Sunday, October 9, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி-7



 தீவிரம்  கொண்ட அரசியற் புனை கவிதை

பாரதியின் கவிதைத் தொகுப்பில் சத்ரபதி  சிவாஜி என்ற நீள்கவிதை உள்ளது.185 வரிகள் கொண்டது.தன் படை  வரிசைகளுக்கு சிவாஜி, தேசம்  குறித்து அன்னியர் ஆபத்து பற்றி போரில் வீரர்களின் தீரம் சொல்லி,வீரகர்ஜனை செய்வதான கவிதை இது.இங்கு சிவாஜி குறித்தோ,அவனின் ஆட்சி முறை குறித்தோ நாம் இங்கு பதிவது அவசியம் அல்ல.பாரதி பார்வையில் சிவாஜி ஒரு மாவீரன். அடிமை இந்தியாவின் மக்கள் எழுச்சியுற வேண்டும் என்ற நோக்கில்  சிவாஜியை முன்வைத்து பாரதி புனைந்த கவிதை இது.

ஆனால் புனைவில் நனவின் தீவிரம் பற்றி எரிகின்றது.கவிதையின் தொடக்கம் முதல் இறுதி வரை கட்டுக்கடங்காத காட்டுக் குதிரையின் புழுதி பறத்தும் வேகம்.அடிப்படையில் இது ஒர் அரசியல் கவிதை. காலனீய ஆட்சி சூழலில் நவீன இந்தியா குறித்தும் அதன் விடுதலை குறித்தும்  தீவிர மொழியில் பேசிய கவிதையின் அரசியல் வாசிக்கும் எவரையும் சூடேற்றும் தன்மை கொண்டது.

இன்று நாம் எழுதிக் கொண்டிருக்கும் அல்லது எழுதிப் பார்க்கும் அரசியல் கவிதையின் ஆரம்ப புள்ளி பாரதி.பாரதிக்கு 12 ஆண்டுகள் முன் வாழ்ந்து மறைந்த வள்ளலாரும்,வள்ளலாருக்கு முன் வாழ்ந்த அய்யா வைகுண்டசாமிகளும் .வள்ளுவரும் அரசியல் பற்றி எழுதி இருக்கிறார்கள்.வைகுண்டர் தவிர வள்ளலாரும் வள்ளுவரும் ஆட்சியாளர்களைப் பற்றி சில வரிகள் தீவிரமாக எழுதி இருக்கிறார்கள்தான்.ஆட்சியாளர்களை நோக்கி தீவிரம் பேசிய கவிதைகள் பல வைகுண்டரும் எழுதி இருக்கிறார்.

ஆனால் பாரதி  வாழ்ந்த காலம் போர்க்கருவிகள் குவித்து உலகின் பல பாகங்களை ஆங்கிலேயர் கொள்ளை  அடித்து குவித்த ஏகாதிபத்தியக் காலம்.புதிய சூழலில் ஆட்சியாளர்களுக்கு உபதேசம் செய்யும் முறையிலோ,ஊழ் வந்து உறுத்தும் என சாபம் இடும் பாணியிலோ அரசியல் கவிதைகள் இருக்காது.

முறையற்ற  ஆட்சியை எதிர்த்து கலகம் செய்வதை சொல்லித் தருகிறது அரசியல் கவிதை.மக்கள் சந்திக்கும் பிரச்சனையின் புள்ளியை கவிதையின் மையமாக்கி ஆட்சியின் மையத்தை தகர்ப்பது ஒரு நல்ல அரசியல் கவிதையின் லட்சணம்.அரசியல் கவிதை வெற்று முழக்கமாக இருக்காது.அழகியல் ஊடாடி சுற்றி நில்லாதே பகையே துள்ளி வருகுது வேல் என வார்த்தையை வேலாக வடிப்பது இதன் லட்சணம்.

