Sunday, October 17, 2010

எளிய மக்களின் சினிமா

 2009 ல் வெளிவந்த 170 தமிழ்த் திரைப்படங்களில் பேராண்மை,பசங்க,வெண்ணிலா கபடிக் குழுவை ஒரே நிலையிலான சிறந்த படங்களாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேர்ந்தெடுத்துள்ளது.இதன் படைப்பாளிகளான எஸ்.பி ஜனநாதன்,பாண்டிராஜ்,சுசீந்திரன் இளைய வயதைச் சார்ந்தவர்கள்.
                        இவர்கள் கதைக்கு நியாயம் செய்தவர்கள்;கதை இல்லாமல் ஹீரோவிற்க்காக அஷ்டாவதானம் செய்ய பிரியப்டாதவர்கள்.கதையைப் புறக்கணித்து ஹீரோவின் பின்னால் சென்ற இயக்குநர்களை,தயாரிப்பாளர்களை ஏன் ஹீரோக்களையே இன்று தேட வேண்டி உள்ளது.
                           த,முஎ.க.ச விருதுக்குரிய படங்கள் மக்களால் கொண்டாடப்பட்ட புதிய முயற்சிகள்;வியாபாரரீதியாகவும் கலைரீதியாகவும் வெற்றி பெற்ற முயற்சிகள்.nativity எனச் சொல்லப்படுகின்ற மண் சார்ந்த மக்கள் சார்ந்த  படங்கள்.
                         எளிய,மத்தியத்தர,ஒடுக்கப்பட்ட மனிதர்களே கதாநாயகர்களாக இதில் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.பொதுப்புத்தியில் உறையாத,கவனம் பெறாத இம்மனிதர்கள் மீது சமூகத்தின் அன்பை,நேசத்தை,கனிவைக் கோரும் படங்கள் இவைகள்.
                       உலகப்படங்கள் என்பது சொந்த மண்ணை பார்க்க மறுப்பது அல்ல.தமிழகத்தின் பலதரப்பட்ட,வர்க்க முரண்பட்ட மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் சித்திரிப்பதே உலகப்படமாக பரிமாணம் பெறும்.ஈரான் மஜீத் மஜீதின் படங்கள் இதற்கான பெறும் அடையாளம்.
                    நமது பேராண்மை நார்வே படவிழாவில் பாராட்டப்பட்டது.பசங்க சீனப்படவிழாவில் பாராட்டப்பட்டுள்ளது.பல உலகப்படவிழாவில் அங்காடித்தெரு பங்கேற்றுள்ளது.ரஹ்மான் 2 ஆஸ்கர் விருது வென்றதும் மும்பையின் கவனிக்கப்படாத அடித்தட்டு மக்கள் பற்றிய கதை சார்ந்த இசைக்கே கிடைத்தது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
                  இந்த புதிய அலையை வசந்தகீற்றுகளை தமிழ்மக்கள் வறவேற்றுள்ளார்கள் ;வறவேற்ப்பார்கள்.தொடர்ந்து இந்தப் பாதையில் நம் இயக்குநர்கள் முன்னேறவேண்டும்.முரண்பட்ட ,பிளவுபட்ட  சமூகத்தின் எளிய மக்களுக்கான கலைத்தேடலை ரசனைத்தேடலை பூர்த்தி செய்வதாக நம் திரைப்படைப்பாளிகள் முன்னேற வேண்டும்.
                  யாருக்காக படம் எடுக்கிறோம் என்பது முக்கியமானது.எல்லோருக்கும் மொத்தமாக படம் காட்ட முடியாது;அவ்வாறு காட்டப்படும் படங்கள் மக்கள் பண்பாட்டுக்கு விரோதமான எந்திரன் பாணி படங்களாகவே அமைகின்றன.
                  இந்த எந்திரன் மாதிரிப் பாதையில்,புதைகுழிச்சேற்றில் தயாரிப்பாளர்கள் பயணப்படவேண்டாம்.எளிய மக்களின் கலாதேவைக்கு சினிமா தீபத்தை ஏந்தி  திரைப்படைப்பாளிகள் முன் செல்ல வேண்டும்.  

அதிகார மையமும் படைப்பாளிகளும்



சில வாரங்களுக்கு முன்பான ஆனந்தவிகடனில் (2010 அக்டோபர்)அதிகார மையத்தை கேள்விக்குள்ளாக்கும் படைப்பாளிகள் தமிழில் இல்லை என கவிஞர் இளம்பிறை சொல்லி இருந்தார்.நான் அவரிடம் பேசும் போது அவ்வாறான ஆளுமைகள் நம்மிலும் உண்டு;அவர்களுக்கான அறிமுகம்தான் பரவலாக இல்லை என சொன்னேன்.

அதே நேரம் இளம்பிறை சொன்னதில் ஓர் அர்த்தம் உண்டு.வாழும் காலத்தில் பல ஆளுமைகள்,படைப்பாளிகள் அநீதிக்கெதிராக சிறு முனகலும் இல்லாமல் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள்.அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமென நடைபெற்ற  நீள 60 ஆண்டு வழக்கில் வந்தது தீர்ப்பல்ல;கட்டைப் பஞ்சாயத்து
முடிவென  உலக்குச் சொல்ல இவர்களுக்கு தடையாய் இருப்பது எது?

கவிப்பேரரசு,கவிக்கோ,கவிச்சக்ரவர்த்தி என அடைமொழி கொண்டவர்களோ அல்லது ஊடகத்தில் முகவரி பெற்றவர்களோ எந்த எதிர்ப்பும் சொல்லாமல் கழுவும் மீனில் நழுவும் மீனென இருந்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் தந்த பட்டமெனில் வதைபடும் மக்களுக்காக பேசியிருப்பார்கள்.இது அதிகார கூட்டத்தால் வந்த பட்டமாச்சே?ஜல்லி அடிக்கத்தான் செய்வார்கள்.வரலாற்றில் கம்பர் நிற்க்கிறார்;ஒட்டகூத்தன்?கம்பர் சோழ ஆதிக்கத்தை எதிர்த்தவர்;கூத்தரோ ஜல்லி அடித்துக் கொண்டிருந்தவர் .மக்களின் ஞாபகக்  கிடங்கு தேவயானவற்றை ஒரு போதும் மறக்காது.