Monday, April 23, 2012

ஈழம் குறித்த அருள் எழிலனின் கோக்கு மாக்கு கூத்து



இராதெ முத்து :கொக்க மக்கா கோக்கு மாக்காலா பேசுது
மத்திய தரைக்கடல் வழியாக வந்த ஆரிய ரத்தம் கலவாத சாதியா நாமு?எழிலு சோக்கு சொல்லாதமா

//இப்போது அந்த மக்களுக்கு தேவை சுவாசமே, வாழ்வில் எல்லாவற்றையும் அவர்கள் இழந்து விட்டார்கள் அவர்கள் அதை மீளப்பெற வேண்டும் புதிய வாழ்வை துவங்க வேண்டும் என்பதால் // இதை நீங்கள் உணரும் முன்பே பேசியது மார்க்சிஸ்ட்.நணப மறதி நோயின் குறி.

தமிழ் ஈழம் கேட்கும் நண்பர்களை ஒருமையில் நாங்கள் என்றும் பேசியதில்லை.இங்கு உங்கள் வார்த்தையில் பொங்கும் வன்மம் உங்கள் பண்பாடற்ற,விவாதிக்க அஞ்சுகிற,மொன்னை ஆயுதத்தோடு விவாதிக்கத் தெரியாத உங்கள் இயலாமையைதான் காட்டுகிறது குரூப் ஆப்பு எழில்

போர்களத்திற்கு வெளியே நின்று பிதற்றுவது என்ன தனம்?ஈழம் ஒன்றே தீர்வு எனில் 2009 மே 18
வரையிலான போரின் தன்மை இப்படி கையறு நிலையில் போய் முடிந்து இருக்காது.மக்கள் யுத்தமாக பொங்கி பூத்திருக்கும்.யாரின் வசவுகளுக்கும்,பூரிப்புகளுக்கும் அப்பாற்பட்டது மக்கள் போர்.

மக்கள் போராக மாறி போயிருந்தால் நிலைமை இப்படி இருந்திருக்காது.உயிர் பயம் அறியாது விடுதலை போராட்டம்.தன் வலி,பிறர் வலி தெரியாமல்,காலம்,சூழல் அறியாத ,தமிழ் மக்கள் யாவரையும் இணைக்கத் தெரியாத ஒரு தலைமையின் சோகம்,மொத்த மக்களின் சோகமாக போய்விட்டது

.இரண்டாம் உலகப்போரில் தாயகத்தை காப்பாற்ற பொங்கி எழுந்த சோவியத் ,71 களில் அமெரிக்க தலையீட்டை எதிர்த்து சினந்த வீர வியட்நாம் போரும் தோற்காதன் காரணம்,அது மொத்த மக்களின் போராக மாறியதால்.ஒரு பெரும் நோக்கு சிலரின் சவடாலாக போய்விடக்கூடாது என்பதே நம் கவலை.

தனிநாடுதான் தீர்வு எனில் அம்மக்களின் போராட்டம் பலவடிவம் பெற்றிருக்குமே தொடரும் பாலஸ்தீன போர் போல:நீடிக்கும் ஈராக் மோதல் போல.இன்று நம் ஈழ மக்களுக்கு தேவை உத்திரவாதம் இல்லாத சவடால்கள் அல்ல.அவர்களின் நிலம்,அவர்களின் வாழ்வுரிமையை அவர்களுக்கு கிடைக்கச் செய்வதே உடனடித் தேவை.தேவை என்னவோ அதற்கான முழக்கம் வைத்தால் மட்டுமே வெல்ல முடியும்.எங்கோ கை நீட்டி விட்டு,கூலிக்கு மாரடிப்பது வேண்டாம்.

வாருங்கள் ஒன்றாய் போரடுவோம்.இலங்கை மீதான போர் குற்ற விசாரணைக்கு,சர்வதேச தரத்திலான,நம்பகத் தன்மை வாய்ந்த குழுவை அமைக்கக் கோருவோம்.மக்கள் வாழும் பகுதியிலிருந்து ராணுவத்தை திரும்ப பெறக் கோருவோம்.சம உரிமை,சரிநிகர் வாழ்வு கேட்டு ,முழங்குவோம்.இலங்கையிலும் சனநாயக உரிமைக்கான போராட்டங்கள் நடைபெறட்டும்

Tuesday, April 17, 2012

கோபம்










மீசை மட்டுமா
ஆண்களுக்கு அழகு?
கோபம் கொள்தல்
அதனினும் அழகு

மெட்டி பார்த்து
நடப்பதா பெண்களுக்கு அழகு?
எட்டி மிதித்து
நடப்பதே பேரழகு

குழந்தைகள் மீதும்
குடும்பத்தார் மீதும்
அக்கம் பக்க நட்புகள் மீதும்
கொள்வதா கோபம்?

