைப்பதாக நீதிபதி இராஜேசுவரன் அறிவித்துவிட்டார்.

ஆனாலும் கேள்வி நீடிக்கின்றது.தமக்கு ஒத்து  வராத ஒரு கலைஞர் என்றால் அவரை பிடிக்காத நடிகராக்கி காட்டுவதும் ஒரு திரைப்படத்தை உடனடியாக முடக்குவதும்,அந்தக் கலைஞரை தம்மை அண்டி நிற்க வைப்பதும் என்பதான  அரசாங்கத்தின் தொடரும் அராஜக நடைமுறைக்கு மாற்றம்  தேவை என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது

மத்திய அரசின் சினிமேட்டோ கிராஃபி(1952) சட்டத்தின் 10 ஆம் பிரிவை ஒட்டி மாநில அரசு(1957)ஆண்டில்  ஏற்படுத்திக் கொண்ட சட்டப்படி  பராசக்தியில் ஆரம்பித்து தண்ணீர் தண்ணீர் வழியாக இன்று விஸ்வரூபம் வரை தேவைப்படும் பொழுதெல்லாம் பிடிக்காதவர்கள் மேல் இதனை ஆயுதமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது.




 எம்.ஜி.ஆர்.ஆட்சிகாலத்தில் கோமல் சாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகத்தை இயக்குநர் பாலசந்தர் திரைப்படமாக எடுத்தார்.இதை தனது இலட்சிய படம் என்றார் பாலசந்தர்.அப்போது செய்தித்துறை அமைச்சராக இருந்தவர் பெரியாரின் சீடர் என்று இன்றளவும் பேசிக் கொண்டிருக்கும் ஆர்.எம்.வீரப்பன்.இவர்கள் தான் தண்ணீர் தண்ணீர் படத்தை தடை செய்ய முயன்றார்கள்;மீறி இந்தப் படம்  வந்த பொழுது ஆங்காங்கே ஆள் வைத்து மிரட்டினார்கள்.படத்தை  எதிர்த்து கருத்துகள் சொன்னார்கள்..ஆனாலும் படம் வெற்றிகரமாக ஓடியது.

இவர்கள் படத்தை தடைசெய்ய முயலக் காரணம் படம் பேசிய அன்றைய  அரசியல். எம்.ஜி.ஆர் தன் படங்களில் அரசியல் பேசுவார்;கொடி காட்டுவார்.தானே முதல்வராக இருந்த பொழுது இன்னொரு படம் மாநிலத்தின் அரசியலை பேசினால் பயந்து அலறி தடை செய்ய முயல்வார்.இதே எம்.ஜி.ஆர் திரைப்படத்தை  தடை செய்யும் மசோதாவை 1987 ல் கொண்டு வந்த பொழுது பெரிய எதிர்ப்பை சந்தித்தார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் திரையுலகின் கோபத்திற்கு களம் அமைத்து சிறப்பு மாநாடு ஒன்றை சென்னையில் நடத்தியது.பின்னர் மசோதா கிடப்பில் போடப்பட்டது என்பது வரலாறு.

இதே பாதையில் ஜெயலலிதாவும் இறங்கி இருக்கிறார்.அதுவும் சட்டத்தின் ஓட்டைகளைப்  பயன்படுத்தி சட்டப்படி அடிக்கப் பார்க்கிறார்.
தணிக்கைச் சான்றிதழ் பெறாத படங்களை பொதுத் திரையிடுதலிலிருந்து விலக்கி அமைதியை காக்க வேண்டி மாநிலத்திற்கு பொறுப்பளிக்கப்பட்ட  `திரையிடுதலை முறைப்படுத்தும் சட்டத்தை  ,தானே தணிக்கை வாரியம் என்பது  போலவும் ,முழுப்பொறுப்பு என்பதாகவும் நினைத்துக் கொண்டு ,தணிக்கைப் பெற்ற படத்தை அமைதிக்கு குந்தகம் செய்யும் என்று சொல்லி பொதுத் திரையிடலிலிருந்து நீக்கி வைப்பது   சட்டத்தை தன் தேவைக்கேற்ப வளைப்பது ஆகும்.



அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டப் பிறகு அதனுள் நின்று செயல்பட வேண்டிய அரசு அதை மீறுவது என்பது தவறான செயல்.அதிகார வரம்புப் பட்டியலை மாற்ற வேண்டும் என்று மாநில மக்களின் கருத்தையும் அறிந்த பிறகு மாநில அரசு இதற்கான இயக்கத்தை எடுக்க முன் வந்தால் அதை ஆதரிப்பது என்பது தனி.பிரச்சினை இப்பொழுது இதை ஒட்டி அல்ல.

விஸ்வரூபத்தை பொறுத்த அளவில் ஜெயலலிதா அரசு பொறுப்பை மீறி போக்கிரித்தனமாக நடந்து கொண்டது என்பதே யதார்த்தம். விஸ்வரூபத்தை15 நாட்கள் திரையிட தடை செய்ததை எதிர்த்து ஊடக உலகம,அரசியல் உலகம்,முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,திரை உலகினர்,பொதுமக்கள் கொந்தளித்ததை ஒட்டி சமரசம் செய்கிறேன் என்று இறங்கி வந்தார். மாநிலங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றப் படங்களை தம் மாநில எல்லைக்குள் கொட்டகையில் திரையிட லைசென்ஸ் என்கிற அனுமதி தர அல்லது மறுக்க மட்டுமே இயலும்.படத்தை தடை செய்யும் அதிகாரம் இல்லை.

தணிக்கை பெற்ற படத்தை மறு தணிக்கைக்கு உந்தித் தள்ளுவது என்பதோ,சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் நேரும் என்பதோ சொல்லும் இந்தக் காரணம் பெண்களை படுகேவலமாக சித்திரித்த பல தமிழ்ப் படங்களை எதிர்த்து பெண்கள் கொந்தளித்தப் பொழுது திரையரங்கின் முன் போராட்டம் நடத்திய பொழுது அரசு அசைந்து கொடுக்கவே இல்லை. பராசக்தி ,சிவப்புமல்லி,தண்ணிர் தண்ணீர் ,விஸ்வரூபம் என்று மட்டும் அரசு   விஸ்வரூபம் காட்டி நின்றது;நிற்கிறது.

குறிப்பு:நண்பர்களின் வருகையும் வாசிப்பும் உவப்பு தருகின்றது.
உங்கள் கருத்தை மேலும் தெரியப்படுத்துங்கள்;விவாதிப்பு பார்வையை துலக்கமாக்கும்;நன்றி