Friday, December 30, 2011

கனிந்து சிவக்கும் காலச்சூரியன்


      இரா.தெ.முத்து
நவம்பர் புரட்சி தொடர்கிறது
புதிய களங்களில் புதிய சிகரங்களில்
சோவியத்தின் பின்னடைவை
சோசலிசத்தின் தோல்வி என்றும்
முதலாளியத்தின் வெற்றி என்றும்
கொள்ளிக்குடம் உடைத்து
கிள்ளிப்போடத் துடிக்கிறார்கள்

வரலாறு எப்பொழுதும் முன்னோக்கியே நகருமென்பதை
ஆத்திரத்தில் மறந்து போகிறார்கள்
கொலம்பஸின் கூட்டாளிகளும்
ஆடம்ஸ்மித்தின் அடிவருடிகளும்

நாடுவிட்டு நாடு தாண்டுதலில்
கண்டம் விட்ட கண்டம் தாவுதலில் இருக்கிறது
மத்தியக்கால சாம்ராஜ்யங்களை
உருவாக்கத்துடிக்கும் யுத்த வியாபாரிகளின்
உயிர்த்தலம்

புதுப்புது வடிவில் வெடிக்கும்
இங்கிலாந்துப் போராட்டங்களும்
ஐரோப்பிய வீதிகளில் கொட்டப்படும் பாலில்
தெறிக்கும் ரௌத்ரமும்
ஆசியான் ஒப்பந்தத்தை எதிர்த்த
கேரள ஆவேச அணிவகுப்பும்
தங்கள் வாழ்வாதாரங்களின் மீது
படரும் ஏகாதிபத்திய ஆக்டோபஸை
எதிர்த்துயர்ந்த எக்காளங்கள்

ஒபாமாவாலும் உருப்படாத அமெரிக்காவின்
மீட்புநிதிமீட்சியை நோக்கி நகர்தல்
என்பதெல்லாம்
மூச்சுத்திணறும் முதலாளியத்தின்
குழறல் வார்த்தைகளாகவே ஒலிக்கின்றன

மூலதனத்தை வாசியுங்கள் என்று
புனித போப்பாண்டவர் சொல்வதும்
நூற்றாண்டின் மாமனிதர் காரல்மார்க்ஸ்
என தேர்வு செய்யப்படுவதும்
கம்யூனிசத்தின் தேவையை
ஒப்புக்கொள்ளும் வாக்குமூலங்கள்

நவம்பர் புரட்சியின் பெரும்பாதையில்
சீனாகியூபாவோடு கரம் கோர்த்த
வடகொரியாவியட்நாம்வெனிசுலா
பொலிவியாநிகரகுவா
கார்ப்பரேட் ஊடகங்களின் கணக்குகளை
கலைத்துப் போட்டு எழுதிச் செல்கின்றன

புதுயுக மனிதர்களின் புதிய பண்பாட்டை
தகர்த்தெறியப்பட்ட லெனின் சிலைகளினூடாக
ஆப்கன் நஜிபுல்லா செக் செசன்கோவ் உயிரை
முட்டை ஓட்டை உடைத்து உறிஞ்சுவது போலும்
கொன்றழித்த எதிரிகளின் தற்போதைய தோல்விகளுக்கு
என்ன மாதிரி பரிசளிக்கப் போகிறது உலகம்?

மீண்டெழும் புரட்சியை வெற்றிலைக் காம்பென
கிள்ளி எறிந்துவிட முடியுமா?
பெரும்பான்மையோர் சூடிக்கொள்ளும் விடுதலையை
நிதிமூலதன மூதேவிகளால் மூடியிட இயலுமா?

பேரண்டம் தழுவிய தொழிலாளர் எழுச்சியை
கழுகுகள் எதிர்கொண்டு நிற்குமா?
அடடா அடடாவோ திக்குகள் விடிய
கனிந்து சிவக்கும் காலச் சூரியனை
உள்ளங் கைக்குள் ஒளித்து வைக்க முடியுமா?

Wednesday, December 28, 2011

அரவிந்த் அடிகா யாரின் ஊதுகுழல்? -


இரா.தெ.முத்து

ஒயிட் டைகருக்காக புக்கர் பரிசுப் பெற்ற, last man in the tower எனும் சமீபத்திய நாவலாசிரியருமான, சென்னைக்கு முந்தைய மெட்ராஸில் பிறந்த அரவிந்த் அடிகா ஆங்கில இந்தியாடுடெ இதழில்(2010டிச20) சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எனும் கட்டுரை எழுதி இருந்ததை நண்பர் அமுதரசன் சொன்னதின் பேரில் படிக்க நேர்ந்தது.
அதில் தென்கன்னட உடுப்பி பிராமணர்கள்(ராவ்,பட்,ஆச்சார்யா) பிரிட்டிஸ் காலத்தைய மெட்ராஸில் உட்லேண்ட்ஸ்,தாசபிரகாஸ் போன்ற ஒட்டல் தொழிலை வெற்றிகரமாக நடத்தியதையும் சுதந்திரத்திற்க்கு பிந்தைய ஆண்டுகளில் தி.மு.கழகத்தால் தம் சமூகம் புறக்கணிக்கப்பட்டதை, தமிழ்ப் பிராமணர்களாலும் எதிரிகளாக பார்க்கப் பட்டதை பதிவு செய்திருக்கிறார்.

இன்னாட்களில் பிரபலமான உடுப்பி ஒட்டல்கள் மூடபட்டுக் கிடப்பதாகவும் சென்னையிலிருந்து உடுப்பி பிராமணர்கள் வெளியேற நேர்ந்ததையும் எஞ்சிய பலர் தங்கள் பெயரோடு சாதியை குறிப்பிட பயப்படுவதாகவும் சொல்லி இறுதியில் செக்கோஸ்லேகியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜெர்மானியர்களைப் போல ,ஜெர்மெனியிலிருந்து துரத்தப்பட்ட யூதர்களைப் போல சென்னையிலிருந்து தாங்களும் துரத்தபட்டோம் எனச் சொல்லி வாசகர்களிடம் ஓர் அதிர்வை ஏற்படுத்த முயலுகிறார் அரவிந்த்.

பன்னாட்டு மூலதனங்கள்,வெளிமாநில மூலதனங்கள் திரட்சியாக இயங்குகின்ற, முன்னை விட கல்வி அறிவுப் பெற்றுள்ள மெட்ரோபாலிடன் சிட்டியாகி உள்ள இன்றைய மாநகர சென்னையில்- தமிழர்களுக்கு கிடைத்த மாநிலம் தாண்டிய வேலைவாய்ப்புகள்-இந்திய அளவில் தொழில் தொடங்க வாய்ப்புகள் பெற்ற மாநிலத்தின் தொழில் வர்க்கம் -இவர்களின் கைத்தடிகளான மாநில கட்சிகளுக்கு மத்திய அதிகாரத்தை ருசிக்க கிடைத்த வாய்ப்புகளினால் 70 களில் சென்னையில் நிகழ்த்தியதைப் போல கன்னடர்களுக்கு எதிரான,கேரளீயர்களுக்கு எதிரான வன்மத்தை மீண்டும் நிகழ்த்த இயலாது.

தமிழ்நாட்டின் புதிய முதலாளிகளான சரவணபவன்,வசந்தபவன் சென்னையில் பரவலாக ஓட்டல் தொழில் நடத்தினாலும் இவர்களுக்கு குறைவில்லாத வகையில் கன்னட உடுப்பி பிராமண முதலாளிகளும் உட்லேண்ட்ஸ்,நியூ உட்லேண்ட்ஸ், முருடீஸ்,சுதா, வெல்கம், டாடா போன்ற பெயர்களில் வெற்றிகரமாக தொழில் நடத்தி வருகிறார்கள்.இதில்லாமல் திரைஅரங்கு,சட்டம்,மருத்துவம் போன்றவைகளிலும் கால் பதித்து நிற்க்கிறார்கள்.

உள்ளூர் சந்தையில்,உலகச் சந்தையில் தனக்கான இடத்தைப் பிடிக்க முயலும் முதலீட்டாளர்கள்-சந்தையில் ஏற்கனவே இடம் பிடித்து விட்ட நிறுவனங்களை எதிர்த்தோ அல்லது நிலை பெற்று விட்ட நிறுவனங்கள் தன் போட்டியாளர்களை ஒழிக்கும் பொருட்டோ தங்கள் கைத்தடிகளான மாநில கட்சிகளை,இனப்பார்வை கொண்ட அமைப்புகள் வழியாக தாக்குதலை நிகழ்த்துவது உலகெங்கும் காணப்படுகின்ற முதலாளித்துவக் குணம்.

