Wednesday, September 21, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி-4



சமூக ஊழியர்களும்  காதலும்


பாரதி மறைவிற்க்கு  பிறகு பாரதியின் ஆளுமைகள்,குணங்கள்,அரசியல் செயற்பாடுகள் குறித்து அவரது நண்பர்கள் எழுதி,பாரதியின் தம்பி விசுவநாதன் பாரதி பிரசுராலயம் என்ற பெயரில்1928 ல் வெளியிட்டிருக்கும் பாரதியார் சரித்திரம் என்ற ஒர் அருமையான சிறு நூலை விருத்தாசலம் தோழர் ஆர்.ஜீவானந்தம் படிக்கத் தந்தார்.இதிலிருந்து சில விசயங்களை போன வாரம் எழுதினோம்


.
தொடரினைப் படித்து நூலாகக் கொண்டு வரலாமென ஜீவி,மதுரை சாந்தாராம்,சென்னை ஜேசுதாஸ்,நாமக்கல் நம்புலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளனர்.தொடர் முடிந்ததும் இது குறித்து யோசிக்கலாம்.
போன வாரம்  பத்தினிப்பெண் என்ற சொல்லை பாரதி மோனைக்காக இட்டுள்ளார்  என நாம் எழுதியிருந்த கருத்தை  நாமக்கல் நம்புலட்சுமி மறுத்து,மோனைக்காக  மட்டுமல்ல;அந்த காலத்தில் மனைவியை குறிக்கும் சொல் அது என்றும் கற்பு என்ற நோக்கில் அவர் சொல்லவில்லை ஆணுக்கு கற்பை முன் மொழிந்தவர் ,ஆணிய் நோக்கில் பத்தினியை கையாண்டிருக்க மாட்டார் எனவும் பேசியது சரியே.பத்தினி சொல்லாடலை முன் வைத்த கொற்றவை இதை வாசிக்க நேர்ந்தால் சிந்திகட்டும்.
.
 விவேகபானு,ஹிந்து,வருணசிந்தாமணி,சுதேசமித்திரன்,இந்தியா என பல ஏடுகளில் பாரதி எழுத்துகள் வந்துள்ளன.இவரின் புதிய கலை முயற்சிகள் சுப்பிரமணியம் சிவாவின் ஞானபானு மாத இதழில் வெளி வ்ந்திருக்கின்றன.பெண்களுக்கான முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட சக்ரவர்த்தினி இதழின் ஆசிரியரும் பாரதிதான்.
1910 ல் பாரதியின்  இறுக்கமான மரபுக்கவிதை ”கனவு” தென் மாவட்டத்தில் பிரபலமாக இருந்திருக்கிறது.இது புதுச்சேரியில் அச்சாகி உள்ளது.ஆக்ஷ் கொலை வழக்கில் சந்தேகப்பட்டவர்கள் மத்தியில் இந்த கவிதை நூல் அன்று அதிக பிரபலம்.


இது ஒரு வகையில்  பாரதியின் தன் வரலாற்று நூலும் கூட.இதில் அவரின் கல்வி,குடும்பசூழல்,அன்றைய ஆங்கிலேய கல்வி முறை,அரசியல் சூழல்,திருமணம்,திருமணத்திற்க்கு முன்பான அவரின் காதல் என பாடிச் செல்கிறார்.
392 வரிகளிலான  இந்த கடுமையான செய்யுளில் 8 பகுதிகள் ஆங்கிலேய அரசால்  ஆட்சேபனை செய்யப்பட்டு ,முழு  நூலும் தடை செய்யப்பட்டிருக்கிறது


.இதில் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் ,சமூக மாறுதலை உருவாக்கக் கூடிய போராளிகள் மனதில் எழும் காதல் உணர்வை எவ்விதம் எதிர் 
கொள்ள வேண்டுமென  பாரதி சொல்லும் இடம் முக்கியமானது.
பாரதியின் தடை செய்யப்பட்ட கவிதைகளுள் ஒன்று  பயனற்ற ஆங்கிலேய கல்வியை சொல்லி விசனப்படுகிறது
.”மந்தற்               
பாற்பொருள்  போக்கி பயின்றதா
 மடமைக்  கல்வியில் மண்ணும் பயனில்லை
 எந்த மார்க்கமும்  தோற்றில தென்செய்கேன்
 ஏன்பி  றந்தன னித்துயர் நாட்டிலே”

இதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டு எந்த பாராவில் வருகிறது என குறிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது இதே நூலில் காதல் பற்றி அவர் சொல்லும் இடம் இது:
“காத லென்பது  மோர்வயி னிற்கு மேற்
கடலின் வந்த கடுவினை யொக்குமால்
ஏதமின்றி  யிருபுடைத் தாமெனில்
இன்ன மிர்து மிணைசொல லாகுமோ?
ஏதொ ணாத பெருந்தவம் கூடினோர்
உம்பர் வாழ்வினை யெள்ளிடும் வாழ்வினோர்
மாத ரார்மிசைத் தாமுறுங் காதலை
மற்ற வர்தரப்  பெற்றிடு மாந்தரே”

குறிப்பிட்ட வயதிற்க்கு மேல் கடற்புயலைப்  போல துன்பம் தரும்
காதலை,அமிர்தத்திற்கு இணையென சொல்லலாகுமா?இதெல்லாம் சின்னங்சிறுசுகளின் ஒரு காலகட்ட ஈர்ப்பு மட்டுமே.
.தேச ,சமூக வாழ்வில் புரட்சிகர மாற்றத்தை உருவாக்கும் வீரர்கள் ,ஏட்டில் எழுத இயலாத தியாகத்தை செய்யும் தீரர்கள்,விண்ணுலக வாழ்வை மறுத்து மண்ணில் நல்ல வண்ணம் வாழப் போராடும் போராளிகள் பெண் மீதான காதல் உணர்வுக்கு மாற்றாக, தம் மீது படரும் நேசத்திற்கு ஈடாக மற்றவர்கள் தரும் ,உணர்த்தும் அன்பை பெற்றிடுங்கள் எனச் சொல்லும் இடம் முக்கியத்துவம் பெறுகிறது.இங்கு மற்றவர்கள் என்பது குழந்தைகளாக,நண்பர்களாக்,தோழர்களாக,இயற்கை சூழலாக,நலம் நாடிகளாக என அடையாளபடுத்தலாம்


(செப்டம்பர் 19 தீக்கதிர் இலக்கியச் சோலையில் பிரசுரமானது)

1 comment:

  1. காவ்யா

    பயனற்ற ஆங்கிலக்கல்வியைப் பற்றி தன் சுயசரிதைப் பாத்தொடரில் எழுதியதாக எனக்கு நினைவு. அதையேன் தடைசெய்தார்கள்? சுயசரிதை முழவதும் தடை செய்தார்களா ? அல்லது சில பகுதிகள் மட்டும்தானா ?

    பாடலும் குழப்பத்தைத் தருகிறது. ஆங்கில வழிக்கல்வி முறையைக் குறிப்பிடுகிறாரா ? இல்லை ஆங்கில மொழி என்ற ஒரு பாடத்தை மட்டும் குறிப்பிடுகிறாரா ?

    ஆங்கில மொழிப்பாடத்தை அவர் குறை சொல்வது நியாயமற்றது. அம்மொழியால் அவர் பெற்ற இன்பமும் பலனும் நிறைய. ஷெல்லியில் கவிதைத்தொகுப்பு நூலை தன் கோட்டுப்பாக்கெட்டில் வைத்தே திரிந்தவரும் தன்னை ஷெல்லிதாசன் எனப் பெருமையுடன் அழைத்துக்கொண்டவரும், பின்னாளில் மேனாட்டுப் பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருந்த மேனாட்டறிஞர்களில் முற்போக்கான கருத்துக்களை தமிழில் மொழிபெயர்த்து அன்றாடம் வெளியிட்டுவந்தவரும், பெண்ணுரிமை, பெண்ணியம் என்றெல்லாம் மேனாட்டுக்கொள்கைகளால் கவர்ந்து அதை நம்நாட்டுப்பெண்களுக்கும் அளிக்கவேண்டுமென இன்னாட்டு சமூகத்தைப்பகைத்துக்கொண்டவர் இப்படி எழுதுவது என்ன நியாயம்?

    இந்த ஆங்கில வழிக்கல்விக்கு இவர் சொல்லும் மாற்று என்ன தெரியுமா ? அதை நீங்களே அவரின் சுதேசமித்திரன் கட்டுரைகளில் படித்துத்தெரிந்து கொள்ளுங்கள்.

    ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொளல் நலம். பாரதியின் முற்போக்குக்கருத்துகள் அவரின் ஆங்கிலவழிக்கல்வியாலே வந்தது.

    ReplyDelete