எங்கே செலுத்த வேண்டுமோ
அங்கே செலுத்தவும்
எங்கே மீட்க வேண்டுமோ
அங்கே மீட்டுக் கொள்ளவும்
தெரிந்திருக்க வேண்டும் கோபத்தை

வெற்று ஆசைகளுக்கோ
சுயநலத்திற்கோ
குவார்ட்டர் கட்டிங்களுக்கோ
கொள்வதா கோபம்

கோபம்
பெருங்காட்டு தீ
கொதித்தெழும் எரிமலை
சுருட்டிக் கொள்ளும் சுனாமி

குப்பை அள்ளவில்லையா
கோபம் கொள்ளுங்கள்
ரேசன் கடைகளில்
பொருட்கள் இல்லையா
கோபம் கொள்ளுங்கள்
வேலை இடங்களில்
கூலி இல்லையா
கோபம் கொள்ளுங்கள்

இது கோபத்தின் சிறு பொறி

பெருந்தீ எது?

அறம் சார்ந்த கோபம்
அரசியல் காக்கும் கோபம்
உள்ளூர் முதல் உலகம் வரை
 அநீதி எதிர்த்த கோபம்

குடிகளுக்கு ஆதரவாய்
கோடிகளை எதிர்த்த கோபம்
பெண்மை மீது படரும்
சூழ்கலி அழிக்கும் கோபம்

நெய்தல் முல்லை பாலையாக்கப்பட்ட
பாழாட்சி எதிர்க்கும்
அண்டம் அதிரும் கோபம்

விலையில்லா பொருட்கள் கொடுத்து
சுயமரியாதை வாழ்வை பறிக்கும்
வரலாற்றுப் பிழையான வைதீக
கோட்டைகளை தகர்க்கும் கோபம்

குடி மீது கொடும் வரி போடும்
ஒரு சதத்திற்காய்
தொண்ணூற்று ஒன்பது சதத்தை
வெட்டி வீழ்த்தும் 
கொத்தளங்களை சாய்க்கும் கோபம்

நமது கோபத்தில்
சுயநலம் இல்லை
பேராசை இல்லை
அநீதி இல்லை
என்பதனால்
நமது கோபம் நியாயம்
நமது போராட்டம் நியாயம்
நமது தர்க்கம் நியாயம்
நமது ஆவேசம் நியாயம் நியாயம்

Wednesday, April 11, 2012

காதுகளை திறந்து வைத்து அறிவுலகோடு விவாதித்த ஒரு மார்க்சிஸ்ட்





என்.வி என எங்களால் அன்போடு அழைக்கப்பட்ட தோழர் என்.வரதராசன்
அவர்கள் இன்று இல்லை.நேற்று காலை உயர் சர்க்கரை நோய் பாதிப்பால்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிட்சை பலனின்றி இயற்கை எய்தினார்.வயது 87 என்ற போதும் அவருக்கான இந்த முடிவை தோழர்கள் நாங்கள் எதிர்நோக்கி இருக்கவில்லை.கோழிக்கோட்டி ல் ஏப்ரல் 4 முதல் 9 வரை நடைபெற்று முடிந்த ,மார்க்சிஸ்ட் கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கு பெற்று ,10 ஆம் தேதி காலை சென்னை வந்தவர் உடல்நலன் சரி இன்றி,இசபெல்லா மருத்துவமனை போனவர் ,சடலமாய் திரும்பி வந்தது அறிந்து அதிர்ந்தது மனம்.

அவரோடு நான் பத்தாண்டு காலம் நெருக்கமாகப் பழகி இருக்கிறேன்.கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்;மாநிலச் செயலாளர் பொறுப்பில் அவர் இருந்த போதும்,எந்த விசயம் என்றாலும்,எனக்குப் பட்ட கருத்தை வெளிப்படையாக அவரிடம் சொல்லி இருக்கிறேன்.என்னிடம் வெளிப்படும் நல்ல கருத்துகளை அவர் ஏற்றுக் கொண்டு,அதனை உரிய முறையில் கட்சி மட்டத்தில் பேசி,நடைமுறை படுத்தி இருக்கிறார்.சரியற்ற கருத்துகள் என்றால் நாசுக்காக ``இரா.தெ உங்க கருத்தை பரிசீலியுங்கள்” என்பார்.ஒரு தடவையேனும் முத்து என அவர் என்னை விளித்ததில்லை.இரா.தெ என்று தான் அழைப்பார்.

கட்சியின் மாநிலச் செயலாளர் என்ற முறையில் அவர் கட்சியின் மாவட்ட்க் குழு கூட்டங்கள்,கட்சின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் பல வெகுமக்கள் அமைப்புக் குழு கூட்டங்களுக்கு அவர் வருவதுண்டுஅப்பொழுதெல்லாம் தோழர்களின் கருத்துகளை வெகு சிரத்தையாக காது கொடுத்து அவதானிப்பார்.இறுதியாக வந்த கருத்துகள் அடிப்படையில் அவரிடமிருந்து பொருத்தமான முடிவு வெளிவரும்.எதிர்மறையான கருத்துகள் சில தோழர்கள் மத்தியில் எழும்போது ”சரி இது உங்கள் கருத்து;ஆனால் கட்சி கருத்து இது அல்ல” என்று கட்சியின் பார்வையைச் சொல்லுவார்.