பின்னணியிலுள்ள இந்த வர்க்க குணத்தை காணத்தவறி மொழி எதிர்ப்பு,இன எதிர்ப்பு என மேலோட்டமாக பார்த்தல்; யாரை நோக்கி எதிர்ப்பை மையப்படுத்த வேண்டுமோ அவ்வாறில்லாமல் வட்டார அமைப்புகளுக்கு எதிர்நிலை எடுத்து ,திசை மாறி தமது வர்க்கப் பாசத்தை காக்க எழுதித் தள்ளுகிறார்..ரிலையன்ஸ் உடனான போட்டியை எதிர் கொள்ள முடியாமல் அல்லது தங்கள் தொழில் இழப்பை சமாளிக்கவே தாசபிரகாக்ஷ் ரிலையன்ஸ் வசம் மாறியது என்பதே உண்மை.

உலகளாவியத் தொடர்பும் கல்வியறிவும் பெற்ற ஒரு சமூகம் உள்ளீட்டளவில் மோத வேண்டிய பல அம்சங்களை கொண்டிருந்தாலும் தன் வளர்ச்சிப் பாதையில் சில சரியான முன்னகர்த்துதல்களை செய்யும். இவ்வாறான நகர்த்துதல்கள் காரணமாக நவயுகத் தமிழர்கள் தம் பெயரின் பின்னுள்ள சாதி ஒட்டை துறந்திருக்கிறார்கள்.இதன் காரணமாகவோ அல்லது தமக்கான விழிப்புணர்வு காரணமாகவோ இன்றைய சென்னைவாழ் உடுப்பிக் காரர்களும் தம் பெயரின் பின்னால் உள்ள சாதி ஒட்டை தவிர்த்திருக்கலாமே அன்றி சென்னையில் தாக்கப் படுவோம் எனும் அச்சம் காரணமாக இல்லை.தாக்கப்படுவதற்கான எந்த முகாந்திரமும் இன்று இல்லை.

பல மாநில மக்கள் இன்று சென்னையில் நேசத்தோடு ஒன்றாய் கலந்து வாழ்கிறார்கள்.தசராவும்,ஓணமும்,ஹோலியும் இதைத்தானே உணர்துகின்றன. தி.க.வோ,தி.மு.க வோ இன்றைய பா.ம.க ,விடுதலை சிறுத்தைகளோ 70 களுக்கு சென்னையை கொண்டு செல்ல இயலாது.நாடு முழுவதும் பரவி தொழில் செய்யும் தொழிற்ச்சூழலும்,சனநாயக சக்திகளின் வளர்ச்சியும் மக்களின் ஒன்றுபட்ட வாழ்வை சாத்தியமாக்கி உள்ளன.இந்த சூழலை உள்வாங்கிக் கொள்ளாத அடிகா ஏதேதோ புலம்புகிறார்.இவரை உடுப்பிகாரர்களின் ஊதுகுழல் என்பதைவிட முதலாளித்துவக் காரர்களின் ஊதுகுழல் எனச் சொல்லலாமா?

Monday, December 26, 2011

தமிழ் இலக்கியத்திற்கு முற்போக்கு இயக்கத்தின் பங்களிப்பு


எந்தவொரு        சமூகத்தின் வளர்ச்சி, மாற்றம் தானாய் நிகழ்வதில்லை மாறாக நிகழ்த்தப்படுவது விவசாயம், தொழில் அறிவியல், போன்ற அடிப்படை துறை சார்ந்து மானுடச் சமூகம் உற்பத்தி மற்றும் மாற்றத்தில் பங்கு கொள்ள அவர்கள் எழுச்சியுற மனத்தகவு பெற கலை, இலக்கியம், மொழி உதவுகின்றன
இத்துறை சார்ந்த மேம்பாடுகளுக்கும், தத்துவம், இயக்கம்சார் படைப்புகளும் பார்வைகளும் உதவுகின்றன இவ்வகையில் தமிழ் இலக்கியத்திற்கு முற்போக்கு இயகத்தின் பங்களிப்பு குறித்த இரண்டு நாகள் தேசியக் கருத்தரங்கம் மதுரையில் 2010 ஜனவரி 28,29 தேதிகளில் நடைபெற்றது
சாகித்ய அகாதமி, தமிழியற்புலம் மதுரை காமராசர் பல்கலைகழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து கருத்தரங்கை சாத்தியமாக்கியது
காமராசர் பல்கலைகழக தமிழ்த்துறை மாணவர்கள் உள்ளிட்டு மாநிலம் முழுவதுமிருந்து நூறுபேர் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர்
ஆறு அமர்வுகளில் அமர்வுத் தலைவர்கள் உள்ளிட்டு பத்தொன்பது பேர் கருத்தாளர்களாகப் பங்கேற்றனர்
தொடக்க நிகழ்வு
தொடக்க விழாவில் சாகித்ய அகாதமி தென்மண்டலச் செயலாளர் எஸ் குணசேகரன் இடதுசாரி, மார்க்சீயம் சார்ந்த இயகத்தின் இலக்கியப் பங்களிப்புகளைத்தான் நாம் முற்போக்கு இயகத்தின் பங்களிப்பாக கருத வேண்டும் என கருத்தரங்கின் மையப்புகள்ளியைத் தொட்டு வரவேற்றுப் பேசினார்