இந்த அரசியல்  கவிதையாக சத்ரபதி சிவாஜி கவிதை இருக்கிறது.பாரதி தான் வாழ்ந்த காலத்தில் உள்ளுர்,வெளியூர் இதழ்களை வாசிக்கும் ஒரு பத்திரிகையாளனாக,அரசியல் தலைவனாக,மொழியியல் வல்லுனனாகவும் இருந்தான்.மக்களுக்கு நெருக்கமாக கவிதை மொழியை
எளிய முறையில் இருக்கும்படி பார்த்துக் கொண்டான்.மேற்கத்திய,கீழை தேசத்திய,இந்தியக் கவிதைகள் குறித்து பாரதிக்கு அறிமுகம் இருந்தது.அதன் பாதிப்பில் பல கவிதைகளை புனைந்திருக்கிறான்.

உண்மையான  கவிதை அருமையான திரவியம் என்றும் அதனால் உலகம் சேமத்தை அடைகிறது என்றும் கவிதையில் தெளிவு,ஒளி,தண்மை,தடையில்லாமல் பாய்ந்து செல்லும் ஒழுக்கம் தேவை என்றும் பிறர் துன்பத்தைக் காணும் போது தனது துன்பம் போல் கருதி வருந்தும் இயல்புடைய ஒருவனும்,பிறர் துன்பத்தைக் கருதாத ஒருவனும் யாப்பிலக்கணம் படித்து கவிதை செய்யப் பழகுவராயின் முந்தியவன் உண்மையான கவிதை எழுதுவான்;பிந்தியவன் பதங்களைப் பின்னுவான் என்றும் பாரதி கவிதைக்கு சொல்லியது அப்படியே அரசியல் கவிதைக்கும் பொருந்தும்.

குறிப்பிட்ட சிவாஜி கவிதை “ஜயஜய பவானி  ஜயஜய பாரதம்”  என ஆரம்பிக்கிறது.

”எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்
வேலெறி படைகாள்!சூலெறி மறவர்காள்!
 யாவிரும்  வாழிய யாவிரும் வாழிய
பாரத பூமி பழம்பெறும் பூமி
நீரதன் புதல்வர் இந்நினைவகற் றாதீர்
மொக்குகள் தோன்றி  முடிவது போல
மக்களாய்  பிறந்தோர் மடிவது திண்ணம்
தாய்த்திரு  நாட்டை தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்
சோதரர் தம்மை  துரோகிகள் அழிப்ப
மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க
தேசமே நலிவோடு  தேய்ந்திட மக்களின்
பாசமே பெரிதெனப்  பார்ப்பவன் செல்க
நெஞ்சக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும்  மாமகம் புரிவம்யாம்”

என்று  சொற்களைப் பின்னிப் பின்னி பாரதி கவிதையாடிய சொற்சிலம்பம் இன்றும் நம் அரசியல் கவிதைக்கு தேவைப்படுகிறது.இந்தக் கவிதையில் புரிதல் சிக்கல் இல்லை.தெளிவான வானம் போல  பளிச்சிடுகிறது கவிதை.அதே நேரத்தில் துரோகிகள் நம்மை அழிக்கும் போது காமத்தில் கிடப்பவன் போயொழியட்டும் என்றும்,தேச நலனை விட அதன் விடுதலையைவிட தன் பெண்டுப் பிள்ளைகளின் மீதான பாசம் கொள்பவனும் போருக்கு தேவையில்லை விலகிப் போகட்டும் என்றும் மனதில் வேகம் ஏற்றி இலக்கு நோக்கி சொல்லாயுதம் பாய்ச்சுகிறான் பாரதி.

90 ஆண்டுகளுக்கு  முந்தைய தேவைக்கு பாரதி  பாடிய  கவிதை இன்றைய ஏகாதிபத்திய உலமயச் சூழலிலும் இந்திய இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டு தேவைப்படுகிறது.இந்த 21 ஆம் நூற்றாண்டில் நம்மில் எவர் பாரதி?பாரதி பாடிய அதே வரிகளை நகல் செய்யாமல் அதன் சொற்தளத்தில் காலூன்றி விசையுறு நவசோதிக் கவிதைகளை நம்மில் யார் செய்குவர்?


(தீக்கதிர் இலக்கியச் சோலையில் 2011 அக்டோபர் 10 பிரசுரமானது)

No comments:

Post a Comment