ஒரு பஞ்சாலை தொழிலாளி,சாதாரண படிப்பு படித்தவர் என்ற போதும் கலை,இலக்கிய அரங்கம்,ஆசிரியர் அரங்கம்,பத்திரிகையாளர் அரங்கம் போன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதோ,கட்சியின் பொதுக்கூட்டங்களின் போதோ அவர் பாரதியின் பொருத்தமான கவிதை வரிகளை கம்பீரமாகப் பயன்படுத்துவார். கட்சி மீதான எதிர் வர்க்கத் தாக்குதலை எதிர் கொண்டு,அவர் பேசும் போது அவர் பேச்சில் அனல் தெரிக்கும்.எந்த கொம்பர்களும் மார்க்சிஸ்ட் கட்சியை ஒன்றும் செய்து விட முடியாது என முழங்குவார்.

கலை,இலக்கியம் பால் அவருக்கு அளவற்ற ஈடுபாடு இருந்தது கலை இலக்கிய ஆளுமைகள் மீதும் அவருக்கு நேசம் இருந்தது.ஆண்டு தோறும் பாரதி பிறந்த நாளின் போது அவர் கட்சி தலைவர்களோடு திருவல்லிக்கேணி பாரதி நினைவில்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்வார்.அப்பொழுதெல்லாம் அவர் எனக்கு போன் செய்யச் சொல்லி,என்னையும் கவிஞன் என்ற முறையில் காரில் அழைத்துக் கொண்டு போவார்..கலைப்பட்டறைகளின் போது அடிக்கடி வந்து ஆலோசனைகள் தந்து செல்வார்.

கட்சி மீது அன்பு கொண்ட திரைப்பட இயக்குநர்களின் சிறப்பு திரைப்பட காட்சிகளின் போது,அதற்கென்று நேரம் ஒதுக்கி படம் பார்த்து கருத்துகளை சொல்லுவார்.அரசுக்கு கடிதம் எழுதி,குறிப்பிட்ட திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கக் கேட்டுக் கொள்வார்.அப்படி தங்கர்பச்சானின் பள்ளிக்கூடம் திரைப்படத்திற்கு கலைஞர் முதல்வராக இருந்த 2008 ஆம் ஆண்டில் வரிவிலக்கை கோரினார்.திரை ஆளுமைகளை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சந்திப்பார்.அவர்களின் கருத்துகளை கேட்பார்.அவர்களை பொருத்தமான விழாக்களில் பங்கேற்க கேட்டுக் கொள்வார்.இந்த பொழுதுகள் பலவற்றில் நானும் அவரோடு பங்குபெற்றிருக்கிறேன்

Friday, April 6, 2012

உயிர்த்தெழுந்த மீட்பரிடம் சில விண்ணப்பங்கள்

கல்வாரி மலையில்
உயிர்த்தெழுதலுக்கு முன்பான
உதிரம் தோய்ந்த 
உன் வாழ்க்கையும்
போதனைகளும் 
உதிரம் கலந்து ஓடிக் கொண்டிருக்கின்றன

உனது வருகை சமீபித்து விட்டதாக
நாட்டையர்களும் பங்குத்தந்தைகளும்
பேசியும் போதித்தும் வருகிறார்கள்
உன் போதனைகளை மறந்தபடி

ஒளியே உன் போராட்டம் அனைத்தும்
ஆள்வோருக்கு எதிராகவும்
பேச்சு மறுக்கப்பட்டோர்களின் நாவாகவும்
இருந்ததை வெள்ளை மாளிகையும் வாடிகனும்
பங்கிங்காம் அரண்மனையும் மறைத்தே வருகின்றன

ஏற்பாடுகளில் இருப்பதையோ
இல்லாத ஏற்பாடுகளையோ
ஆக்கவும் மறுக்கவுமான இவர்களின்
அநியாய அத்தியாயங்களை அறிந்து இருக்கிறாயா நீ?

கொலம்பஸ் ,ஒபாமா ,டேவிட் காம்ரூன் வரை
உன் போதனை தொகுப்புகளை புறந்தள்ளிக் கொண்டே

ஆயுத வியாபாரங்களை அசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்
மாமன்றங்களில் நாவேதனம் செய்து கொண்டிருக்கிறார்கள்

ஊருக்குள் 

சாதிக்கு சாதி
தனித் தனி சர்ச்சுகள்
ஆராதனை,திருப்பலிகளை ஆண்கள் மட்டுமே
நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்
வலுத்தவர் நியதிகள் நீதிகளாக்கப் படுகின்றன

உயிர்த்தெழுந்த எங்கள் மீட்பரே
பரலோக ராஜ்ய விவகாரங்களை
தள்ளி வைத்து விடுங்கள்
பூமியில் நாம் செய்ய வேண்டிய
விவகாரங்கள் அனேகம் உள்ளன

இஸ்ரேல் அநியாயம் முதல்
கூடங்குளம் மணியடிப்பு வரை
நம் பேசுபொருட்கள் நீள்கின்றன

ஆகையினாலே

அப்பம் இழந்தோருக்கு
அப்பமாக இரும்
தெப்பம் விடுவோருக்கு
சிம்மமாக சீறும்.