தேசிய பன்னாட்டு பரிமாற்றத்திற்கு மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் தமிழ்துறை உதவுவது போல, பல்கலைகழகத்திற்குகள்ளும் தமிழை ஆட்சி மொழியாக விரிவுபடுத்த உதவ வேண்டும் என்றும், ஆங்கிலத்தின் ஆய்வு உரைகளை தமிழில் கொண்டு வர தமது பல்கலை முயலும் என்றும் தலைமையேற்றுப் பேசினார் துணைவேந்தர் இரா கற்பககுமரவேல்
தமுஎகச பொதுச்செயலாளர் ச தமிழ்ச்செல்வன், நாம் வாழும் காலத்தின் முற்போக்கு என்பது மார்க்சீயம் சார் படைப்பும் பார்வையும் ஆகும் என்றும் இந்த சந்திப்பு புள்ளியில் நின்று பேசுவதும், விமர்சிப்பதும் கருத்தரங்கிற்கு பலம் அளிக்கும் என்றும் அழுத்தமாக மையப்புள்ளியை தொட்டுக் காட்டினார்
ஒவ்வொரு காலகட்டத்து படைப்பாளிக்கும் ஒரு தத்துவ பின்புலம் இருந்தது கம்பன், இளங்கோ போன்றோருக்கும் தத்துவப் பார்வை இருந்தது நம் காலத்தில் தாகூர், பாரதி போன்றோரும் தத்துவப்பார்வை கொண்டவர்கள்தான் .வானம்பாடி காலத்தில் அழகியலா? தத்துவமா? என்று முரண்பாடு வந்த போது, நாங்கள் தத்துவத்தின் பக்கம் இருந்தோம் தத்துவமும் அழகியலும் ஒரு படைப்புக்கும் படைப்பாளிக்கும் தேவை என சாகித்ய அகாதமி தமிழ் ஆலோசனைக்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிற்பி தொடக்க உரையில் குறிப்பிட்டார்
 கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் பொன்னீலன், நமது பார்வைக்கும் படைப்புக்கும் சாட்சியாக பஞ்சும் பசியும், மலரும் சருகும், தாகம் விளங்கிக்கொண்டிருக்கின்றன நம் வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் நமது படைப்புகள் மோசம் என்பார்கள் என்றும் பெருமன்றமும் தமுஎகசவும் பிராண்ட்தான் வேறு ஆனால் ஃபிராடக்ட் ஒன்றுதான் என சிறப்புரையில் குறிப்பிட்டார்
கருத்தரங்க அமர்வுகள்
இலக்கிய இதழ்களின் பங்களிப்பு - ச மாடசாமி ,பெண்ணியப் படைப்புகள் - சு இரவிக்குமார், சிறுகதைகள் - மனிமாறன், நாவல்கள் - சு வெங்கடேசன், தமிழ் அடையாள உருவாகம் - ந முத்துமோகன், நாட்டுப்புற இலக்கியம் - டி தங்கவேல், சங்க இலக்கியம்- வீ அரசு, தத்துவப்பின்புலம் - மதுக்கூர் ராமலிங்கம் தலித்இலக்கியம் - எஸ் லட்சுமணப் பெருமாகள், நவீன கவிதைகள் - ஜீவி, திறனாய்வு - பிரளயன், திறனாய்வாளர்கள் - பா ஆனந்தகுமார் என கருத்தாளார்கள் தமது கருத்துகளை முன்வைத்து உரையாற்றினர்
பேராசிரியர் ச மாடசாமி செம்மலர் படைப்பாளிகளான மேலாண்மை பொன்னுச்சாமி, தேனி சீருடையான், பொள்ளாச்சி அம்பலம் போன்றோர்களின் படைப்புகளைத் தொட்டு காட்டி இவர்களுக்குக் கதைகள் வராது, பிரச்சார நெடியோடுதான் எழுதுவார்கள் என்ற மாற்று முகாம் சார்ந்தோரின் கருத்துகளை மறுத்து இந்தப் படைப்பாளிகள்தான் எளிய மனிதர்களை கதைகளில் உலவவிட்டார்கள் என உணர்ச்சி ததும்பப் பேசினார்.
Femino writtings  என்கிற பெண்கள் பற்றிய எழுத்து, Femi­nist writtings என்கிற கலகக்குரல் சார்ந்த பெண் எழுத்து, Female writtings என்கிற சுயம், யதார்த்தம் குறித்த பெண் எழுத்துகள் பற்றியும் இதன் ஊடாக பயணித்த இரா மீனாட்சி, சல்மா, குட்டிரேவதி, அ வெண்ணிலா, வர்த்தினி, பாலபாரதி, பாரதிகிருஷ்ணன் போன்றவர்களின் பங்களிப்பை தொட்டு காட்டினார் சு இரவிக்குமார் என்கிற ஸ்ரீரசா
கு அழகிரிசாமி, கந்தர்வன், மேலாண்மை, தமிழ்ச்செல்வன், ஷாஜகான், மாதவராஜ், காமராஜ், சீருடையான், அல்லி உதயன், ஆதவன் தீட்சண்யா உதயசங்கர், லட்சுமணப் பெருமாள் போன்றோர்களின் முற்போக்கு சிறுகதைகள் குறித்து தெளிவாகப் பேசினார் மணிமாறன்.
சு வெங்கடேசன் நாவல்கள் பற்றி பேசும்பொழுது, சமூகக் கொந்தளிப்பை, எளிய மனிதர்களை நாவலில் பதிவு செய்தவர்கள் முற்போக்காளர்கள் என்றும் தத்துவத்தின் கலை வடிவம், வாழ்வின் பரந்த பகுதிகளை உணர்வுபூர்வமாக பதிவு செய்த தற்காலத்திய ‘சலவான்’ பாண்டியக் கண்ணன், ‘நிறங்களின் உலகம்’ தேனி சீருடையான் தொட்டு பொன்னீலன், டி செல்வராஜ்,
கு சின்னப்பபாரதி, தொமுசி ரகுநாதன் போன்றோர்களின் எழுத்துகள் பற்றி வெடிப்புற பதிவு செய்தார்.
தமிழ் அடையாள உருவாகத்திற்கு 150 ஆண்டு வரலாறு உண்டு என்றும் தமிழ் அடையாளத்தை உருவாக்கியதில் வள்ளலாருக்கு முக்கியப் பங்களிப்பு உண்டு என்றும் அயோத்திதாசப் பண்டிதரின் தலித்அடையாள அரசியல் பற்றியும் பேசி மேட்டுக்குடிவர்த தமிழ் அடையாளத்தால் ஈழப்போர் தோற்றது என்றும் எளியமக்கள் பக்கம் நின்று சமூக உள்முரண்பாடுகளை வளர்த்து மோதவிட்டு முன்னேற வேண்டுமென ந முத்துமோகன் குறிப்பிட்டார்.
சிலப்பதிகாரம் போன்ற எளிய மக்களின் நாட்டார் பாடல்கள் பண்டிதர்களால் காவியமாக புனையப்பட்டது என்றும் முற்போக்கு பார்வைக்குகள் கொஞ்சம் பிற்போக்கு இருக்கும் என்றும் பிற்போக்கு பார்வைக்குகள் சிறிது முற்போக்கும் இருந்து மோதும் என ‘செம்மலர்’ ஆசிரியர் எஸ்ஏ பெருமாள் பேசினார்
கோட்பாட்டோடு நேரடியாக சாராத பொதுவான முற்போக்காளர்களின் பங்களிப்பையும் அங்கீகரிக வேண்டும் என்று தத்தவப்பின்புலம் பற்றி பேசும் பொழுது மதுக்கூர் ராமலிங்கம் குறிப்பிட்டார்.
டிகேசி, மகாராஜன், பாஸ்கர தொண்டைமான் போன்றோரின் அரட்டை அரங்க திறனாய்வுக்கு அப்பாற்பட்டு சமூக நோக்கில் திறனாய்வை முன்னெடுத்த கலாநிதிகைலாசபதி, கலாநிதிசிவத்தம்பி, தொமுசி ரகுநாதன், திக சிவசங்கரன், ச செந்தில்நாதன், அருணன் போன்ற முற்போக்குத் திறனாய்வாளர்கள் பற்றி பிரளயன் பட்டியலிட்டுப் பேசினார்
நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் டிகே ரங்கராஜன் வாழ்த்திப் பேசும் பொழுது வெற்றிடங்களில் முற்போக்கு எழுத்துகள் உருவாகாது என்றும் இடதுசாரிகளின் போராட்டங்கள், இதன் வீச்சுகளை உள்வாங்குவதும் இயன்ற அளவில் போராட்டங்களில் பங்கேற்று புரிந்து கொள்கிற அனுபவமும் முற்போக்கு இலக்கிய எழுத்து உருவாக உதவும் என்றும் சீர்திருத்தவாத இயக்கம் அதன் வீச்சுக்கு ஒரு எல்லை உண்டு என்றும் கருத்தரங்கம் செல்ல வேண்டிய பாதையை தெளிவுப்படுத்தினார்.
தடம்பதித்த முற்போக்கு திறனாய்வாளர்கள் பற்றி முனைவர் ஆனந்தகுமார் பேசும் பொழுது பாரதியை மறுத்த பிஸ்ரீயை எதிர்த்து ஜீவா நடத்திய எழுத்துப் போராட்டம், தொமுசி ரகுநாதனின் இலக்கிய விமர்சனம் ஆய்வு சார்ந்து துல்லியமானத் தரவுகளோடு இருக்கும் என்றும் குறிப்பிட்டார்
முற்போக்கு என்பதன் ஆதாரமே மார்க்சீய அணுகுமுறைதான் இதற்கு வெளியே நின்று பேசுவது சீர்த்திருத்தவாதம் என்றும் பாட்டும் தொகையும் என்றிருந்ததற்கு சங்க இலக்கியங்கள் என பெயரிட்டதே பேராசிரியர் வையாபுரிபிகள்ளை என்றும் தெ.பொ.மீ, முவ, மபா குருசாமி , ந.சஞ்சீவி போன்றோர் மபொசி மரபு சார்ந்து தேசிய, தமிழ்த்தேசிய அணுகுமுறையோடு சங்க இலக்கியங்களைப் பார்த்தனர் இதற்கு அப்பாற்பட்டு இடதுசாரி, மார்க்சீய பார்வை சார்ந்து கிரேக்க வாய்மொழி மரபைப் புரிந்து, புறநானுற்றை அணுகியவர் கலாநிதி கைலாசபதி .இவருக்கு அடுத்து கலாநிதிசிவத்தம்பி என இரண்டே பேர்தான். அமரர் ஜீவா தனது இறுதிகாலத்தில் தமிழ் அமுதம் என்ற பெயரில் வெகுஜன அணுகுமுறையோடு சங்க இலக்கியங்களை அணுகினார். .கோ கேசவன், நா வானமாமலை,நா சுப்ரமணியம், கே முத்தையா, அருணன் போன்றோர் கைலாசபதி, சிவத்தம்பி மரபை தமிழகத்தில் தொடர்ந்தவர்கள் என சங்க இலக்கியமும் முற்போக்காளர்களும் என்ற தலைப்பில் பேராசிரியர் அரசு உரையாற்றினார்
சிகரம் சசெந்தில்நாதன், கவிஞர் நந்தலாலா, பேராசிரியர் ஏ ஆதித்தன், திசு நடராசன், மு மணிவேல், டி தங்கவேல், ம திருமலை, இ முத்தையா, எஸ் லட்சுமணப் பெருமாள்,.யூ பன்னீர்செல்வன் ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்று பேசினர் .நிறைவு விழாவில்  மதுரை காமராசர் பல்கலைகழக தமிழியற்புலத்துறை தலைவரும், சாகித்ய அகாதமி பொதுக்குழு உறுப்பினருமான இரா மோகன் இரண்டு நாட்கள் கருத்தரங்கை ஒருங்கிணைத்தும், நிறைவு நிகழ்விற்கு தோழமையோடும் தலைமை தாங்க அடுத்துப் பேசிய முனைவர் தமிழண்ணல் பல்கலைகழகமும், மக்களும் சங்கமிக்கும் இடமாக இந்தக் கருத்தரங்கைப் பார்க்கிறேன் என்றும் திராவிட இயகப் பற்றாளாகிய நான் உங்கள் எளிமையால், நேர்மையால் உங்களை நோக்கி வருகிறேன் என்றும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை பாராட்டினார்.

