Friday, November 25, 2011

எஸ்.லட்சுமணப்பெருமாளின் வளசல்

திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.அன்று ஞாயிறு இரவு பஸ் கிடைக்குமோ என்னமோ என்கிற பதட்டம் மனசில்.உடன் வந்த தோழர்கள் இந்த பதட்டத்தில் முன்னரே கிளம்பி விட்டனர்.இப்பொது நான் மட்டும் தனியாய்.ஒரு பஸ் வாகாய் வந்து நிற்க வெடுக்கென ஏறி விட்டேன்.பரவாயில்லை கூட்டம் குறைவு என்ற ஆசுவாசத்தில் பஸ்ஸின் பின்பக்கம் வலது ஓர இருக்கையில் நடுவில் அமர்ந்து கொண்டேன்.

போகப் போக கூட்டம் தொற்றிக் கொண்டது.என் பக்கத்தில் அமர்ந்த இளைஞன் டி சர்ட் போட்டு பார்க்க டீசெண்ட் டாக இருந்தான்.எனது வலது ஓரம் இருந்தவன் தூங்கி வழிகிறான்.இன்னும் மூணரை மணி நேரம் ஆகும் சென்னை போக.சரி என்ன பண்னலாம் என் யோசிக்கையில்,மணிமாறன் தொகுத்த ஊருக்கு சென்று கொண்டிருக்கிறேன் கதை தொகுப்பு ஞாபகம் வந்தது.பின் பக்க அட்டையில் பார்வையை ஓட்டினேன்.

லட்சுமணப்பெருமாளின் பெயரைப் பார்த்து பக்கத்தை புரட்டி” வளசல் ”கதையை வாசிக்க ஆரம்பித்தேன்.இடதுபக்க இளைஞன் கை என் மார்பிலிடித்துக் கொண்டே வர ”தம்பி கையை கொஞ்சம் தளர்த்தி வச்சிங்கன்னா சரியாயிருக்கும் ”என்றேன்.அவன்” நீ நீங்க ஒழுங்கா வாங்க;நீங்க புக் படிக்க நான் இப்படி இருக்கணுமா?”என பதில் சொல்ல ,நான் “நீங்க உதவி செஞ்சிகன்னா இந்த கதையை படிப்பேன் “என சொல்ல பொறுமிக் கொண்டே இருந்தான்.

இடதுபக்கப் பொறுமல்,வலதுபக்க வழியும் தூக்கம் நடுவில் நான்
.
.கதை இப்படி ஆரம்பிக்கிறது.
வெங்கடாசலத்தேவர் பொஞ்சாதி கடல்தாயம்மாள் ஒரு ஓரத்தில் பொரும் பொரும்னு பொருமிட்டு இருந்தா.என்ன இருந்தாலும் அவரு அப்படி பேசியிருக்கக் கூடாது என்ற ஆரம்பத்திலேயே ஒரு ஈர்ப்பு வந்து விட்டது.வெங்கடாசலத்தேவர்,கடல்தாயம்மாள் என்கிற பெயர் கிளர்த்தி நின்ற மண்வாசனை ஒரு ஈர்ப்பை தந்தது.இதன் பெயர் ஒட்டில் ஈர்ப்பு என்று தப்பர்த்தம் கூடாது நண்பர்களே.

நாலரை பக்க கதை.

மகள் வேணிக்கு தான் பார்த்து வந்த மாப்பிள்ளை பற்றி சொல்கிறார் வெங்கடாசத்தேவர்,”நாத்துனா,கொழந்தானாரு தொரட்டுங் கிடையாது.மாப்பிள்ளை உன்னை கையோட விஜயவாடா கூட்டிட்டு போயிடுவாரு.அங்கே நீயி கால்படி அரிசியை பொங்கி வச்சிட்டு பொன்னம் போல படுத்து எந்திரிக்க வேண்டியதுதான்”என்பார்.பொன்னம் போல படுத்து எந்திரிக்க வேண்டியதுதான் என்ற சொல் அதன் எல்லையைத்தாண்டி இலகுவையையும்  கூடலின் இனிமையையும் நாசுக்காக சொல்லி நிற்கிறது.

இந்த எதார்த்தமான உரையாடல் ஒரு அழகைக் கொடுத்தது.

சொந்தம் பந்தத்தில ஏழு பிள்ளைகளுக்கு பெண் கொடுத்து,பெண் எடுத்து சீர்.செனத்தி,நல்லது,பொல்லது பார்த்துபோதுமடா சாமி அப்படின்னு ஆகிருச்சி அவருக்கு.அதனால கடைக்குட்டி வேணிக்கு அசல்ல மாப்பிள்ளை பார்த்திட்டு வந்து அவளிடம் மேற்படி பேசிக்கிட்டு இருந்தார்.

பொழுதெல்லாம் ஓடிப் போயி ராத்திரி வந்தது.வேணிக்கு கல்யாண களை வந்து விட்டிருந்தது.அக்காமாரு நாலு பேரு பத்தி ஓட்டி பாத்தா மனசுக்குள்ள்ள.அடிச்சிகிட்டாலும் புடிச்சிக்கிட்டாலும் ஆத்திர அவசரத்திற்கு நம்ம ஆளுக ஆதரவு இருக்குன்னு அவங்கவங்க வாழ்ந்திட்டு இருக்காங்க என்ற யோசனை வேணியை புரட்டிப் போட்டது.அப்பா இதுவரை தன் சொந்ததிலேயேதான் பெண் எடுத்து,பெண் கொடுத்திருக்கிறார் ;அம்மா வழியில கட்டிக் கொடுக்க அம்மவிற்குள்ள பிரியத்தை சட்டை செய்யாத அப்பாஎன்ற கூடுதல் யோசனை வேணியை ஆட்கொண்டது.

காலையில அப்பாவிற்கு தன் முடிவை சொல்ல வேண்டும் வேணி.தாவணியை சரி செய்து அப்பாவை தாண்டி,பாயில் ஓரமாய் சுருண்டு ப்படுத்திருந்த அம்மாவை இறுக அணச்சிப் படுத்தாள் வேணி.அம்மாவை உஸ் என்று அமர்த்தி ,”காலையில் உன் தம்பியை ஒம் மருமகனோட வந்து அப்பாவை பாக்கச் சொல்லு” என்றாள்.

”ஏ ராசாத்தி எம் பச்சைக்கிளி நாம் பெத்த செல்லம் என்னப் பெத்த அம்மா” என்ற அம்மவின் கொஞ்சலில் வேணி வெட்கத்தில கண்னை மூடிக் கொண்டு சிரித்தாள்.

இந்தக்கதையில் அசல்ல கட்டிக் கொடுத்தா நல்லது பொல்லதுக்கு தாங்கிக்க ஆள் துணை இல்லாம போயிரும் என்ற புள்ளிக்குள் நின்று கதை அபாரமா பயணப்பட்டு சாதக பாதகங்களை கதைப் போக்கில் விவரித்து இயல்பான முடிப்பில் முடியும் கதையில் மனம் விகசித்தது.மற்றபடி கட்டுடைப்பு தன்மையில் கதையை வாசித்து ஒன்னுமே இல்ல இதுல சாதி வாடை அடிக்கிறதுஎன்றும் சொல்ல ஆட்கள் இருப்பார்கள்.

No comments:

Post a Comment