நிறைவுரை செய்த தமுஎகச மாநிலத்தலைவர் அருணன் திரைப்படத்துறையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் முற்போக்கு இயக்கம் சார்பான பங்களிப்பை உதாரணங்களோடு சொல்லிப் பாராட்டினார் .பொருளாதார பிரச்சனை மட்டுமின்றி சமூகம் விடுக்கும் பல வகைப் பிரச்சனைகளையும் உள்வாங்கி முற்போக்கு இயக்கப் படைப்பாளிகள் படைக்கிறார்கள் எனவும் இவர்களின் பங்களிப்பு மகத்தானது, பெருமைப்படதக்கது என்றார்
சாகித்ய அகாதமி இடதுசாரிகளின் இலக்கியப் பங்களிப்பை உணர்ந்து இந்தச் தேசியகருத்தங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிற இந்த சூழலில் சாகித்ய அகாதமியை முற்போக்காளர்கள் பிடித்து விட்டார்களென சிலர் புலம்புகிறார்கள் எனவும் பனிரென்டு கருத்தாளர்களும் தங்கள் உரையை எழுதித் தந்து அவைகள் நூலாக வெளிவரும் பொழுதுதான் கருத்தரங்கின் உண்மையான வெற்றி என பேசி கருத்தரங்கை ஏற்பாடு செய்த அமைப்புகள், பங்கேற்பாளர்கள், கருத்தாளர்களுக்கு நன்றி சொல்லி நிறைவு செய்தார் த.மு.எ.க.ச பொருளாளர் இரா.தெ.முத்து.

Sunday, December 25, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி 17


                                                  
அடையாள அரசியலினூடாய்  அவன் 

கால ஓட்டத்தில் எல்லா காலத்திற்குமான மானுடத்தின் உள்ளத்தை,உணர்வை பதிந்து கொள்கிற படைப்பு கால வெளியில் காலூன்றி பயணிக்கும்.இதையே இன்னொரு நோக்கில் தீர்க்கப்படாத முரண்களை,சிக்கல்களை உள்வாங்கிக் கொள்கிற ஒரு படைப்பும் காலம் தாண்டி நிற்கும்.முரண்கள் தீர்க்கப்பட்டிருந்தாலும் முரண்களைப் பேசிய படைப்பும் அந்த காலத்தின் சுவடாக,தரவாக அடுத்த தலைமுறைக்கு வந்து உதவும். 

,நிகழ்தேவைகளுக்காக  கடந்த காலப் படைப்பை  பார்க்கிற பொழுது அந்த  படைப்பின் காலத்தின் வகிபாகத்தை  கவனியாமல் மறுக்கும் பார்வை ஊனம் கொண்ட மட்டுப்பார்வை .அதே பொழுது எந்த படைப்பும் விமர்சனத்திற்கு அப்பற்பட்டதல்ல;காலம் தாண்டிய மறுவாசிப்பில் புதிய புரிதல்கள் கிளைக்கக் கூடும்.அந்த வாசிப்பின் மையம் படைப்பு தொழிற்பட்ட காலத்தில் ஊடாட வேண்டும் அல்லாது சொந்த கருத்தாடலுக்கு உகந்த கன்ணாடி அணிந்து கொண்டு ஒன்றுமே இல்லை என பகடி செய்வது நேர்மை சர்ந்த ஆய்வு அல்ல. 

இன்று அடையாள அரசியல் பார்வை உலகாளவிய முறையில் எது சார்ந்தும் மறுக்க பிரயோகிக்கப்படுகிறது.இதை முன்னெடுக்கிற வலதுசாரி சக்திகள் வர்க்கப் பார்வைக்கு எதிர் பார்வையை முன் வைக்கிறார்கள்.இடதுசாரிகள் பாட்டாளி xமுதலாளி என்கிற எதிரை வைக்கிற பொழுது,சாதிகள்,மதங்கள் சார்ந்தவர்களை இல்லாதவர் x இருக்கிறவர் என்ற வர்க்க எதிர் கொண்டு  பார்க்கிற பொழுது,முழு மாநிலம் முழு தேசம் பாதுகாப்பானது என்றால் தனி நாடு,தனி மாநிலம்,சாதி, உட்சாதி என வர்க்க அரசியலுக்கு எதிர் எடுத்து முற்போக்கு சக்திகளுக்கு ஊறு செய்கிற பார்வை கொண்ட இந்த அடையாள அரசியல் ,இலக்கியம் மொழி என  யாவற்றையும் மறுக்கிற வன்முறைப் பார்வையை பாரதியின் மீதும் வைக்கிறது. 

இன்று பிற்படுத்தப்பட்ட ,ஒடுக்கப்படும் சாதி சார் புதிய பணக்காரர்கள் மத்தியில் புது வடிவாய் உலாவரும் பிராமணிய சனாதனத்தை அவதானிக்காமல்- உருவாகி வரும் சூத்திர பிராமணர்களை பாராமல்-தான் வாழ்ந்த காலத்தில் சாதியை மறுத்த-பிராமணிய சனாதனத்தை விமர்சித்த-பாரதியை இன்று ஒரு சாரார் பார்ப்பான் என்றும்-இந்துத்வா சக்திகள் அவனை இந்து மத காப்பாளன் என்று மறுப்பதையும் சுமப்பதையும் காண்கையில் நகைத்து பகடி செய்யவே தோன்றுகிறது.பென்ணியம் பேசுகிற ஒரு பிரிவு பெண்கள் பாரதியை கீழ்நிலையில் வைத்து பேசுவதையும் கவனிக்க முடிகிறது. 

இந்தப் பின்னணியில்  பாரதியின் காலம்,இடம்,அரசியல் வர்க்கம்,இலக்கியம்,சமயம்,சாதி,பெண்ணியம், குறித்து புதிய வாசிப்பின் அரசியல் முன்னெடுக்கப்பபடும் சூழலில் மொத்தக் கவிதைகளுள் பெரிதும் பயிலப்படாத அவன் கவிதைகள் வழியாகவும்,அவன் எழுத்துகள் வழியாகவும் நவீன தமிழ்பரப்பிற்கு அவனை மறுஅறிமுகம் செய்ய மேலிட்ட ஆவலின் விளைவாய் இந்தத் தொடரின் சாத்தியத்தை தீக்கதிர் ஆசிரியர் குழுவும் , இலக்கியச் சோலை பொறுப்பாளர் மயிலை பாலுவும் வழங்கினர்.ஏராளமான நண்பர்கள்,தோழர்கள் நூலாக வெளிவர வேண்டுமென்ற ஆவலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.விரைவில் நூலாகவும் வெளிவர உள்ளது. 

நான்கு மாதம்,17 வாரங்கள் தொடர்ந்த கட்டுரைக்கு  கிடைத்த பெரிய வறவேற்பு ,உற்சாகத்தை பாரதிக்கு கிடைத்த மரியாதையாக ,மீண்டும் மீண்டும் யாவராலும் பாரதி பயிலப்படுகிறான் என்பதாக எடுத்துக் கொள்கிறேன்.பாரதி மறைந்த இந்த 90 ஆண்டு காலத்தில் அவனைப் பற்றி அவன் படைப்புகளைப் பற்றி மறைமலை அடிகள் நூலகத்தின் பதிவுப்படி 500 றிற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்பதே பாரதி பரவிக் கொண்டு இருக்கிறான என்பதைச் சொல்கிறது. எந்தத் தடைகளாலும் திரிபுகளாலும் பாரதி தேங்கிவிட மாட்டான் என்பதையும் வந்த நூல்கள் உணர்த்துகின்றன.பாரதி பற்றிய நேர் புரிதலுக்கு ,கம்யூனிஸ்ட்கள்,இடதுசாரிகள் ,முற்போக்காளர்கள்  சார் படைப்பாளிகள்,இயக்கத் தலைவர்களின் பங்களிப்பு முக்கியமானது. 

தன் காலத்தில் பாரதியும் அவ்ன் சார்ந்த குடும்பம்,தோழர்கள் அடைந்த துன்பங்கள்,துயரங்கள் அளவிடற்கரியது கைது,இரட்டை ஆயுள் தண்டனை,நாடு கடத்தல்,தலைமறைவு ,குடும்ப வாழ்கையை வேவு பார்த்தல்,அடக்குமுறை எனத் தொடர்ந்த காலத்தில் வாழ்க்கையை பணயம் வைத்து தன் அரசியற் கொள்கை வெற்றி பெற,நாடு விடுதலை பெற சூறாவளியாய் சுழன்ற தீச்சுடர் பாரதி.. 

கொள்கைக்கும்  செய்கைக்கும் உள்ள தூரம் என்கிற தன் கட்டுரையில் இப்படி எழுதுகிறான் பாரதி:
கொள்கைக்கும் செய்கைக்கும் ஒற்றுமை இருக்கிறது.பகுத்தறியும் சக்தி இல்லாத எவனுக்கும் கொள்கையென்று ஒன்று இருக்காது.தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய மனதால் ஒப்புக் கொள்ளும் கருமத்தொடரின் அஸ்திவாரம்.தான் குடிக்கும் காபிக்காகவும்,தான் தின்னும் சோற்றிற்காகவும் ,தான் உடுத்தும் ஆடைக்காகவும்  ஒருவன் தன்னுடைய அருமையானக் கொள்கைகளைக் கைவிடுவானானால் அவனினும் பதரான மனிதன் ஒருவன் இருக்க முடியாது. 

இத்துனை அழுத்தமான  காத்திரமான நேர்பார்வை கொண்டவன் பாரதி.இந்தக் கொள்கைக்காகவும்,மானுட மேன்மைக்காவும்,தனிநபர் சுதந்திரத்திற்காகவும் தீ நடுவிடை தன் எழுத்தை,வாழ்வை வைத்தான்.பகலில் இருக்க ஒரு வீடு;இரவில் படுக்க நண்பர்கள் வீடு என கொள்கையைக் காப்பாற்ற அல்லாடினான்.தனிநபர்கள் மீது மிகுந்த அன்பும்,நேயமும் கொண்டவன். பிரிட்டிஸ் அரசோடுதான் பகையே தவிர தனிப்பட்ட முறையில் பல வெள்ளைக்கார அதிகாரிகள் நண்பர்கள் மீது நட்பை பேணினான்.தொடுக்கப்படுகிற தாக்குதல்களை கண்டு சினந்தான்.அவைகளை சட்டப்படி சந்திக்கவும் முயற்சித்தான்

.கொள்கைக்கும்  செயலுக்குமான ஒற்றுமையை  பெரும்பாலும் கடைபிடித்தான்.சில நிகழ்வுகளில் அவன் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் இன்று சமரசம் என்ற சொல்லில் அர்த்தப் படுத்தப்படுகிறது.பிரிட்டிஸ் அரசுக்கு எதிரான திலகரின் தேசபக்த புதிய கட்சியின் மீதான கடும் அடக்குமுறை,தலைவர்கள் நாடு கடத்தப்படல் போன்ற அன்றைய நிர்க்கதியான சூழலில் தற்காத்துக் கொள்வதற்கு இந்த சில செயல் தவிர்க்க முடியாதது.. என்றே புதிய வாசிப்பில் கொள்ள வேண்டி உள்ளது.மாற்றப் படவேண்டிய.சமூகத்தில் வாழ்கிற பொழுதே அந்த சமூக அரசியலின் சில வாய்ப்புகளை பயன்படுத்தாமல் அழிவதுதான் வீரம் என்பது விவேகம் அல்ல. 

தன் இறுதி வரையிலும் கவிதையில் தெறித்த அரசியலுக்கும்,அரசியலில் சுடர்விட்ட படைப்பிற்கும் பாலமாக செயல்பட்டான் பாரதி. 
பயமறுத்து பொய்மைச் சாடி,காக்கை குருவியும் கூட தங்கள் உறவாகும் போது,கடலும் மலையும் தங்கள் கூட்டம் என்கிற பொழுது யாவரும் தம் உறவாக,தாமே யாவருக்குமான உறவாகக் கண்ட சமத்துவம்,சுதந்திரம்,சகோதரத்துவமாய் ஒளிர்ந்த அவன் கவிதை; பொதுவுடைமையைப் புரிந்து கொள்ள முயன்ற அவன் படைப்பு என்னாளும் சோதிமிக்க நவகவிதை. 

ஜயபேரிகை கவிதை இதோ: 

ஜயபேரிகை  கொட்டடா-கொட்டடா
ஜயபேரிகை  கொட்டடா கொட்டடா 

பயமெனும்  பேய்தனை யடித்தோம்-பொய்மைப்
    பாம்பைப்  பிளந்துயிரைக் குடித்தோம்
வியனுல கனைத்தையும்  அமுதென நுகரும்
    வேத  வாழ்வினைக் கைப் பிடித்தோம் 

இரவியினொளியிடைக்  குளித்தோம்-ஒளி
    இன்னமு  தினையுண்டு களித்தோம்
கரவினில்  வந்துயிர்க் குலத்தினை  யழிக்கும்
    காலன்  நடுநடுங்க விழித்தோம் 

காக்கை குருவி எங்கள் ஜாதி –நீள்
    கடலும்  மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந்  திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
    நோக்க  நோக்கக் களியாட்டம்

Sunday, December 18, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி-16


புனைவும் அறிவும் 

பாரதி படைப்புகளின் தொகுப்பாளர் சீனி.விசுவநாதனின் கால வா¢சைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் ஆறாம் தொகுப்பில் ஒரு கவிதை தென்பட்டது.இந்தக் கவிதை சில பதிப்பகங்கள் வெளியிட்ட பாரதியின் கவிதைத் தொகுப்பில் காணப்படாத கவிதை.இதை ஒட்டி பதிப்பகங்கள் வெளியிட்ட  பாரதி கவிதைத் தொகுப்பை புரட்டிப் பார்த்தால் அந்தக் கவிதை தொகுக்கப்பட்டிருக்கவில்லை.இந்தக் கவிதை மட்டுமல்ல,பாரதி தன் காலத்தில் வெளியிட்ட ,செல்லம்மாள் பாரதி வெளியிட்ட தொகுப்புகளின் பல கவிதைகள் மாற்றி தொகுக்கப்பட்டிருக்கின்றன; தலைப்புகள் திருத்தி வைக்கப் பட்டிருக்கின்றன.பாரதியின் சொந்த கவிதை எது?,மொழிபெயர்ப்புக் கவிதை எது? என்ற தெளிவும் இல்லை 

.இந்த ஆண்டு தமிழக அரசின் வரவு செலவு திட்டக்குறிப்பில்,பாரதியின் கவிதையை இந்திய மொழிகளில் அல்லாது,ஜெர்மன்,பிரெஞ்ச் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.இந்த மொழிபெயர்ப்பிற்கு முன்னால் செய்ய வேண்டிய முதல் பணி,பாரதியின் கவிதைகளை காலப்படி முழுமையாகத்  தொகுக்கப்பட வேண்டும் (பல கவிதைகள் காலப்படி தொகுக்கப்பட்டுள்ளன) தி¡¢த்தல்கள் அற்ற,பிழைகள் நீக்கிய,பாடபேதம் அற்ற,ஒரு முழுதொகுப்பு செம்பதிப்பாக வெளிவர ,தகுந்த குழுவொன்றை அரசுஅமைத்து பணி துவக்கப்பட வேண்டும்.பாரதியின் நூற்று முப்பதாவது பிறந்த நாளை கொண்டாடி விட்டோம்.உதவாதினி ஒரு தாமதம் முழுதொகுப்பு வேண்டும்  என குரல்கள் ஒலிக்க வேண்டும். 

மேல் குறிப்பிடப்பட்டுள்ள தென்படாத அந்தக் கவிதை 1910 மார்ச்சில் கர்மயோகி மாத இதழில் வெளியாகி உள்ளது.சாதாரண வருஷத்து தூமகேது என்ற பெயா¢ல்  ஆன கவிதை.75 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொ¢யுமென்று ஹேலியால் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட பின் தோன்றிய ஹேலி வால் நட்சத்திரம் பற்றிய கவிதை.(தகவல் உதவி பேராசி¡¢யர் மோகனா)ஒரு படைப்பாளி தான் வாழும் காலத்தில் நிகழும் அறிவியல் உலகம்,அதன் கண்டுபிடிப்புகள்,வெளிவரும் புதிய உண்மைகள் குறித்து அறிந்திருப்பது அவசியம்.அதை நேரடியாக படைப்பாக்குகிறோமா இல்லையா என்பது அடுத்த விஷயம்.ஆனால் படைப்பாளியின் இயங்குதளத்தில் ,அவர்களது  சொற்களஞ்சியத்தில் நடப்பு கால சொற்கள் அறியப்பட்டிருந்தால்தான் ஒன்றை எழுதும் பொழுது சொல்ல வரும் கருத்திற்கான சொல் மிளிரும். 
                                   
பாரதி சொற்குறித்த தேடலுக்கும் அப்பால் சென்று இந்த அறிவியல் அறிவு தற்போது நம்மிடையே இல்லையே என வருத்தப்படுகிறான்.ஆதிகாலத்தில் பலவகை கணித சாஸ்திரங்களும்,இயற்கை நூல்களும் பாரத நாட்டில் பிறந்த பின்பு உலகம் முழுவதும் பரவியிருப்பதாக ஆராய்ச்சில் தொ¢கிறது.ஸயின்ஸ் பயிற்சியில் தீவிரமாக மேன்மைப் பெற்று வருகிறோம்.காலகிரமத்தில் மேன்மை பெறுவோம் என்று அவன் லோககுரு கட்டுரையில் எழுதிப் போகிறான்.சிரமத்தை சுமந்து கொண்டு கட்டுரையில் நம்பிக்கை தொ¢வித்தாலும்,இந்தக் கவிதையில் அவன் கவலையை பகிர்ந்து கொள்கிறான்.அன்னியர் சொல்லிதான் இதுபற்றி நாம் அறிய வேண்டி உள்ளது என குமைகிறான். 

இந்த வால் நட்சத்திர வரவால் இந்தியர்களுக்கு புண்ணியம் வரப்போகிறது ;புதுமைகள் விளையப் போகிறது;சித்தியும்,ஞானமும் கூடப்போகிறது என்கிறாகள் இது பொய்யோ அன்றி மெய்யோ என பாரதி அந்த ஹேலி நட்சட்திரத்திடம் கேட்கிறான்.பாரதிகாலத்தில் ஒரு வால் நட்சத்திரம் குறித்த அதன் இயல்பு குறித்த தெளிவு இல்லை என தொ¢கிறது.சூ¡¢யக் குடும்பத்தின் கடைசி உறுப்பினர்தான் இந்த வால் நட்சத்திரம்.சூ¡¢யன் மேற்பரப்பில் படிந்திருந்து வால் போல் நீளும் பனித் திரளின் வரவும் அதன் காட்சியும்,சூ¡¢யனை சுற்றி வருகையில் பூமிக்கு நெருக்கமாகத்  தொ¢யும் அதன் புலப்பாட்டினால் நன்மையோ அன்றி தீ ££மையோ இல்லை  என்று இன்று மெய்பிக்கப்பட்டுள்ளது.போதிய தெளிவு இல்லாத அந்த காலத்தில்,இது குறித்த ஒரு கவிதை இது பற்றி கட்டுரை,இதன் மீதான விசனங்கள்,அன்னியர் சொல்லித்தானா நாம் அறிய இருக்கிறோம் என வெளிப்படும்  தேச நலன் சார்ந்த சிந்தனைதான் இன்றும் பாரதியை காலம் சுமந்து கொண்டிருக்கிறது. 
 
சிறு பனித்துளியில் நின்று ஒளி வீசும் ,பல கோடி யோசனை தொலைவு கொண்டதும்,மென்மையான வாயுவால் வால் கொண்டதுமான  தூமகேதுவே சுடரே வா என அழைத்து உன்னால் நன்மையா,தீமையா என கேட்டுக் கொண்டே போகிறான்.அவன் காலத்தில் கிடைத்த செய்திப்படி நல்ல கவிதை ஒன்றை பாரதி தந்திருக்கிறான்.அந்த காலத்தில் இது பற்றி புனையப்பட்ட பொய்களை வலுவாக மறுக்க வேறு தரவுகளில்லாத பட்சத்தில் இந்த கவிதையிலும் கொஞ்சம் மயக்கம் தொ¢கிறது.ஆனால் புதிய புதிய தரவுகள் ஊடே தன்னை வளர்க்கத் தவறாதவன் பாரதி.இனி கவிதை: 

தினையின் மீது  பனை நின் றாங்கு

மணிச்சிறு மீன்மிசை வளர்வா லொளிதரக்

கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகுந்

தூமக் கேது சுடரே வாராய்


எண்னில்பல கோடி யோசனை யெல்லை

எண்ணிலா மென்மை யியன்றதோர் வாயுவாற்

புனைந்தநி¢ன் நெடுவால் போவதென் கின்றார்

மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க் கேது மிடர்செயா தேநீ
போதியென் கின்றார் புதுமைக ளாயிரம்
நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் ரனரால்

பாரத நாட்டிற் பரவிய எம்மனோர்

நூற்கண மறந்துபன் நூறாண் டாயின
உனதியல் அன்னிய ருரைத்திடக் கேட்டே
தொ¢ந்தனம் எம்முள்ளே தெளிந்தவ ¡£ங்கில்லை
வாராய் சுடரே வார்த்தைசில கேட்பேன்
தீயார்க் கெல்லாந் தீமைகள் விளைத்துத்

தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்துநீ

போவையென் கின்றார்;பொய்யோ மெய்யோ?

ஆதித் தலைவி யாணையின் படிநீ

சலித்திடுந் தன்மையால் தண்டநீ செய்வது

புவியினைப் புனிதமாப் புறிதற் கேயென

விளம்புகின் ரனரது மெய்யோ பொய்யோ?

ஆண்டோ ரெழுபத் தைந்தினி லொருமுறை

மண்ணைநீ£ யணுகும் வழக்கினை யாயினும்;

இம்முறை வரவினால் எண்னிலாப் புதுமைகள்

விளையுமென் கின்றார் மெய்யோ பொய்யோ?


சித்திகள் பலவுஞ் சிறந்திடு ஞானமும்

மீட்டுமெம் மிடைநின் வரவினால் விளைவ்தாப்

புகலுகின் றனரது பொய்யோ மெய்யோ?

Wednesday, December 14, 2011

தனிமை அல்லாத தனிமை

நெருக்கமான ஒருவர்
மனதிற்கு நெருக்கமானவரும் கூட.
இவரைத் தாண்டி செல்வது எப்படி?

அவரோடு சண்டை கூடாது
 விலகவும் வேண்டும்
விலகாமலும் இருக்க வேண்டும்

எளிய வழி
 பேசாமல் இருப்பது

தனிமைப்படுத்துவது.போல்
அல்லாமல்
தனிமைப்படுத்துவது
விலகாமல் போல் விலகுவது.



அலைஓசை

மனக்கரையில்
ஒலித்துக் கொண்டே
இருக்கிறது
தீராத
அலைஓசை

சென்னை சர்வதேசத் திரைப்படவிழா



மார்கழி மாதத்து சென்னையில் இதமான பனி பொழியும்.இசையால் சபாக்கள் நிரம்பி வழியும்.திருப்பாவை திருவெம்பாவை பாடி கூட்டம் சூழ வலம் வரும்.புத்தகத் திருவிழாவை ஒட்டி புத்தக வெளியீடுகள் நடைபெறும்.நவீன அச்சகங்கள் ஓயாது ஓடிக் கொண்டிருக்கும்.20ஆண்டுகளாய் தொடரும் த.மு.எ.க.ச கலைஇரவைத் தொடர்ந்து சில ஆண்டுகளாய் சென்னைசங்கமம் இப்போது சர்வதேச திரைப் படவிழா எனப் புதியப் புதிய அழகோடு சென்னை மிளிர்கிறது.


டிசம்பர் பதினைந்து  தொடங்கி இருபத்து மூன்று வரை எட்டாவது சர்வதேசத் திரைப்படவிழா(2010) நடைப்பெற்று முடிந்திருக்கிறது.குறுந்தகட்டு யுகத்தில் உலகப்பட விழாவைப் பார்க்க கூட்டம் வருமா?நெறித்த புருவங்கள் ஆச்சரியத்தால் உயர்ந்து நிற்கின்றன. 
ஒன்பது நாட்கள்,நான்கு திரையரங்குகள்,நூற்று எண்பது காட்சிகள்,நூற்று ஐம்பது படங்கள்,இருபதாயிரம் ஆர்வலர்கள்,என நடைபெற்று முடிந்திருக்கிறது.திரைக் கலைஞர்கள்,மாற்றுத் திரைப்பட ஆர்வலர்கள்,ஊடக மாணவர்கள் நாளைய இயக்குநர்கள்,சொற்பமாய் எழுத்தாளர்கள் என திரையரங்குகளில் இருந்த இதமான சூழல் மகிழ்வூட்டியது.

பல்வேறுத் தலைப்புகளில் விவாத அரங்கம்,செய்திமடல்,அதிகத் திரைப்படம் பார்த்தோருக்கான பஃப் (buff)விருது,சிறப்பு மலர்,சிறந்த தமிழ்ப் படம்,இயக்குநர்,தயாரிப்பாளர்,சிறப்புக் கலைஞர்களுக்கான சிறப்பு விருது,சிவப்புக் கம்பளக் காட்சி என பல விதங்களில் பங்கேற்பாளர்களை கவர்ந்தது இவ்விழா.

சீனா,தென்மார்க்,ஜெர்மனி,கொரியா,கிரீஸ்,வெனிசூலாவிலிருந்து,படைப்பாளிகள் பங்கேற்றனர்.இந்தியாவிலிருந்து அபர்ணாசென் கிரீஸ்காசரவள்ளி,சஞ்சய் நாக்,பிஜு,மோகன் என கலந்து கொண்டனர்.பாலுமகேந்திரா,பாலசந்தர்,சாருஹாசன்,மணிரத்னம்,சங்கர் அர்ச்சனா,விக்ரம்,பி.லெனின்.சரத்குமார்,மிஸ்கின்,வசந்தபாலன்,பிரபுசாலமன்,சிம்புதேவன்,பாஸ்கர்சக்தி என தமிழ்ப் படைப் பாளிகள் பங்கேற்றனர்.எம்.சிவகுமார்,டி.லட்சுமணன்,இரா.தெ.முத்து,ச.விசயலட்சுமி,பால்வண்ணம்,போன்ற நம்மவர்களும் கலந்து கொண்டனர். 
சிறந்த தமிழ்ப்  படமாக வசந்தபாலனின் அங்காடித்தெரு,சிறந்த இயக்குநராக பிரபுசாலமன்,சிறந்த கலைஞராக பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.களவாணி  இரண்டாவது சிறந்த படமாக தேர்வு செய்யப் பட்டது.தயாரிப்பாளர்களுக்கும் தலா ஒரு லட்சம் பரிசளிக்கப்பட்டது.

இந்த ஒன்பது நாட்களில் எம்மால் பதினாறு  படங்களைப் பார்க்க முடிந்தது.பதினாறையும் செம்மலரில் எழுத இயலாது.பாதித்த சிலபடங்களை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம். 
ஆஸ்திரேலிய பெண் இயக்குநர் ஜீலி பெர்ட்டுசீலியின் தி ட்ரீ ,உணர்ந்து புரிந்து கொண்ட அப்பாவின் இழப்பால் துயருறும் குழந்தைகளின் மனவுலகிற்க்கு அப்பாற்பட்டு பெரியவர்கள் யோசிப்பதும் ,குழந்தைகளைக் கலக்காமல் எடுக்கப் படும் முடிவுகள் குடும்பத்தை பாதுகாக்க இயலாது என்பதை சிறுமி சீமோனுக்கும் முற்றத்து மரத்திற்குமான பிணைப்பாக உருவகப் படுத்தியக் கதை ஆஸ்திரேலிய உட்புற கிராமமொன்றை களனாகக் கொண்டது.

குடிப்பழக்கத்தால் வேலை இழந்த அமர் இஸ்லாமிய வகாப் அமைப்பில் பணிக்கு சேர, அவனைப் பார்க்கப் போகும் இளம்மனைவி லூனா அவ்வமைப்பில் நிலவும் ஆண் சார் சுதந்திரம்,மூடப்பழக்கங்கள்,பெண்ணுக்கு எதிரான கொள்கைகளை காணச் சகியாமல் அமரை அழைத்துக் கொண்டு ஊர் போய் சேர்கிறாள்.ஊர் வந்த கணவனிடம் மத சார் பழமைவாதங்கள் படிந்திருப்பதையும் தனது மென்னுணர்வுகள் புறக்கணிக்கப்படுவதையும் பொறுத்து பொறுத்துப் பார்த்த லூனா இனிமேல் சேர்ந்து வாழ இயலாது என முடிவெடுத்து வறண்ட முத்தமொன்றை அவன் உதட்டில் வைத்து விட்டு குட்பை சொல்லி  கிளம்புகிற ஆன் தி பாத் கதையை உணர்ச்சி மேலோங்கிடஇயக்கி இருக்கிறார் போஸ்னியா நாட்டு ஜஸ்மில்லா சபானிக் என்ற  பெண் இயக்குநர்.லூனாவாக  சிருங்கா சிவிடெசிக்கின் தோற்றமும் நடிப்பும் அருமை.

தனது அறுபதாவது  வயதில் படமெடுக்கத் தொடங்கிய இரானிய இயக்குநர் அப்பாஸ்  கியாதோஸ்மியின் சர்டிஃபைட் காப்பி,திருமண ஒப்பந்தம்  காகிதத்தில் இருப்பதையும் ,காதலும் அன்பும் பிரிட்டிஸ் எழுத்தாளரோடு கிளைத்திருப்பதை உணரும் பிரான்ஸ் பெண்ணிற்குமான கதை பெண் நோக்கில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. பிடிக்காத இத்தாலிய கணவனோடு ஏன் சேர்ந்து வாழ வேண்டும்?குடியுரிமை பாதுகாப்பிற்காக இருக்குமோ?கதைக்கு இப்பாலும் அப்பாலுமான யோசிப்பு.இது பிரான்ஸ் படம்.

சிசிலியன் கிராமத்தில்  கிரிமினல் கும்பலால் கொல்லப்பட்ட  தனது அப்பா,அண்ணனின் கொலையையும் தொடரும் கிரிமினல் கும்பலின்  நடவடிக்கைகளையும் நேர் சாட்சியாகப்  பார்த்து அவ்வப்போது டயரியில் குறித்து வருகிற பனிரெண்டு  வயது ரீத்தா பதினெட்டாவது வயதில் கொலையை செய்தவர்களுக்கு தண்டனை வாங்கித்தர டயரிக் குறிப்புகளோடு நீதிமன்றம் போகிறார்.வழக்கு குற்றவாளிகளை நெருங்கும் நேரத்தில் நீதிபதி கொல்லப்படுகிறார்.அரசியல் செல்வாக்கு  மிக்க கிரிமினல் கும்பலால் பின்னடையும் வழக்கை தீவிரமாக்க ரீத்தா கடைசியாக நகரின் மையமான விடுதிக் கட்டிடம் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள ஊடகம்,பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இந்த மரணத்தால் வெடித்த பொது மக்களின் போராட்டம் குற்றவாளிகளூக்கு தண்டனை வாங்கித் தருகிற இத்தாலியின் உண்மைக் கதையை துள்ளத் துடிக்க நாற்பது வயதான இயக்குநர் மார்கோ அமெண்டா தந்திருக்கிறார்.

பகலில் கூலி வேலைகளை செய்து கொண்டு இரவில் ஒண்டுகிற அழுக்கடைந்த,காற்று வராத நெருக்கடி மிகுந்த  பார்சிலோனா நகரின் குடியிருப்புகளில் வாழ நேர்ந்த செனகல்,பாகிஸ்தான்,இந்தோனேசிய,ருமேனிய எளிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளை ,ரணத்தை,காதலை,மனித நேயத்தை எந்த ஒப்பனையுமின்றி அனுபவப் பகிர்வாக புகழ் பெற்ற ஸ்பானிய இயக்குநர் அலஜாண்ட்ரோ இன்னாரிட்டு காட்சிபடுத்தி இருக்கின்ற பியூட்டிஃபுல் கேன்ஸ்படவிழாவில் கவனத்தை ஈர்த்தது போலவே  சென்னைப் படவிழாவிலும் ஈர்த்தது:வலியைத் தந்தது. 
சீனாவையும் வடகொரியாவையும் பிரிக்கின்ற டியூமன்நதி ,பனிக்காலங்களில் உறையும் பொழுது சீனாவை நோக்கி இடம் பெயர்கின்ற வடகொரியர்களின் சிரமங்களையும் அவர்களின் மனப்பிறழ்வுகளையும் காட்டுவதினூடாக வடகொரியாவின் அரசியல் ,பொருளாதாரத்தை படமெங்கும் எதிர்நிலையில் காட்சி படுத்துகிற தென்கொரியாவின் டோமன் ரிவர் படத்தையும் பார்க்க முடிந்தது.இதன் இயக்குநர் சீனாவைச் சேர்ந்த லூ சாங்.

இந்தியப் படப்பிரிவில் கடைசி நாளன்று பார்த்தே தீர்வதென்று அபர்ணாசென்னின் இதி மிருனாளினியைப் பார்த்தேன்.நடிப்பிற்கான ஊர்வசிப் பட்டத்தை பெறக்காரணமான இயக்குநரோடு ரகசியத் திருமணம் செய்து கொண்டு ,ஒருக் குழந்தைக்குத் தாயாகி பின் வந்த முரண்பாட்டில் இயக்குநரை நடிகை மிருனாளினி பிரிய,நடுத்தரவயது காலத்தில் இளவயது நடிகரோடு ஏற்படும் பழக்கம் காதலாகி,அந்தக் காதல் நழுவிப் போக தற்கொலைக்கு முயலும் தருணத்தில் ,முன்னர் பழக நேர்ந்த எழுத்தாளர் சிந்தனின் கடிதத்தினூடாக உடல்சார் உறவுக்கு அப்பாற்பட்ட நேசமும் காதல் போல மரியாதைக்குரியதுதான் என்ற பொறி தட்டுதலில் தற்கொலையிலிருந்து மீண்டு வாழத் தொடங்குகிறார் மிருனாளினி என்பதானக் கதை மனசை உலுக்கியது.நடிகையாக அபர்னாசென் வாழ்ந்திருந்தார்.

இந்தப் படங்களினூடாக நமது படங்களை வைத்துப் பார்க்கையில் நமது பலவீனம் தெரிகின்றது.மாறி வருகின்ற தமிழ் சினிமாவின் மொழியும் விசாலமும் புரிகின்றது.எனினும் திரைக்கதைக்கு சம்மந்தமில்லாத எந்தத் திணிப்பையும் உலகப்படத்தில் பார்க்க முடிவதில்லை.கதைசார் களங்கள்,இயற்கை வெளிச்சத்தில் படமாக்கும் நேர்த்தி,கூடுதல் பொருள் தருகின்ற இயற்கை சார் நிலக்காட்சிகள்,ஒளிவண்ணம்,இசை என நம் ரசனை, பார்வை ,அழகியல் புதிய உயரத்தை தொட இப்படவிழா உதவியது.

வரும் ஆண்டுகளில் மாற்று சினிமா குறித்த சரியான பார்வை கொண்ட திரைக்கலைஞர்கள்,இயக்குநர்கள்,திரைஆய்வாளர்கள் ,எழுத்தாளர்கள் விழாக்குழுவில் இணைக்கப்பட்டு புதியப் புதிய திரளினர் பங்கேற்கவும் கூடுதல் வெற்றி பெறவும் தமிழக அரசும்,இந்திய சினிமா ரசனையாளர் அமைப்பும் திட்டமிட வேண்டும். 

Sunday, December 11, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி 15




காலத்தின் திசைக்குரல் 

 புதிய  உலகம் புதிய இந்தியாவை  உருவாக்கும் தொழில்,தொழிலாளர்கள்,அறிவாளர்கள்,கலைஞர்கள் குறித்து ”தொழில்” எனும் தலைப்பிலான பாரதியின் கவிதை இது: 

இரும்பைக் காய்ச்சி உருக்குடு வீரே
   யந்திரங்கள்  வகுத்திடு வீரே
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
   கடலில்  மூழ்கிநன் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
   ஆயி  ரந்தொழில் செய்திடுவீரே
பெரும்பு  கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
   பிரம தேவன் கலையிங்கு நீரே 

மண்ணெடுத்துக் குடங்கள்செய் வீரே
   மரத்தை  வெட்டி மனைசெய்கு வீரே
உண்ணக் காய்கனி  தந்திடு வீரே
    உழுது  நன்செய்ப் பயிரிடு வீரே
எண்ணெய் பால்நெய் கொணர்ந்திடு வீரே
    இழையை  நூற்றுநல் லாடைசெய் வீரே
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்
    மேவிப்  பார்மிசைக் காப்பவர் நீரே 

பாட்டும்  செய்யுளும் கோத்திடு வீரே
   பரத  நாட்டியக் கூத்திடு வீரே
காட்டும்  வையப் பொருள்களின் உண்மை
   கண்டு  சாத்திரம் சேர்த்திடு வீரே
நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே
   நாடும்  இன்பங்கள் ஊட்டிவைப் பீரே
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
   தெய்வமாக  விளங்குவிர் நீரே 

பாரதியின் காலம் இந்தியாவில் எந்திரசாலைகள்,நவீன அச்சுக்கூடங்கள், உருவான காலம்.பாரம்பர்யத் தொழிகள் பலவும் மின்மயமான காலம்.மூலதனம் போட்டு தொழில் செய்யும் முதலாளிகள் உருவான காலம்.தொழிலாளி முதலாளி முரண் உருவான காலம்.இதன் ஊடாய் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளி வந்த காலம்.ஒரு கலை இலக்கிய ஆளுமை இவைகளை எதுவும் காணாமல் ,காலத்தின் திசை அறியாமல் வெறுமனே படைப்புகள் செய்வதனால் அந்த படைப்பில் காலம் இருக்காது;உண்மை இருக்காது;நவீனக்குரல் இருக்காது;நவீனமொழி இருக்காது.பாரதி காலத்தின் குரலை ஒலித்தான். 

முதல் பகுதியில்  தொழிலாளர்களைப் பற்றி,அடுத்தப் பகுதியில் கைவினைஞர்கள்,விவசாயிகள் பற்றி இறுதியில் கவிஞர்கள்,நாட்டியர்கள்,அறிவாளிகள் பற்றி சொல்லி அவர்களை விழியெதிர் காணும் கடவுள்கள் என்றும்,உலகத்தை காப்பவர்கள் என்றும் படைப்பில் ஈடுபட்டுள்ள பிரம்மர்கள் என்றும் சொல்லி அற்புதமாகப் பாடுகிறான் இப்படி :
”பெரும் புகழ் உமக்கே இசைக்கின்றேன்” 

சமூக இயக்கத்திற்குத்  தேவையான உற்பத்தியில் ஈடுபடுகிற  சக்திகளை, அவர்களை நிரல்  படுத்தும் முறையில் முதலாவது பாட்டாளிகளை முன் வைக்கிறான்.இந்த இடத்தில் பாரதி தன் தொழிலாளர்  கட்டுரையில் பதிந்ததை இங்கு பதிவது பொருத்தம்.”ஆதிகாலம் முதல் அறிவுப் பயிற்சி உடைய வகுப்பினர் கைத்தொழிலாளிக்கு கல்வி ஏற்படாதபடியாக வேலை செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்.எழுத்து தெரிந்த சூத்திரனை மிகவும் தொலைவில் விலக்கிவிட வேண்டும் என்ற வினோத விதியொன்று மனுஸ்ருதியில் காணப்படுகிறது.நம்முடைய தேசத்தில் மட்டுமேயன்று;உலக முழுமையிலும் எல்லா நாடுகளிலும். கைத்தொழிலாளருக்கு கல்வி பயிற்சி உண்டாகாத வண்ணமாகவே ஜனக்கட்டுகள் நடைபெற்று வந்திருக்கின்றன.” 

அறிவுடைய  சூத்திரர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை
  உற்பத்தியின் பக்கத்தில் என்பதாக ,தலைமைத்துவத்தின் பக்கத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த மானுட விரோத மனுசாத்திர விதிகளை புறக்கணிக்கும் பாரதி ,உலகம் முழுவதும் பாட்டாளிகளை நம் இந்திய புரிதலில் வர்க்கமாகவும் சாதியாகவும் உள்ள சூத்திரர்களை புறக்கணிப்பதை புரிந்து கொண்டு அவர்களை தன் கவிதையில் முன்னிலைப் படுத்துகிறான். 

அவர்களோடு உடன்வர வேண்டிய அடுத்த வர்க்கமான  கைவினைஞர்கள்,விவசாயிகள்,கலைஞர்கள்,படைபாளர்கள் பற்றி பாடுகிறான்.அதுவும் பெரும் புகழ் உமக்கே இசைக்கிறேன் என்று பாடுகிறான்.இந்த வரிசைப்படுத்துதலில் சரியான வர்க்க நோக்கு வெளிப்படுகிறது.இந்த வர்க்க நோக்கை இந்திய இடதுசாரிகள் மட்டுமன்று உலக முழுவதுமுள்ள இடதுசாரிகள்,கம்யூனிஸ்டுகள் நடைமுறைபடுத்தும் உத்தியும் ஆகும்.பாரதிக்கு இந்த பார்வை அவன் வாசிப்பினூடாக,சோவியத் தொடங்கி உலகம் முழுவதும் நடைபெற்ற இந்தியா,சென்னை வரை நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களை கற்று உணர்ந்ததலினால் வந்த பார்வை ஆகும்.  

கவிதையின் முடிப்பில் இந்த கூட்டணியை தொழிலாளர் வர்க்க கூட்டிணைவை நாட்டிலே அறம் தழைக்க வைப்பவர்கள் என்றும்,
இன்பத்தை  விளைவிப்பவர்கள் என்றும்  பாடியுள்ளமை அவனின் சரியான அரசியல் நிலைபாடு. 

இந்த 21 ஆம்  நூற்றாண்டில் இயங்கும் பல படைப்பாளிகள் உலகமயம்,தாராளமயம்,வால் ஸ்டிரிட்டை கைப்பற்றும் இயக்கம்,உலக இந்திய அளவிலான தொழிலாளர் எதிர்ப்பு இயக்கம் என எதையும் உள்வாங்காது காமம் என்றும் வெற்று இனவாதம் என்றும் பேசி எழுதி குப்பியில் குழம்பிக் கிடக்கிற இவர்களைப் பார்த்து பகடி செய்கிறான் பாரதி.

(2011 டிசம்பர் 12 தீக்கதிர் இலக்கியச் சோலையில் பிரசுரமானது)